எது நியாயம்?

ஐயகோ, அபலைப் பெண்கள் படும்பாட்டைக் கேட்பாரில்லையா!

இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பேதைப் பெண்கள் படும் அவலத்தைத் தடுப்பார் யாரோ!

தினமும் நூறுக்கணக்கான பெண்கள் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகி எரிக்கப்படுகிறார்களே!

பல்லாயிரக்கணக்கான பெண்கள், கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்கள் மூலம் நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறையால் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்களே, இதைத்தடுக்க இன்னும் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டாமா!

ஐயோ பாவம், இந்தியப் பெண்கள். அத்துணை கொடுமைகளையும் வன்முறைகளையும் சகித்துக் கொண்டு குடும்ப மானம் காப்பதற்காக மௌனமாய் அனுபவிக்கிறாளே, அவர் வீறு கொண்டெழுந்து இந்த ஆண்களைப் பழிவாங்க நாம் வழியமைத்துக் கொடுக்க வேண்டாமா!

இப்படியெல்லாம் இந்தியாவிலுள்ள பெண்ணியவாதிகள் மற்றும் ஊடகங்கள் கூக்குரலெழுப்பிக் கொண்டிருப்பதை நீங்கள் அன்றாடம் காண்கிறீர்கள்.

இதற்கேற்றார்ப்போல் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இதுபோன்ற ககருத்தாக்கங்கள் மீண்டும் மீண்டும் மக்கள் மனத்தில் மோதும்போது, அவை முழுதும் உண்மை என்றே இற்றைப் படுத்தப்படுகின்றன. இது ஒரு உளவியல் உத்தி - sort of brainwashing technique.
இதன் விளைவு?

சமீபத்தில் பெண்கள்மேல் ஆசிட் உற்றிய பையன்கள் போலீசாரால் கைது செய்யப்படும்போதே கொல்லப்படும்போது, இந்த பெண்ணியவாதிகளும், ஊடகங்களும், மற்றும் பொது மக்களில் பெரும்பான்மையோரும் “இவர்களை இப்படித்தான் கொல்லவேண்டும்!” என்று வெறிகொண்டு கூக்குரலிட்டதைக் கண்டோம்.

ஆனால், அதே நேரத்தில் மும்பையில் பல நூற்றுக் கணக்கானவர்களை சிதைத்து சீரழித்து படுகொலை செய்த பயங்கரவாதி கசாப் என்பவனுக்கு கட்டாயம் வக்கீல் வைத்து வாதாட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறுதியிட்டுச் சொல்கிறார். இதே மக்கள் அவனுக்கு ஆதரவாக கோரிக்கை எழுப்புகிறார்கள். “ஆமாம், அது நியாயம்தானே!” என்று இதே பொது மக்களும் ஆமோதிக்கிறார்கள்.

இந்த நியாய உணர்ச்சி ஏன் அந்தப் பையன்கள் விஷயத்தில் வெளிப்படவில்லை?

இங்குதான் காண்கிறீர்கள், நான் மேலே குறிப்பிட மூளைச்சலவையின் தாக்கத்தை.

ஆசிட் ஊற்றியதை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் குற்றம் புரிந்ததாக சந்தேகப்பட்டவர்களை என்கவுண்டரில் போட்டுத்தள்ளியதை நீங்கள் ஏன் நியாயப்படுத்துகிறீர்கள் என்று கேட்கிறேன்!

ஆனால், கிட்டத்தட்ட என்கவுண்டர் போலத்தான் வரதட்சணைக் கொடுமைச் சட்டம், வரதட்சணைக் கொலைச் சட்டம், பெண்கள் தற்கொலை பற்றிய சட்டம், கற்பழிப்புச் சட்டம் - இவை போன்றவை அமைக்கப்படிருக்கின்றன. சாதாரண குற்றப் பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பொதுவான நியாய அடிப்படையில் கிட்டும் சட்டரீதியான உரிமைகள் இந்தக் குற்றங்களின் அடிப்படையில் சாட்டப்பட்டவர்களுக்குக் கிடையாது. மேலும் இந்த வழக்குகளின் நடைமுறை மிகவும் அநாகரிகமானது, காட்டுமிராண்டித்தனமானது.

