ஜூனியர் விகடனில் வெளியான நெஞ்சை கலங்க வைக்கும் சம்பவம்...
வணிகச் செய்திகள், வேலைவாய்ப்புச் செய்திகள் என்பது போல் கள்ளக் காதல் செய்திகள் என்றுஊடகங்களில் இனி, தனிப் பகுதி வந்துவிடுமோ?அடுத்தடுத்து நடக்கும் கள்ளக்காதல் தொடர்பான கொலைகள் இப்படி ஒரு பயத்தை இயல்பாகவே ஏற்படுத்தி விட்டன!
கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த மகனையே வெட்டி ஃப்ரிட்ஜுக்குள் வைத்த மதுரை கொடூரம் ஒரு பக்கம் என்றால், விருத்தாசலத்தில் நடந்திருக்கும் விபரீதம் விதிர்விதிர்க்க வைக்கிறது!
வசதியாக வாழ்வதற்குப் பணம் தேவை என்பதால், ஏழு வயது பையனைக் கடத்திக் கொலை செய்திருக்கிறது ரத்த வெறி பிடித்த கள்ளக்காதல் ஜோடி.
விருத்தாசலத்தை அடுத்துள்ள கார் குடல் கிராமமே கண்ணீர்க் கடலாகிக் கிடக்கிறது. தெருவில் ஓடி விளையாடி எல்லோரிடமும் அன்பாக பழகிய ஏழு வயதுச் சிறுவன் சுரேஷ் சாக்குமூட்டையில் பிணமாகக் கிடப்பதை எப்படித்தான் தாங்கிக் கொள்ள முடியும்?
கொளஞ்சிநாதன்-மகேஸ்வரி தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகளுக்கு பிறகு, தவமாகத் தவமிருந்து வரம் வாங்கிப் பிறந்த ஆண் குழந்தை சுரேஷ். அருகிலுள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 27-ம் தேதி காலையில் பள்ளிக்குப் போனவன் மாலை வரை வீடு திரும்பவில்லை.
அப்பா கொளஞ்சிநாதன் வெளி நாட்டில் இருப்பதால், அம்மா மகேஸ்வரி, சுரேஷை தேடி அலைந்தார்.
இரண்டு நாட்கள் கழித்து... 29-ம் தேதி மதியம் வயலாப் பாடி என்னும் கிராமத்தின் ஒடையில் சாக்குமூட் டையில் கட்டப்பட்டு பிணமாகத்தான் அவனைப் பார்க்க முடிந்தது.
கலங்கிப் போயிருந்த கார்குடல் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சித்திரைச்செல்வன் நம்மிடம், ''ஸ்கூல் போன புள்ளைய காணோம்னு சொன்னதும், பதறிப்போய் தேடினோம். அன்னிக்கு ராத்திரி மகேஸ்வரி செல்லுக்கு பேசின ஒருத்தன், 'நாங்கதான் சுரேஷை கடத்தி வச்சிருக்கோம். அஞ்சு லட்ச ரூபா ரெடி பண்ணி வையி'னு மிரட்டியிருக்கான். உடனே, போலீஸ்ல புகார் கொடுத்துட்டோம். எஸ்.பி. விறுவிறுனு ஆக்ஷன் எடுக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, வெண்ணெய் திரண்டு வர்ற நேரத்துல, தாழி உடையுற மாதிரி... போலீஸ் அவங்கள நெருங்குற நேரத்துல, இப்படி இதயமே இல்லாத அந்த பிஞ்சுப் பையனை கொன்னுட்டாங்களே... அந்த படுபாவிங்க!'' என்று அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்.
போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.
"தகவல் கிடைத்ததும் கடலூர் எஸ்.பி-யான அஸ்வின் கோட் னிஸ் மூன்று தனிப் படைகளை அமைத்து, விசாரிக்க உத்தரவிட்டார். அவர்கள், மகேஸ்வரியின் செல்லுக்கு வரும் அனைத்து அழைப்புகளையும் கண்காணிக்க ஆரம்பித்தனர். அதில் இரண்டாவது முறையாகப் பணம் கேட்டு வந்த அழைப்பை, பதிவு செய்து விசாரித்தபோது, பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வந்திருப்பதை கண்டுபிடித்தனர். அங்கே செங்குனம் கிராமத்தில் மகேஸ்வரியின் சித்தி முறையான பாலாயி என்பவர் இருப்பதாகத் தெரிந்தது. உடனே, பாலாயியை தேடிச் சென்றோம். பாலாயியோடு உடனிருந்த சுந்தர்ராஜ் என்ற ஜே.சி.பி. டிரைவரையும் சேர்த்து அள்ளிக் கொண்டு வந்து விசாரித்த போதுதான், இந்த கொடுமைகள் வெளியே வந்தன!" என்றனர் போலீஸார்.
ஏன் சுரேஷை கடத்திக் கொலை செய்தார்கள்?
போலீஸில் பாலாயி கொடுத்த வாக்குமூலம் இதோ...
