சீரழியும் குடும்பங்கள்

ஜூனியர் விகடன் (01-07-2009) இதழில் வெளி வந்துள்ள கட்டுரை இது.

(இதன் மின் வடிவத்தை அனுப்பி வைத்த தமிழ் சரவணன் அவர்களுக்கு நன்றி)
---------------------------------

'புதருக்குள் பெண் பிணம், கணவனை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி, ரயில் முன் பாய்ந்து கள்ளக் காதல் ஜோடி தற்கொலை' - தினம் இப்படி ஆவடியைச் சுற்றி சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது! ஆவடி குறித்து நம் ஆக்ஷன் செல்லுக்கு (எண்:9790962188) வந்திருந்த அதிகபட்ச புகார்களும் இதே ரேஞ்சில்தான் இருக்கிறது.

'போலீஸ் ஸ்டேஷனில் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள், வீட்டை விற்கச் சொல்லி ரவுடிகள் மிரட்டுகிறார்கள், கள்ளக் காதலியுடன் சேர்ந்துகொண்டு கணவர் துன்புறுத்துகிறார், கொலையைத் தற்கொலையாக மாற்றிவிட்டார்கள், பள்ளிக்கூடம் போன பெண்ணை கடத்திக்கொண்டு போய்விட்டார்கள். ஈவ் டீசிங் தொல்லை தாங்க முடியவில்லை...' இப்படியாக வரிசையான குற்றச் சாட்டுகள். ஆவடியில் மட்டும் ஏன் இப்படி?

இப்பகுதியில் குடியிருக்கும் இந்து மக்கள் கட்சிப் பிரமுகர் சம்பத் நம்மிடம், ''பிரமாண்டமான தொழில் நகரமாக வளர்ந்திருக்க வேண்டிய பகுதி இது. ஆனால், பத்தாண்டுகள் பின்தங்கி நிற்கிறது. காரணம், ரவுடியிஸம்.

இப்பகுதி இளைஞர்கள் தாங்கள் ரோட்டில் நடந்தால், எல்லோரும் பயப்படவேண்டும் என ஆசைப்படுகிறார்கள். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள்கூட கட்டப்பஞ்சாயத்து அஸைன்மென்டுகளில் ஈடுபடுகிறார்கள். சென்னையைச் சேர்ந்த ரவுடி கும்பலுக்கும் இவர்களுக்கும் நெருக்க மான தொடர்பு இருக்கிறது. புறநகர்ப் பகுதி களில் திட்டமிட்டு ரவுடிக் குழுக்களை உருவாக்குவது இவர்கள்தான். இப்பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுடன் இந்த ரவுடி கும்பல் பின்னிப் பிணைந்துள்ளது.

ரயில் போக்குவரத்தே இல்லாத ஸ்ரீபெரும்புதூர் ஏரியாவில் நல்ல தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், தொழிற்பேட்டையான அம்பத்தூர், ஆவடி ஏரியாக்களில் புதிதாக எந்தத் தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை. காரணம், ஒரு தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கு முன்பே, கும்பலாக மாமூல் கேட்டு வந்துவிடுகிறார்கள். ரியல் எஸ்டேட் துறையும் இப்படித்தான். கிழக்குக் கடற்கரைச் சாலை, தாம்பரம் ஏரியாக்களைவிட இங்கே 25 சதவிகிதம் விலை குறைவாக இருக்கிறது. இப்படியாக ஆவடியின் பொருளாதாரமே ரவுடிகளால் சீரழிந்து விட்டது.

பொருளாதாரச் சீரழிவு ஒரு புறம் என்றால், சமுதாயச் சீரழிவு அதைவிட மோசம். புறநகர் பகுதியின் குறிப்பிட்ட சில தியேட்டர்களில் பலான படங்கள் தவிர, வேறெதையும் ஓட்டுவதில்லை. இந்தப் படங்களைப் பார்க்கும் ரசிகர்களின் ஈவ் டீசிங் தொல்லையிலிருந்து யாரும் தப்ப முடியாது. யாராவது எதிர்த்துப் பேசிவிட்டால், வீட்டுக்கே வந்து கலாட்டா செய்வார்கள். போலீசுக்குப் போனாலும் பயனில்லை. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் வேறு ஒரு ரவுடிக் கும்பலை நாடி, ஆதரவு கேட்கிறார்கள்.

