மனைவிகளின் கொடுமையால் பாதிக்கப்பட்ட இந்திய கணவர்களின் மாநாடு

சிம்லாவில் மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள் மாநாடு
சனிக்கிழமை, ஆகஸ்ட் 15, 2009.

சிம்லா: மனைவிகளின் கொடுமையால் பாதிக்கப்பட்ட இந்திய கணவர்களின் மாநாடு சுதந்திர தினமான இன்று சிம்லாவில் நடக்கிறது.

இந்தியாவில் கடந்த நூற்றாண்டு வரை பெண்கள் வீட்டு அடிமைகளாக நடத்தப்பட்டனர். திருமணத்துக்கு தந்தைக்கும், திருமணத்துக்கு பின் கணவருக்கும், வயதான காலத்தில் மகனுக்கும் அடிமைகளாக இருந்தனர்.

மேலும், ஒவ்வொருவரின் வாழ்க்கையின் முக்கிய கட்டமான திருமணத்தின் போது பெண்கள் வரதட்சனை என்ற பெயரில் பெரும் கொடுமைகளை அனுபவித்து வந்தனர். இதையடுத்து இந்தியாவில் வரதட்சனை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தற்போது 21ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பம், பொறியியல், வி்ஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும் பெண்கள் நன்றாக முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் சிலர் இந்த வரதட்சணை ஒழிப்பு சட்டம் போன்றவற்றை தங்களது சொந்த லாபத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

கணவன்மார்களை தங்களது கைக்குள் வைத்துள்ளவும், பிடிக்காத கணவரை கழட்டிவிடவும் வரதட்சணை வழக்கு தொடருவேன் என மிரட்டும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு போனால் மானம் போய்விடும், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பதால் பல ஆண்கள் அஞ்சி பேசாமல் இருந்துவிடுகின்றனர்.

மேலும், இது போன்ற வழக்குகளில் குழந்தைகள் தாயாரிடம் இருக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்படுவதால் குழந்தைகளை பிரிய விரும்பாத நல்ல தந்தையாக இருக்க நினைக்கும் ஆண்களும் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

ஆண்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவதை ஒரிசா பெண்கள் கமிஷனும் ஒத்துகொண்டுள்ளது. கணவனை கொடுமைப்படுத்த வரதட்சணை கேட்கபதாக பெண்கள் பொய் புகார் கொடுப்பது அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது போன்ற பெண்களால் பாதிக்கப்பட்ட கணவர்கள் ஒன்றிணைந்து, ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் மாநாடு ஒன்றை இன்று துவக்கியுள்ளனர்.

இது குறித்து இந்திய குடும்ப அடிப்படைகளை காப்பாற்றுங்கள் என்ற பெங்களூர் அமைப்பின் உறுப்பினர் விரக் துலியா என்பவர் கூறுகையில்,

எங்கள் மாநாட்டை சுதந்திர தினத்தின் போது நடத்த திட்டமிட்டோம். இதன் மூலம் எங்கள் பிரச்சனையை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வரலாம் என நம்புகிறோம்.

மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டில் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த 100 ஆண்கள் உரிமை அமைப்பிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் மனைவிகளால் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் கணவர்களின் பிரதிநிதிகளாக பங்கேற்கின்றனர்.

ஒரு வாரத்தில் 350 ஆண்களுக்கு பாதிப்பு...

ஆண்களின் உரிமைகளை காப்பதற்கு சுமார் 100 ஹெல்ப்லைன் எண்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த எண்களுக்கு வாரத்துக்கு 300 முதல் 350 போன்கள் வருகின்றன. எங்களது சங்கம் சார்பில் இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம் என்றார்.

செய்தி: தட்ஸ்தமிழ்