"மகேஸ்வரியின் பிறந்த ஊரான திட்டக்குடி பக்கம் கூடலூர்லதான் நான் வாக்கப்பட்டேன். மகேஸ்வரியோட சித்தப்பா புகழேந்திக்கு என்னைக் கட்டிக் கொடுத்தாங்க. அவரு வெளிநாட்டுல இருக்காரு. இங்க தனிமை என்னை ரொம்பப் படுத்தி எடுத்துசசு. அப்ப எங்க ஊருக்கு ஜே.சி.பி. ஓட்ட வந்த சுந்தர்ராஜுக்கும் எனக்கும் பழக்கமாச்சு. விஷயம் ஊர்ல தெரிஞ்சு, என் வீட்டுக்காரர் வரைக்கும் போயிடுச்சு. அவர் இங்க வந்து என்னைய கண்டிச்சாரு. ஆனா, அவரு திரும்பவும் வெளிநாடு போன பின்னாடி, என்னால சும்மா இருக்க முடியல. சுந்தர்ரஜைத்தான் தேடிப் போனேன். இது தெரிஞ்சதும் என் வீட்டுக்காரர் ஒரேடியா என்னை வெரட்டி விட்டுட்டாரு.
அப்புறம் நானும் சுந்தர்ராஜும் ஒண்ணாவே இருக்கோம். இருந்த காச வச்சு கொஞ்ச காலம் சந்தோஷமா இருந்தோம். அது தீர்ந்ததும், காசு சம்பாதிக்க என்ன பண்றதுனு நாங்கபேசிக்கிட்டி ருந்தப்பதான்... சென்னையில ஒருத்தரை கடத்தி வச்சு காசு கேட்ட சம்பவத்தை டி.வி-யில பாத் தோம்...'' என்ற பாலாயி, அதற்குப் பிறகு நடந்த தையும் அழுத்தமான குரலில் கக்கியிருக்கிறாள்.
''டி.வி-யைப் பாத்ததுமே யாரையாச்சும் கடத்தி பணம் கேக்கலாம்னு தோணுச்சு. யாரைக் கடத்தறதுன்னு யோசிச்சப்பதான் சட்டுனு சுரேஷ் ஞாபகம் வந்துச்சு. ஏன்னா, அவன் எனக்கும் சுந்தர்ராஜுக்கும் நல்லா பழக்கமானவன். கூப்பிட்டாவே வந்துடுவான். அவங்க அப்பா வெளிநாட்டுல இருக்கிறதால, கேட்டதும் பணமும் சிக்கல் இல்லாமல் கிடைச்சுடும்னு முடிவெடுத்தோம்.
உடனே, போன 27-ம் தேதி சாயந்தரம் போய் சுரேஷை, சுந்தர்ராஜ் கூப்பிட்டிருக்கான். சிரிச்சுக்கிட்டே சுரேஷ் வந்துட்டான். அவனை எங்க வீட்லயே ஒரு ரூம்ல கட்டிப் போட்டுட்டு, மகேஸ்வரிக்கு போன் போட்டோம். இந்த தகவல் மறுநாள் பேப்பர்ல வந்ததும், எங்க ரெண்டு பேருக்கும் பயமாயிடுச்சு. 'இறங்கினது இறங்கிட்டோம்'னு தைரியம் சொன்ன சுந்தர்ராஜ், மறுபடியும் மகேஸ்வரிக்கு போன் பண்ணி பணம் கேட்டான். அப்பதான், நாங்க இருக்கற இடத்தை போலீஸ்காரங்க கண்டுபிடிச்சிட்டாங்க. இந்த நியூஸும் உடனே டி.வி-யில வர, எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. உடனே, சுரேஷை முகத்தில் துணியை வைத்து அழுத்தினோம். ரொம்பக் கத்தினவன், கொஞ்ச நேரத்துல அடங்கிட்டான். பிணத்தை வயலாப்பாடிக்கு எடுத்துக்கிட்டு போய், குளத்துல வீசிட்டோம்...'' என்றாளாம் பாலாயி.
அருமைப் பையனை பறிகொடுத்து நிற்கும் மகேஸ்வரி,
"புள்ளைங்கள பத்திரமா பாத்துக்கடின்னு சொல்லிட்டு வெளிநாடு போன எம் புருஷன், திரும்ப வந்து கேட்டா, நான் என்ன பதில்சொல்லுவேன்?'' என்று தன் மூன்று பெண் குழந்தைகளையும் கட்டிக் கொண்டு அழுத காட்சி இதயத்தைநசுக்கியது.
கள்ளக் காதல் ஜோடியிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக் கொண்ட போலீஸார், இருவரையும் பத்திரிகையாளர்களுக்கும் காட்டாமல் அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
"ஏற்கெனவே போலீஸின் நடவடிக்கைகள்ஊடகங்கள் மூலமாக வெளியே தெரிந்ததால்தான் சிறுவன் கொல்லப் பட்டான். அதனால்தான் இந்த ஏற்பாடு..." என்கிறார்கள் போலீஸார். காலம் கடந்த எச்சரிக்கையல்லவா இது!
- கரு.முத்துபடங்கள்: ஜெமினி படமனை. நன்றி: ஜூனியர் விகடன்
கள்ளக்காதல் விபரீதம்...
குறிச்சொற்கள் lust, கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொலை, கொலைகாரி, வெறி
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழி:
கள்ளக்காதலினால் 155 கொலைகள்... தினமலரில் வெளியான செய்தி..
தொடரட்டும் கள்ளக்காதல் தொண்டு. குறையட்டும் மக்கள் தொகை
ஆத்திரத்தில் அதிகரிக்கும் படுகொலைகள்: உறவினர்-நண்பர்கள் பகை, கள்ளக்காதல் காரணம்
http://www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=15954
உங்கள் கருத்தைத் தெரிவிக்க