பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்

பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கெடுபிடி

புதுடில்லி: செப்டம்பர் 20,2009

"பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையைத் தவிர்க்க, பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தை, அனைத்து மாநிலங்களும், தீவிரமாக அமல்படுத்த வேண்டும்' என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

வடமாநிலங்களில் நடக்கும் கட்டாயத் திருமணத்தைத் தடுத்தால், அங்கு பெண்கள் தற்கொலையும், கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக நடக்கும் கொலைகளையும் தவிர்க்க முடியும். பெண்களைப் பாதுகாக்க, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், தற்போதைய நிலைமை மோசமாகவே உள்ளது. கற்பழிப்பு மற்றும் வன்முறையால் பெண்கள் உயிரிழக்கையில், அதற்கான முதல் தகவல் அறிக்கையை, காவல் நிலையங்கள் பதிவு செய்வதே இல்லை என, புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றத்திற்கும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல் நிலையங்கள் தயங்கக் கூடாது.

குற்றம் நடந்த மூன்று மாதங்களுக்குள், பாரபட்சமற்ற புலனாய்வின் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும். புலனாய்வுக்கான தகவல்களைப் பெறுவதில் எந்தக் குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்வது, காவல் துறை மற்றும் நிர்வாகத்தினரின் கடமை. காவல் துறையில் பெண்களை அமர்த்துவதில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவியரைப் பாதுகாக்கும் வகையில், குற்றம் அதிகம் நடக்கும் இடங்களை அடையாளம் கண்டு, அங்கு கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.

மாணவியர் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க, விரைவு மற்றும் குடும்ப நல கோர்ட்டுகளை அமைக்க வேண்டும். பெண் குழந்தைகள் இறப்பைத் தடுக்க, காவல் துறையினர், சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். கற்பழிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் தந்து, அவர்களுக்கு அறிவுரை வழங்க, உளவியல் படித்தவர்களைப் பணியமர்த்த வேண்டும். இவை உட்பட, மேலும் 31 நடவடிக்கைகளை, விரைந்து எடுக்குமாறு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில், ஒரே கோத்திரம் கொண்ட பெண்ணை மணந்ததற்காக, கட்டப் பஞ்சாயத்து நடத்தப்பட்டு, அந்த உத்தரவின் பேரில் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்தே, பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

http://www.dinamalar.com/new/General_detail.asp?news_id=17154