தாயைக் கொலை செய்த தையல்!

பெற்றதாயை கொன்ற ஆசிரியை, நண்பருடன் டில்லியில் கைது

ஜூன் 03,2009. செய்தி: தினமலர்

புதுடில்லி : பெற்ற தாயை திட்டமிட்டு கொலை செய்த பள்ளி ஆசிரியை, நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

மேற்கு டில்லி, பஷ்சிம் விகார் பகுதியில் வசித்தவர் கிரண் கபூர்(55). சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில், கொல்லப்பட்டார். கொலையை இரு கொள்ளையர்கள் செய்ததாக, கிரணின் மகள் சாக்ஷி கபூர் (26) தெரிவித்திருந்தார். இது குறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்த போது, சாக்ஷிக்கு, சன்னி பாத்ரா(21) என்ற நண்பர் இருப்பது தெரியவந்தது.

மேலும் போலீசார், அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின்னாக பதிலளித்தார். சம்பவத்தன்று கிரணின் அறையில் "டிவி'யின் சத்தம் கேட்டதாகவும், கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாகவும் தெரிவித்தார்.சாக்ஷி கபூருக்கு பலரிடமும் நட்பு இருந்தது. இதற்கு வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஓராண்டாக சன்னியுடனும் நட்பாகப் பழகியுள்ளார்.

சம்பவத்தன்று, கோவிலுக்கு சென்று வந்த கிரண் வீட்டில் சன்னி இருப்பதைப் பார்த்து கோபம் கொண்டார் . இதனால், சாக்ஷியையும், சன்னியையும் கடுமையாக திட்டியுள்ளார் கிரண். இதில் ஆத்திரமடைந்த இருவரும் பீர் பாட்டில் மற்றும் கத்தியால் கிரணை தாக்கினர். நிலைக்குலைந்த கிரண் சம்பவ இடத்திலேயே, ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

கொலையை மறைக்க முயன்ற சாக்ஷி, கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் பாட்டில்களை, சன்னியிடம் கொடுத்து அனுப்பிவிட்டார். அதன்பின் அனைவருக்கும் தகவல் கொடுத்துள்ளார். இரு மர்ம நபர்களால், தனது தாய் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்து தப்பவும் திட்டமிட்டார்.இது தொடர்பாக சன்னி மற்றும் சாக்ஷியை கைது செய்த போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.