அதேபோல், கள்ளக் காதல் விவகாரங்களும் இந்தப் பகுதிகளில் ஏராளம். வெளியே சொல்ல முடியாத அளவுக்கு முறையற்ற உறவுகளும் அதிகரித்திருக்கின்றன. மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளை அரசு இப்பகுதியில் ஆய்வு செய்ய அனுப்பி னால், ஏதாவது நன்மை கிடைக்கலாம்'' என்றார் சம்பத்.

''ஆவடியில் இருந்து எங்களுக்கு வரும் புகார்கள் பெரும்பாலும், கள்ளக் காதல் சம்பந்தப்பட்டவையாகவே இருக் கின்றன!'' என்கிறார் கலைச்செல்வி கருணாலயா என்கிற தொண்டு நிறுவனத் தின் நிறுவனர் புருஷோத்தமன். அவர் நம்மிடம், ''ஒரு முஸ்லிம் குடும்பம். பக்கத்துப் பக்கத்து வீடுகளில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஒரு நாள் தன் கணவன், அவருடைய அண்ணன் மனைவியுடன் அந்தரங்கமாக இருந்ததை நேரில் பார்த்துவிட்ட மனைவி, அங்கேயே சத்தம் போட்டு கலாட்டா செய்திருக்கிறார். அதற்குப்பிறகு அந்தக் குடும்பம் செய்ததுதான் அநியாயம். சத்தம் போட்டு கலாட்டா செய்த அந்தப் பெண்ணை வீட்டுக்குள்ளேயே சிறை வைத்து, ஜன்னல் வழியே சாப்பாடு கொடுத்துள்ளனர். இந்த விஷயம் அந்தப் பெண்ணின் அப்பா மூலமாக சமூக நல வாரியத்தின் கவனத்துக்கு வந்து, போலீஸ் மூலமாக அந்தப் பெண்ணை மீட்டோம். ஆனால், கணவன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இவளை நட்டாற்றில் விட்டுவிட்டான்.

இன்னொரு புகார் ஒரு இளைஞனைப் பற்றியது. அவனும் அவனுடைய அம்மாவும் ரோட்டோரம் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வந்திருக்கிறார்கள். இவர்களின் கடைக்கு எதிரே நாற்பது வயது விதவைப் பெண்மணி ஒருவரின் வீடு. அந்தப் பையனுக்கும் விதவைப் பெண்மணிக்கும் தொடர்பு ஏற்பட்டு, இப்போது அவன் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டான். இருவருக்கும் இருபது வயது வித்தி யாசம்! இந்தத் தவறான உறவு எதிர்காலத்தில் இரண்டு குடும்பங்களையும் பாதிக்கும் என்பதால் விதவைப் பெண்மணியிடமிருந்து பையனை மீட்டுக் கொடுக்கச் சொல்லி, அவனுடைய அம்மா போராடிக்கொண்டு இருக்கிறார்.

இன்னொரு வீட்டில், கட்டிய புருஷனை விட்டுவிட்டு அவனுடைய தம்பியுடன் ஓடிவிட்டாள் ஒரு பெண். வியாபாரம், வியாபாரம் என்று பணமே குறிக்கோளாக இருந்ததால், மனைவியைக் கோட்டை விட்டுவிட்டார் அந்தக் கணவர்'' என்றவர்,

''தனி மனித ஒழுக்கம் பற்றிய மதிப்பீடுகளை இங்குள்ள இயந்திர வாழ்க்கை தவிடு பொடியாக்கி வருகிறது. இதுதான் இவ்வாறான மனசாட்சியற்ற செயல்களுக்கு அடிப்படைக் காரணம். இதில் தொலைக்காட்சியும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வசதிக்கு மீறிய வாழ்க்கை மீதான ஆசையும், அதற்குப் போதாத பொருளாதார நிலையும்கூட கள்ளக் காதலுக்கு ஒருவகையில் காரணி. தன்னு டைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத புருஷனை விட்டு விட்டு வேறொருவரை தேடிப் போகும் பெண்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். மாமனார், மாமியார், கணவன் ஆகியோரைப் பழி வாங்குவதற்காகவும் சில பெண்கள் இந்த மாதிரியான காரியங்களில் இறங்கி விடுகிறார்கள். மனம்விட்டுப் பேசக்கூடிய, முதிர்ச்சியோடு அறிவுரை சொல்லக்கூடிய நண்பர்களையோ தோழிகளையோ இன்றைய நடுத்தர வயதினர் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதும்கூட இந்தப் பக்குவமற்ற போக்குக்கு ஒரு காரணம்.

