காரணம் தெரியாத கணவன் தற்கொலை

மனித உயிரில் ஏற்றத்தாழ்வு உண்டா?

உண்டு அய்யா! மனைவியின் உயிர்தான் பெரியது. அது வேளியே போனால் கணவனும் அவனுடைய பெற்றோர் மற்றும் உடன் பிறப்புக்கள் உடனே “உள்ளே” போகணும்!

சகல சக்தி வாய்ந்த வரதட்சணைச் சட்டம் இருக்கும் வரை ஆண்மகனைப் பெற்ற அனைத்துப் பெற்றோர்களுக்கும் அவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது சிறைவாசம் நிச்சயம்!!

1. கணவன் தற்கொலை - காரணம் தெரியாது.
------------------------------------------------------

விருதுநகரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

விருதுநகர், ஜன. 28- 2009. செய்தி: தினத்தந்தி

விருதுநகர் மேற்கு பாண்டியன் காலனியைச் சேர்ந்தவர் முத்துமாரி. இவரது கணவர் முத்துப்பாண்டி. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். முத்துப்பாண்டி மேட்டுப்பாளையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இதனிடையே 3 மாத கர்ப்பிணியாக உள்ள தனது மனைவியை பார்க்க முத்துப்பாண்டி ஊருக்கு வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது பற்றி விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

--------------

2. மனைவி தற்கொலை - காரணம்: சந்தேகமின்றி வரதட்சணை கொடுமை.
கணவர்-தம்பி கைது.

அம்பத்தூர், ஜன.21- 2009 - தினத்தந்தி.

தூத்துக்குடி பிரைன் நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 27) இவரும் தூத்துக்குடி மாவட்டம் இட்டமொழியை சேர்ந்த பிச்சை பண்டாரம் என்பவரின் மகள் சந்தரசெல்வி (22) என்பவரும் காதலித்தனர் இவர்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாதால் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் காமராஜர் தெருவில் வசிக்கும் பாண்டியராஜனின் அண்ணன் பிச்சைகனி வீட்டில் அடைக்கலம் புகுந்தனர். அங்கு தங்கியிருந்த போது கணவன், மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி வீட்டில் சந்திரசெல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும், வரதட்சணை கொடுமை உள்ளதா என்று ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார். விசாரணையின் முன்பு ஆஜரான சந்திரசெல்வியின் தந்தை பிச்சைபண்டாரம், ``எனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்கள்'' என்று வாக்குமூலம் அளித்தார்.

கடந்த 2 வருடமாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், சந்திரசெல்வியின் தற்கொலைக்கு காதல் கணவர் பாண்டியராஜன், அவருடைய தம்பி பாலமுருகன் ஆகியோர் காரணம் என்றும், இதனால் 2 பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அம்பத்தூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத்ஜமால் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பாண்டியராஜன், பாலமுருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.