மருமகள்கள் சித்திரவதையிலிருந்து மாமியார்களைக் காக்க ஒரு சங்கம்

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 20, 2009. செய்தி: தட்ஸ்தமிழ்

ஹைதராபாத்: மருமகள்கள் சித்திரவதையிலிரு்நது தங்களைக் காத்துக் கொள்வதற்காக ஆந்திராவில் மாமியார்கள் சேர்ந்து தனிச் சங்கம் கண்டுள்ளனர்.

வரதட்சணைக் கொடுமை வழக்குகளில் முதலில் சிக்குவது கணவன்மார்கள்தான். அதற்கு அடுத்த டார்கெட் மாமியார்கள்.

ஆனால் வரதட்சணைக் கொடுமை சட்டத்தை பல பெண்கள் தவறாகப் பயன்படுத்தி கணவர்களையும், மாமியார்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சிறையில் தள்ளி விடுவதாக சமீப காலமாக புகார்கள் வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் சங்கம் தொடங்கப்பட்டது. மாநாடு கூட நடத்தினர்.

இந்த நிலையில் ஆந்திராவில் மாமியார்கள் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து சங்கத்தின் அமைப்பாளர்களான பத்மஜா, உமா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சமீபகாலமாக மருமகள்களால் ஏராளமான மாமியார்கள் வீடுகளில் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். பல மாமியார்களுக்கு சரியான நேரத்திற்கு உணவு கூட கிடைப்பதில்லை.

மருமகள்கள் பலர் மாமியாரை கடுமையாக சித்ரவதை செய்து விட்டு போலீசில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் சிக்க வைத்து வருகிறார்கள்.

இந்த கொடுமைகளுக் கெல்லாம் முடிவு கட்டத்தான் நாங்கள் மாமியார் பாதுகாப்புச்சங்கத்தை தொடங்கி உள்ளோம்.

தற்போது 30 பேர் உறுப்பினர்களாகி உள்ளனர். விரைவில் ஆயிரம் பேர் வரை உறுப்பினராக சேர்க்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

தங்களது பிரச்சினைகள் உள்ளிட்டவை தொடர்பாக மாமியார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் இந்த சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அவை - 9704683163, 9573605415

===========

விரைவிலேயே இச்சங்கத்தின் கிளை தமிழ் நாட்டிலும் துவக்கப்பட இருக்கிறது. அது பற்றிய அறிவிப்பை எதிர்பாருங்கள்!