அடுத்த தலைமுறையையாவது கவனத்தில் கொண்டு இனிமேல் பள்ளி, கல்லூரிகளில் வாழ்க்கைக் கல்வியைக் கட்டாயப் பாடமாக்குவதுதான் சரியான தீர்வாக இருக்கும். அதேபோல், ஒவ்வொரு குடும்பத் தலைவரும் தன்னுடைய பிள்ளைகளுக்கு ரோல் மாடலாக விளங்கவேண்டும். இது நம் சமுதாயத் தலைவர்களுக்கும் பொருந்தும். இல்லையென்றால், 'அவரே இப்படி... நாம செஞ்சா என்ன?' என்று எண்ணவைத்துவிடும்'' என்று புருஷோத்தமன் பலமாக எச்சரிக்கை மணியடித்துப் பேசினார். அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

ஆவடியில் நடக்கும் விதிவிலக்கான சம்பவங்களுக்கு மட்டுமா இது பொருந்தும்? நிம்மதியைத் தொலைத்து, தவறான பாதை நாடுபவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந்துமே!

- எம்.பாலச்சந்திரன்படம்: வி.செந்தில்குமார்

--------------------------

இந்த செய்தியின் கீழ் பதியப்பட்டுள்ள மறுமொழி இது:-
---------------------
//மாமனார், மாமியார், கணவன் ஆகியோரைப் பழி வாங்குவதற்காகவும் சில பெண்கள் இந்த மாதிரியான காரியங்களில் இறங்கி விடுகி றார்கள்.//

ஆம் இந்த கட்டுரை நூத்துக்கு நூறு உண்மை... பழிவாங்குகிறேன் என்ற போர்வையில் "வரதட்சணை கொடுமை சட்டம்" போன்ற அப்பாவி பெண்களுக்கா இயற்றப்பட்டதை இது போல் பெண்கள் பயன்படுத்தி அணைவரையும் சிறையில் அடைப்பது போன்ற கொடுமைகள் தினம் தொறும் நடந்தேறிவருகின்றது...
இச்சட்டத்தால் நாட்டில் இதுவரைக்கும் சுமார் ஒருலட்சடத்தி ஐம்பதாயிரம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்(எல்லாம் விசாரனை கைதிகள்தாம்) மற்றும் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரம் தந்தையில்லா குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர்... ஆனால் இதில் கொடுமை என்னவேன்றால் இது போல் பொய் கேசுகளில் 100 - க்கு 2 - மட்டுமே உண்மை என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறது. மீதி 98% சதவீதம் பொய் கேசுகள். இது அரசு கொடுத்துள்ள புள்ளி விவரம்!

இன்னும் சில ஆண்டுகளில் திருமணம் குடும்பம் என்ற அமைப்பே இல்லாமல் போகும்... நம் நாட்டில் என்பது நிச்சயம்!

1 மறுமொழி:

')) said...

திண்டுக்கல் : மினிபஸ் டிரைவர் ஒருவரை, இரண்டு பெண்கள் உரிமை கொண்டாடுவதால் மகளிர் போலீசார் குழப்பமடைந்துள்ளனர். திண்டுக்கல் எழில் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(26). இவர் மினிபஸ் டிரைவாக உள்ளார். மீனாள் என்ற பெண்ணை இவர் திருமணம் செய்துள்ளார். இவர் டிரைவராக பணியாற்றும் மினிபஸ்சில் செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தேவி, கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்று வந்துள்ளார். இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. தன்னை ராஜ்குமார் காதலித்து கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டதாக தேவி தன் புகாரில் கூறி, கணவனை மீட்டுத் தருமாறு திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் மனு கொடுத்துள்ளார்.


ஆனால், முதலில் தன்னை திருமணம் செய்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடனான திருமணத்தை அனுமதிக்க கூடாது என்று முதல் மனைவி மீனாள், மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மினிபஸ் டிரைவரை போலீசார் விசாரித்தனர். அவரோ தேவியை திருமணம் செய்யவில்லை என்றும் அவரே கழுத்தில் தாலியை கட்டிக் கொண்டு, தன்னைக் கணவன் என்று கூறி என்னை துன்புறுத்துகிறார் என்றார். இதனால், போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.