மிஸ்டு கால் விளையாட்டு!

3 பெண் குழந்தைகளுடன் மாயமான பெண் எங்கே?

செல்போனில் `மிஸ்டுகால்' கொடுத்து விளையாட்டு காண்பித்து வருகிறார்

சேலம், ஜுலை.24- 2009. செய்தி - தினத்தந்தி

3 குழந்தைகளுடன் காணாமல்போன பெண், செல்போனில் மிஸ்டுகால் கொடுத்து விளையாட்டு காண்பித்து வருகிறார். அவரது தாய்மாமனிடம் விசாரிக்க போலீசார்
முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணப்பா `லே' அவுட் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். தையல் தொழிலாளி. இவரது மனைவி உமா(வயது30). இந்த தம்பதிகளுக்கு ரம்யா(12), சூர்யா(12), தீபிகா(5) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ரம்யாவும், சூர்யாவும் இரட்டையர்கள்.

கடந்த 11-ந் தேதி தனது குழந்தைகளான ரம்யா, சூர்யா ஆகியோரை சேலம் அடுத்துள்ள அயோத்தியாபட்டணத்தில் உள்ள தனியார் கிறிஸ்டியன் பள்ளியில் 8-ம் வகுப்பு சேர்த்து விட்டு அங்கேயே விடுதியில் விடுவதற்காக உமா பஸ்சில் சேலம் வந்தார். உடன் இளைய மகள் தீபிகாவையும் அழைத்து வந்தார்.

சேலம் 5 ரோட்டில் பஸ்சில் வந்து இறங்கியதும், தனது கணவர் சுப்பிரமணியனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நல்லபடியாக பஸ்சில் வந்து சேர்ந்து விட்டோம். இனி நான் பள்ளியிலும், விடுதியிலும் ரம்யா, சூர்யா ஆகியோரை சேர்த்து
விட்டு தீபிகாவுடன் ஊருக்கு புறப்பட்டு வந்து விடுவேன் என உமா தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி, உமா ஊர் திரும்பவில்லை. 2 குழந்தைகளை பள்ளியிலும் சேர்த்து விடவில்லை.

மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் மாயமானது குறித்து சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் கணவர் சுப்பிரமணியன் புகார் தெரிவித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் துரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடிவந்தார்.

`மிஸ்டுகால்' விட்ட உமா

மாயமான உமா, மகள்கள் ரம்யா, சூர்யா, தீபிகா ஆகியோரை தேடி நாமக்கல், தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள உறவினர் வீடுகளுக்கு போலீசார் சென்று தேடுதல்வேட்டை நடத்தினார்கள். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் உமா, தனது கணவர் சுப்பிரமணியனின் செல்போனுக்கு,தன்னுடைய செல்போனில் இருந்து `மிஸ்டுகால்' விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அதே எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது நீண்ட `ரிங்' சென்றதே தவிர, அதை எடுத்து உமா பேச தயாராக வில்லை. மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள போலீசார் முயற்சித்தபோது செல்போன் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

ஏற்கனவே, சுப்பிரமணியன் கொடுத்த புகாரில், கிருஷ்ணகிரியை சேர்ந்த உமாவின் தாய்மாமன் சிவா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து இன்று போலீசார் கிருஷ்ணகிரி சென்று, தாய்மாமனிடம் விசாரிக்க திட்டமிட்டு
இருப்பதாக இன்ஸ்பெக்டர் துரை தெரிவித்தார்.