தெய்வத்தாய்

கணவருடன் ஏற்பட்ட தகராறில் 1 வயது குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது

குன்னூர், நவ.29 - 2009. தினத்தந்தி

குன்னூர் அருகே வெலிங்டன் ஜெயந்தி நகரை சேர்ந்தவர் அரிகரன். இவரது மனைவி சியாமளா (வயது 26). இவர்களுக்கு 1 வயது ஆண் குழந்தை உள்பட 2 குழந்தைகள் உள்ளன. அரிகரன் சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிய முடிவு செய்து இருந்தார்.

இந்த நிலையில் அரிகரன் சபரிமலைக்கு மாலை போடுவது, அவரது மனைவி சியாமளாவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. இதனால் அவர்களுக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

வாக்குவாதம்

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அரிகரனுக்கும், சியாமளாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நடக்கும் போது அரிகரன் வெளியே செல்கிறேன் என்று கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

சியாமளா தனது குழந்தைக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டாலோ, சபரி மலைக்கு மாலை போடுவதை தனது கணவன் செய்யப்பட்டார் என்று நினைத்து இருந்தார்.

குழந்தை கொலை:

இந்த சமயத்தில் அரிகரன் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன், சியாமளா வீட்டின் பின்புறம் வைத்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் தனது ஒரு வயது ஆண் குழந்தையான அபினுவை போட்டு, மூடி விட்டார். இது குறித்து தனது கணவனிடம் அவர் எதுவும் கூறவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து தண்ணீர் தொட்டியை திறந்து பார்க்கும் குழந்தை அபினு இறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சியாமளா, தானும் தற்கொலை செய்து கொள்ள, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து, வெலிங்டன் எம்.ஆர்.சி. வளாகத்தில் இருந்த கிணற்றில் குதித்து விட்டார். அவள் கிணற்றில் குதிப்பதை ராணுவ வீரர் ஒருவர் பார்த்துவிட்டார். உடனே அந்த ராணுவ வீரர் சியாமளாவை காப்பாற்றி னார்.

இதற்கிடையில் குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி கிடப்பது அந்த கிராம மக்களுக்கு தெரிய வந்தது. உடனடியாக இறந்த குழந் தையை எடுத்துக் கொண்டு கிராம மக்கள் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தை செத்து விட்டதாக கூறினார்கள்.

அதே நேரத்தில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சியாமளாவையும் கிராம மக்கள் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாய் கைது

இது பற்றி தகவல் அறிந்த குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தர்மராஜ் உத்தரவின் பேரில் வெலிங்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் பிலிப் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசா ரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் சியாமளாவை கைது செய்தனர்.