திருமணமாகி 9 ஆண்டுகளுக்குப்பின் 498A

9 ஆண்டுகள் என்ன, 100 ஆண்டுகள் கழித்துக்கூட கணவன் மற்றும் அவனது பெற்றோர், உறவினர், நண்பர்கள், மேலும் ரோட்டில் போகிறவர், வருகிறவர் அனைத்துப் பேருக்கும் எதிராக 498A கேசு போடலாம் என்கிறது அந்தச் சட்டம்.

இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத்திய வர்மகலை வைத்தியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேவகோட்டை ராம்நகர் வீட்டுவசதிவாரிய குடியிருப்பில் வசிப்பவர் ஜெபக்குமார். வர்மகலை வைத்தியர். இவரது மனைவி அமலா (வயது 26). சித்த மருத்துவ டாக்டர். இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஜெபக்குமார் மனைவி அமலாவிடம் அவரது தங்கையை தனக்கு 2-வது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். (அநேகமாக இதுதான் உண்மையில் பிரச்னையாக இருக்கலாம். ஆனால் கையிலெடுப்பது என்னவோ வரதட்சணைக் கொடுமை (498A) புகாரைத்தான். ஏனென்றால் அதன் மூலமாகத்தானே அனைவரையும் கைது செய்ய வைக்கலாம்!). மேலும் 30 பவுன் நகை, ரூ. 2லட்சம் பணம் கேட்டு, அடித்து துன்புறுத்தினாராம். இதுகுறித்து அமலா தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அனுராதா, சிவக்குமாரின் தந்தை அன்பையா, தாயார் ரெசிலம்மாள், அண்ணன் கிறிஸ்து ராஜா, அண்ணன் மனைவி டெய்சி, மற்றொரு அண்ணன் ராஜசேகர், அவரது மனைவி லதா, அக்கா ஜெயந்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ஜெபக்குமார், ரெசிலம்மாள், கிறிஸ்து ராஜா, டெய்சி ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

செய்தி - தினத்தந்தி - 22-07-2009
---------------

இதைப் படிக்கும் வலைப் பதிவர்களில் மணமான பெண்கள் யாரேனும் இருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு இலவச டிப்ஸ் :-

சக வலைப் பதிவர்களில் யாரேனும் உங்களிடன் பின்னூட்டக் குசும்பு செய்து அதனால் அந்த நபர்மேல் உங்களுக்கு அதீத கோபம் வந்து, அவரை எப்படியாவது பழி வாங்கவேண்டும் என்று துடிக்கிறீர்களா? உடனே அருகாமையிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து (பழுப்புப் பேப்பராக இருந்தலும் பரவாயில்லை) அந்த நபர் வரதட்சணைக் கொடுமை செய்தார் என்று புகார் கொடுத்து விடுங்கள். இதற்காக (498A) சட்டப் பிரிவுக்கு ஏற்றபடி அங்கு அநேகமாக ஒரு டெம்பிளேட் செய்து வைத்திருப்பார்கள். அப்படி கைவசம் ரெடியாக இல்லாவிட்டலும் இந்த 498A கேசு ஸ்பெஷலிஸ்டுகளான வக்கீல்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் தகுந்த புகார்களை நன்கு ஜோடித்துக் கொடுப்பார்கள்.

வெறும் சோறு போதுமா? அதன்மேல் மசாலா, உப்பு புளி மிளகாய் வேண்டாமா! அதனால் அந்த நிபுணர்கள் 498A கூட இன்னும் சில செக்ஷன்கள் சேர்கிறமாதிரி, புளு ஃபிலிம் பார்த்தார்கள், அந்த நபர் என்னைக் கையைப் பிடித்து இழுத்தார் என்று ஜிகினா வேலை செய்து கொடுப்பார்கள். எந்த முகாந்திரமும் வேண்டாம்; எந்த விசாரணையும் வேண்டாம்; அந்த வலைப் பதிவர் உடனே கைது செய்யப் படுவார். பிறகு அவரிடமிருந்து ஒரு கணிசமான துகையைக் கறந்து கொண்டு உங்கள் புகாரை Quash செய்து விடலாம்.