இவ்வகை குற்றங்கள் நிரூபிக்கப்படவேண்டாம். குற்றம் சாட்டப்பட்டாலே போதும். மனைவியோ, அவரது உறவினரோ சொன்னால் போதும். சாட்சியச் சட்டங்களை (Evidence Act) இதற்காகவே திருத்தம் கொணர்ந்து இத்தகைய செக்‌ஷன்களுக்கு அந்த சாட்சிய வரைமுறைகளிலிருந்து விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள்.

இதுபோன்ற ஒருதலைப்பட்சமான அநியாயமான சட்ட விதிமுறைகளை எவ்வாறு நியாயப்படுத்துகிறார்கள் தெரியுமா?

”பெண்களுக்கெதிராக அன்றாடம் நிகழ்த்தப்படும் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவர சாதாரண சட்டஙகள் போதாது. ஏனெனில் ஒட்டுமொத்த சமுதாயமே பெண்களுக்கு எதிராக இருக்கிறது.” - இப்படி பெரட்டிப் பெரட்டி அடிப்பார்கள். மக்களும் “ஙே” என்று விழித்து “ஆமாம்தானே, அது நியாயம்தானே” என்பார்கள்.

எது நியாயம்?

பெண்களைவிட இரண்டு பங்கு ஆண்கள் நம் நாட்டில் தற்கொலை செய்து கொள்கிறார்களே, அது நியாயமா?

பொறியியல், மருத்துவக் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகளில் பெண்கள்தான் அதிகமாகப் பயிலும் இந்நாட்களிலும், அலுவலகங்களில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக வேலை பார்க்கும் இக்காலத்திலும், கணவன் தான் ஜீவனாம்சம் கொடுத்து அழவேண்டும் என்று தீப்பளிக்கிறார்களே, அது நியாயமா?

வரதட்சணை என்பதே படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் அறவே இல்லாதபோது தினம் தினம் ஆயிரக்கணக்கான பொய் 498A வழக்குகள் போடப்பட்டு, அதனால் பல கணவர்களும் அவர்கள் பெற்றோர்களும் கைது செய்யப்படுகிறார்களே, அது நியாயமா?

அவ்வாறு பதியப்படும் பொய்வழக்குகளில் பல வயதான தாய்மார்கள் மற்றும் நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் கூடிய பெண்கள் மற்றும் 3 வயதுகூட நிரம்பாத குழந்தைகள் - இவர்கள் கைது செய்யப்படுகிறார்களே, இவர்கள் பெண்கள் கிடையாதா? ஒரு ஆண்மகனைப் பெற்ற பாவத்திற்காக மற்றும் அந்த ஆண்மகனுக்கு உடன்பிறப்பாகப் பிறந்த குற்றத்திற்காக இவர்கள் இத்தகைய அநியாயமான சித்திரவதையை அனுபவிக்கவேண்டுமா? இது நியாயமா? பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் என்று போர்டு போட்டுக்கொண்டு இருக்கிறாரே ரேணுகா சவுத்துரி, அவர் கண்களுக்கு இவர்கள் தென்படவில்லையா?

இத்தகைய பொய்வழக்குகளில் 90%க்கு மேல், கணவர்களிடமிருந்து லட்ச லட்சமாக பணம் பிடுங்கி (extortion) ரத்து செய்யப்பட்டு சமரச விவாகரத்தில் (mutual consent divorce) முடிகின்றனவே, அவை அப்பட்டமான புனைசுருட்டு புகார்கள் என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகியும் இந்தச் சட்டத்தை நீக்கவோ, திருத்தவோ கூடாது என்று கூச்சலிடுகிறார்களே, குடியரசுத் தலைவர் உணமையைக் கூறியுள்ளபோதும், எங்கே தாங்கள் அடிக்கும் பகல் கொள்ளையில் மண் விழுந்துவிடுமோ என்னும் பயத்தில் அதனை எதிர்க்கிறார்களே, இது நியாயமா?

