மாமியார்கள் படும் பாடு!

'பெண்ணின வரலாற்றில் முதல் முறையாக' என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்...


சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள 'அனைத்திந்திய மாமியார்கள் பாதுகாப்பு சங்கம் (ஆல் இண்டியா மதர்-இன்-லா புரொடக்ஷன் ஃபோரம்)' பற்றி!

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு உதயமாகியிருக்கிறது இந்தப் புதிய அமைப்பு! நான்கு பேருடன் துவங்கப் பட்ட இந்தச் சங்கத்தில் ஒரே வாரத்தில் ஐம்பது உறுப்பினர்கள் சரசரவென வந்து சேர, நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது அதன் வளர்ச்சி! தமிழ்நாடு, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் கிளைகளைத் துவங்கி யிருக்கும் இந்தச் சங்கத்தை டெல்லி, மும்பை, நாக்பூர் ஆகிய இடங்களிலும் விரிவுபடுத்தும் பணிகளும் ஜரூர்!

சங்கத்தின் நோக்கம் என்ன?

'பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வழிசெய்யும் நாற்பத்து நான்கு வகை இந்திய சட்டங்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் கணவர், மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தனார் ஆகியோர் மீதெல்லாம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகிறது. கணவன், மனைவி சண்டையில், 'உன் குடும்பத்தையே கோர்ட்டுக்கு இழுக்கறேன் பார்!' என்று ஒரு பாவமும் அறியாதவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த, இந்தச் சட்டத்தை பல மருமகள்களும் துருப்புச் சீட்டாக்கிக் கொள்கின்றனர். இதிலிருந்தெல்லாம் சட்டரீதியாகவோ, மனிதாபிமான அடிப்படையிலோ மாமியார்களும் அவரைச் சார்ந்தவர்களும் தங்களை காத்துக் கொள்ள உதவுவதற்காகவே இந்தச் சங்கம்'' என்கிறார்கள் இதன் உறுப்பினர்கள். இவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை பதினோரு மணிக்கு பெங்களூரு, கப்பன் பார்க்கில் சங்கக் கூட்டத்தை நடத்துகின்றனர்.

சங்கத்தின் நிறுவனர்களுள் ஒருவரான மமதா நாயக், ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவர். இப்போது பெங்களூருவில் பணியாற்றும் அவரை, சொந்த சோகங்களே சங்கத்தில் சேர வைத்திருக்கிறது!

சங்க நிறுவனர்களில் மற்றொருவரான நீனா தூலியா, கோபமும் கொந்தளிப்புமாக அவர்களின் வாதங்களையும் நியாயங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

''மாமியார் கொடுமைங்கறது, காலம் காலமா மக்களோட மனசுல பதிஞ்சு போய் கிடக்கற ஒரு 'மித்'... அவ்வளவுதான்! அந்தக் காலத்துல இருந்திருக்கலாம். இப்போ இந்தச் சமூகம் ரொம்பவே மாறியிருக்கு. நாங்க மட்டும் மாறாம இருப்போமா என்ன? ஆனா, மாமியார் ஜாதியை ஏதோ வில்லி மாதிரி பார்க்கற மக்களோட மனோபாவம் மட்டும் இன்னும் மாறாம இருக்கறது, வேதனைக்குரிய விஷயம். டி.வி. சீரியல்கள்லகூட மாமியார்களை கொடுமைக்காரங்களாவேதான் காட்டுறாங்க.

இன்னொரு பக்கம், இதையே சாதகமா எடுத்துக்கற சில சாமர்த்திய மருமகள்கள், வீட்டுப் பிரச்னையை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுபோகும்போது, கேஸ் அவங்க பக்கம் ஸ்ட்ராங்கா இருக்கணும்கறதுக்காக மாமியார், மாமனார் உட்பட புகுந்த வீட்டுல இருக்கு எல்லார் மேலயும், இருக்கிற எல்லா பிரிவுலயும் புகார் கொடுத்துடறாங்க. போலீஸும், விசாரணை கூட இல்லாம உடனே கைது செய்யறாங்க. 'நாங்க அப்பாவிங்க'னு அவங்ககிட்ட நிலைமையை எடுத்துச் சொன்னாகூட, 'சட்டம் என்ன சொல்லுதோ, அதைத்தான் செய்யு முடியும்'னு ஒரு வரியில பதில் கொடுக்கறாங்க.

இப்படி ஒரு தரப்புக்கு மட்டும் சாதகமா இருக்கற சட்டங்கள், காலத்துக்கு ஏற்றபடி மாற்றி அமைக்கப்படணும். ஓய்வெடுக்க வேண்டிய வயசுல இருக்கற எத்தனையோ மாமனார், மாமியார்களை இந்த சட்டங்கள்தான் இப்போ கோர்ட், கேஸுனு சீரழிய விட்டிட்டிருக்கு.

அமைப்பின் சென்னை பொறுப்பாளரான மனோஜ் குறிப்பிட்ட அந்த வழக்கு விஷயம், நமக்குள்ளும் கேள்வியை எழுப்பியது! ''இன்ஷுரன்ஸ் செஞ்சிருக்கற ஒரு மாமனார், ஏதாவது விபத்துல இறந்துட்டா கிடைக்கற தொகையில முக்கால் பங்கு மருமகளுக்கும், கால் பங்கு மனைவிக்கும் கொடுக்கப்படணும்னு உச்ச நீதிமன்றம் ஒரு வழக்குல தீர்ப்பு சொல்லியிருக்கு! இதுல இருக்கற நியாயம் என்னனு எனக்குத் தெரியல. தன் கணவனுக்காக காலம் முழுக்க வாழற மனைவி, அவரோட இன்ஷுரன்ஸ் பணத்தை வாங்கக்கூட தகுதியில்லாதவளா போயிட்டாளா? வீட்டுலதான் மாமியார் வர்க்கத்துக்கு மரியாதை இல்லாமப் போச்சுனா, நாட்டுலயும் எங்களை அவமதிக்கறதை என்னனு சொல்றது?!'' என்று வேதனைக் கேள்வி எழுப்பியவர், தொடர்ந்தார்...

''மாமியாரை தாய் மாதிரி பார்த்துக்கற மருமகள்கள் இருக்காங்கங்கறதையும் நாங்க ஏத்துக்கறோம், அவங்களைப் பார்த்து நாங்க ஏங்கறோம்! அதேசமயம், கொடுமைக்கார மாமியார்கள் சிலருக்காக வெட்கப்படறோம்!

பெண்களை காக்கும் சட்டங்களை நாங்கள் குற்றம் சொல்லலை. அது தவறா பயன்படுத்தப்படக் கூடாதுங்கறதுதான் எங்க அமைப்போட வேண்டுகோள்.

எங்க அமைப்பு சார்பா சென்னை, செனாய் நகர் திரு.வி.க. பூங்காவுல ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை அஞ்சுல இருந்து எட்டு மணிவரைக்கும் மீட்டிங் நடத்தறோம். பாதிக்கப்பட்டவங்க யார் வேணும்னாலும் எங்களை அணுகி வழிகாட்டுதலை பெறலாம்!'' என்கிறார்.

இந்தச் சங்கத்துக்கு இதுவரை எந்த ஆட்சேபனைகளும் எழவில்லை என்பது, டெய்ல் பீஸ்!

தொடர்புக்கு:

செல்ஃபோன்: 98862 50907, 98403 24551.
இணைய தளம்: http://www.aimpf.org/
=====================

செய்தி: அவள் விகடன்