இது போல்தான் இந்த சட்டப் பிரிவு பயன்படுத்தப் படுகிறது. குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பல நீதிபதிகள் இந்த சட்டத்தின் முழு துஷ்பிரயோகத்தை ஒப்புக் கொண்டாயிற்று. ஆனாலும் இது ஒரு கற்பக விருக்ஷம், காம தேனு, அட்சய பாத்திரமாக கணிசமான வக்கீல்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், மற்றும் இதர துறை சார்ந்த எனையோருக்கும் விளங்குவதால் ஒரு மாற்றமும் நடக்க மாட்டேனென்கிறது.

7 மறுமொழிகள்:

')) said...

இதே போல் யூஎஸ்ஸில் இருந்து ஒரு லேடி இண்டியா வந்து தன்னுடைய கணவர் 10 லட்சம் வரதட்சனை கேட்கிறார் என்று புகார் செய்தார். ஒரு குழந்தை ஆறு வயதில்.

யுஎஸ்ஸில் இருப்பவன் 10 லட்சம் கேட்டு கொடுமை செய்வானா ?

எனக்கு உங்கள் நினைவுதான் வந்தது...

')) said...

நன்றி, ரவி.

இந்தக் கொடுமையைப் பற்றி உங்கள் வலைப் பதிவில் எழுதுங்கள். இன்னும் மணமாகாத உங்கள் உறவினர், நண்பர்களுக்கு இந்தச் சட்டங்களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள்.

அந்தரங்கமன உறவு, அந்நியோன்னியமான பழகுமுறை, அன்பு நிலவும் குடுமப வாழ்வு என்பது போன்ற இயல்புருக்கள் அறவே மறைந்து ஒவ்வொருவரும் தனி மரமாக இயங்கும் நிலை இந்தியாவில் சீக்கிறமே வந்துவிடும் போலிருக்கிறது.

அத்தகைய நிலையை நம் சமூகம் விரைவில் எட்ட வேண்டும், நம் பண்பாடு என்னும் கட்டமைப்பு சிதறி அனைவரையும் தன் இஷடப்படி இருக்கலாம் என்ற மனப்பான்மையை வளர்ப்பதுதான் இந்த மேலை நாட்டு வர்த்தகக் கும்பல்களின் எதிர்பார்ப்பு.

அடிப்படையில் நம் குடும்ப முறை சேமிப்பை ஊக்குவிப்பது. அதை கட்டுடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் நம் குடும்ப முறையின்மேல் கைவைத்திருக்கிறார்கள். அந்தப் பிணைப்பு உடைந்தால் புலன்கள் மூலம் நுகரும் கேளிக்கைகள் சார்ந்த வாழ்க்கை முறை ஏற்பட்டுவிடும் அல்லவா? அதுதான் (hedonism) அவர்களின் நோக்கம். "கருமேனியை சிவப்பாக்கும் கிரீம்கள்" போல் நிறைய வேண்டாத சாமான்களைக் கொண்டு வந்து நிரப்பி "வாங்கு, வாங்கு" என்று ஊடகங்கள் மூலமாகத் தூண்டி நம்மை நிரந்தரக் கடனாளியாக்கத் திட்டம் போட்டு செயலாற்றுகிறார்கள். இந்த 498A, DV Act, Dowry death special laws, rape laws போன்றவை இந்தத்திட்டத்தின் படிக்கற்கள்தான்!

')) said...

//சப்-இன்ஸ்பெக்டர் அனுராதா, சிவக்குமாரின் தந்தை அன்பையா, தாயார் ரெசிலம்மாள், அண்ணன் கிறிஸ்து ராஜா, அண்ணன் மனைவி டெய்சி, மற்றொரு அண்ணன் ராஜசேகர், அவரது மனைவி லதா, அக்கா ஜெயந்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ஜெபக்குமார், ரெசிலம்மாள், கிறிஸ்து ராஜா, டெய்சி ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.//

ஆகஸ்ட் 2008ல் சென்னை உயர்நீதிமன்றம் 498A கேசுகளில் உறவினர்களை கைது செய்யக் கூடாது என்றும் SP யின் அனுமதி பெற்ற பிறகு தான் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மூலை முடுக்களில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் மற்றும் முட்டாள் தனமாக கைது உத்தரவு பிறப்பிக்கும் மாஜுஸ்ட்ரேட்டுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. நேற்று (July 22, 2009) கூட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய பென்ச் வரதட்சணை வழக்குகளில் போலிஸ் தலையீடு இருக்கக் கூடாது என்று மறுபடியும் உத்தரவிட்டுள்ளனர். இந்த நீதிபதிகளையெல்லாம் முட்டாள்கள் என்று நினைத்து நாட்டில் சட்ட தீவிரவாதம் இன்னும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.