கண்டவர்களுடன் ஜாலியாக சுற்றி என்ஜாய் பண்ணிவிட்டு, மாட்டிக் கொண்டால் பிரச்னை வருமோ என்று கிலி பிடித்து பயப்படும்போது கையில் சிக்கும் அப்பாவியை மயக்கி, “ஐயகோ, அவன் என்னை கற்பழித்துவிட்டான்” என்று புகார் கொடுக்கிறார்களே, கற்பெனும் சொல்லையே வேம்பென வெறுக்கும் வெறி பிடித்த பெண்கள், அது நியாயமா?

அப்படி அவள் சொன்னால் போதும், குற்றம் நிரூபிக்கப்படத் தேவையில்லை, போடு அவனை சிறையில் என்ற வகையில் கொடுங்கோன்மையான சட்டங்களை அமைத்திருக்கிறார்களே, அது நியாயமா?

இதனை வாசிக்கும் மக்களே, நான் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி கதைக்கவில்லை. உங்கள் வாயிற்படியில் காத்துக் கொண்டிருக்கும் பயங்கரத்தை பற்றி உங்களுக்கு எடுத்து சொல்கிறேன். விழிப்புடன் இருங்கள். இல்லையேல் உங்கள் பலர்மீது பாய இந்தப் பேய்கள் காத்துக் கொண்டிருக்கின்றன!

இத்தகைய அநியாயச் சட்டஙகள் ஒழுங்காக்கப் படாவிட்டால், சீக்கிரமே, ஆண் சிசுக்கள் கர்ப்பத்திலேயே கலைக்கப்படும் காலம் வரும். இது நிச்சயம்!

2 மறுமொழிகள்:

')) said...

இபோதுள்ள பெண்கள் சங்கங்களும், மத்திய அமைச்சகமும் பெண்களை காப்பதை விட ஆண்களை கொடுமைப்படுத்துவதிலும் பொய் கேசு போட்டு பணம் சம்பாதிப்பதிலும் தான் குறியாக இருக்கிறhர்கள். இந்தியாவில் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது என்று கீழள்ள செய்தியைப் பாருங்கள். இவர்களை காப்பாற்ற இந்த பெண்ணியவாதிகள் என்ன செய்கிறhர்கள்? எதுவும் செய்ய மாட்டார்கள் ஏனென்றhல் இதில் வருமானம் கிடைக்காது.

"பிரசவத்தின் போது மாதம் 1200 பெண்கள் இறப்பு" - Dinamalar News, January 11,09

சிவகாசி : சிவகாசியில் அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் "பாதுகாப்பான தாய்மை' மற்றும் தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கம் நடந்தது. மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.மாநில சுகாதார செயலர் சுப்புராஜ் கருத்தரங்கை துவக்கி பேசியதாவது: உலக அளவில் ஆண்டிற்கு ஒரு வயதுக்கு உட்பட்ட 40 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. இதில் 10 லட்சம் குழந்தைகள் இந்தியாவில் இறக் கின்றன. பிரசவத்தில் உலகளவில் ஆண்டிற்கு 5.2 லட்சம் பெண்களுக்கும், இந்தியாவில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பெண்களுக்கும் இறப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் மாதம் ஆயிரத்து 200 பெண்களும், 40 ஆயிரம் சிசுகளும் மரணம் அடைகின்றன. தமிழகத் தில் இறப்பு சதவீதம் குறைவு என்றாலும் தவிர்க்கப் படக் கூடியதாகும்.
---------------------------
நல்ல வேளை இந்த இறப்புகளுக்கும் வரதட்சணை கொடுமை தான் காரணம் என்று இந்த வியாபாரிகள் சொல்லாமலிருக்கிறhர்களே!

Anonymous said...

சாதிக்கொரு சங்கம் உண்டு! வீதிக்கொரு கட்சி உண்டு!
நீதி சொல் மட்டும் இங்கு யாருமில்ல மனம் நிம்மதியா வாழ இங்கு நாதியில்ல
இது நாடா இல்ல சுடு காடா இத கேட்க யாருமில்ல போடா