//இதற்காக (498A) சட்டப் பிரிவுக்கு ஏற்றபடி அங்கு அநேகமாக ஒரு டெம்பிளேட் செய்து வைத்திருப்பார்கள். அப்படி கைவசம் ரெடியாக இல்லாவிட்டலும் இந்த 498A கேசு ஸ்பெஷலிஸ்டுகளான வக்கீல்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் தகுந்த புகார்களை நன்கு ஜோடித்துக் கொடுப்பார்கள்.//

டெம்ப்ளேட்களை இலவசமாக வழங்கி உதவி செய்யக் காத்திருக்கிறேன்.வக்கீல் செலவு மிச்சம். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு என்னால் முடிந்த சிறு உதவி!

')) said...

//யுஎஸ்ஸில் இருப்பவன் 10 லட்சம் கேட்டு கொடுமை செய்வானா ?//

செந்தழல் ரவி அவர்களே, இதில் என்ன ஆச்சரியம்? US-ல் இருப்பவர் 50,000 ருபாய் கேட்டு தனது 10 மாத குழந்தையை கொலை செய்ய முயற்சி செய்ததாக கேஸ் இருக்கிறது.

')) said...

இதபோல காமடி...

என்னுடைய 498ஏ டார்லிங்... அவர் நிறைமாதக்கர்பிணியாக இருந்தபோழுது நான் வயிற்றில் உதைத்து 75 நகை பத்தாது மேலும் வாங்கி வா என்று புருடா உடப்பட்டு அந்த புருடாவில் இதுபோல் சட்டங்களைபற்றி தெரியாமல் எனது திருமணத்திற்கு வந்த எனது தம்பி நண்பருடைய தாயாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..

')) said...

//இதே போல் யூஎஸ்ஸில் இருந்து ஒரு லேடி இண்டியா வந்து தன்னுடைய கணவர் 10 லட்சம் வரதட்சனை கேட்கிறார் என்று புகார் செய்தார். ஒரு குழந்தை ஆறு வயதில்.

யுஎஸ்ஸில் இருப்பவன் 10 லட்சம் கேட்டு கொடுமை செய்வானா ?//

செந்தழல் ரவி அவர்களே,

உங்கள் செய்தியிலே பெண்ணடிமைத்தன ஆதரவு கலந்த மரியாதை தெரிகிறதே ""லேடி கேட்கிறார்"" ஆனால் யுஎஸ்ஸில் ""இருப்பவன்"" 10 லட்சம் கேட்டு கொடுமை ""செய்வானா"".

ஏன் இந்த ஏற்றத்தாழ்வு? இது தான் நாட்டில் இன்று நடக்கின்ற அவலம்.

')) said...

பாமரன் அவர்களே

என்னுடைய வார்த்தைகளிலேயே என்னை ஆதிக்கம் செய்ய முயல்கிறீர்களே ? இது என்னவகை ஆதிக்கம் ஹி ஹி

நான் சாதாரணமாக எந்த விதமான உள்நோக்கமும் இன்றித்தான் எழுதினேன்.

மற்றபடி...

இரண்டு விஷயங்கள்..

இதுபோன்ற 498ஏ சட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து ஆசாமிகளின் பெரும் பங்கு வெளிப்படுத்தப்படவேண்டும்..

இந்த 498ஏ சட்டத்தினால், நடுவில் பிறந்து, ஏன் பிறந்தோம் என்ற அவதிக்கு ஆளாகும் பச்சிளம் குழந்தைகளை நினைத்தால் கண்ணீர் வருகிறது...