கள்ளக் காதலனை கைப்பிடிப்பதற்காக கணவரை கொன்ற புதுப்பெண்

பெங்களூர், ஏப்.16- 2009

திருமணம் ஆன 5 மாதங்களில், கணவரை கொன்ற புதுப்பெண் கைது செய்யப்பட்டார். கல்லூரி காதலனை கைப்பிடிப்பதற்காக அவர் கணவரை கொலை செய்தது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூர், ராமசாமி பாளையம் நஞ்சுண்டப்பா கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் உமேஷ்கிருஷ்ணன் (வயது 26). கம்ப்னிட்டர் என்ஜினீயர். இவர் பெங்களூரில் ஒரு கால் சென்டரில் வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி பெயர், ஹனிமேரி.

உமேஷ் கிருஷ்ணன் ஈரோட்டை சேர்ந்தவர். இவரது தந்தை ரெயில்வே துறையில் வேலை செய்து வருகிறார். உமேஷ்கிருஷ்ணன்-ஹனிமேரி திருமணம், கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. அதன் பிறகு 2 பேரும் பெங்களூரில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் மார்ச் மாதம் 2-ந்தேதி அதிகாலையில் மர்ம மனிதர்கள் வீட்டிற்கு நுழைந்து உமேஷ்கிருஷ்ணனை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து தப்பி விட்டதாக பக்கத்து வீட்டில் வசித்தவர்களிடம் ஹனிமேரி பதற்றத்துடன் கூறினார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு வந்தனர். அப்போது உமேஷ்கிருஷ்ணன் கை, கால்கள் கட்டப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய முகம் முழுவதும் செல்லோ டேப் ஒட்டப்பட்டிருந்தது.

தகவல் கிடைத்ததும் பெங்களூர், பானஸ்வாடி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த கொலை பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு 4 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், ஹனிமேரி புகாரில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது செல்போன் நம்பரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி ஹனிமேரியை கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-

கல்லூரி காதல்

ஹனிமேரி, கோயம்புத்தூரில் படிக்கும்போது அவருக்கு முத்துகுமார் என்ற என்ஜினீயருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முத்து குமார், திருநெல்வேலி டவுனை சேர்ந்தவர். கடந்த 2006-ம் ஆண்டு கோயம்புத்தூரில் ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த போது ஹனிமேரி-முத்து குமார் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்தது.

இதற்கிடையே, முத்துகுமார் என்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டார். இந்தநேரத்தில்தான், ஹனிமேரிக்கும் உமேஷ்கிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

ஹனிமேரியின் தந்தையும் உமேஷ்கிருஷ்ணனின் தந்தையும் நண்பர்கள். 2 பேரும் ரெயில்வே துறையில் வேலை செய்து வந்ததால் நட்பு அடிப்படையில் 2 குடும்பத்தினரும் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் ஹனிமேரி தனது காதல் விவகாரத்தை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை.

ஹனிமேரி-உமேஷ் தம்பதி திருமணம் முடிந்ததும் பெங்களூருக்கு தனிக்குடித்தனம் வந்தார்கள். பெங்களூர் பானஸ்வாடி போலீஸ் சரகத்தில் உள்ள நஞ்சுண்டப்பா கார்டன் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் வசித்தனர்.

திருமணம் ஆன பிறகும் ஹனிமேரிக்கு தனது காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்தார். பெற்றோர் பார்த்து திருமணம் செய்துவைத்த கணவனோடு வாழ அவரது மனம் இணங்கவில்லை. உமேஷ், கால்சென்டர் வேலைக்கு சென்றதும் ஹனிமேரி குஜராத்தில் உள்ள முத்துகுமாருடன் செல்போனில் பேசுவது வழக்கம்.

அப்போது, 2 பேரும் தங்களது காதல் நாட்களை மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருப்பார்கள். இதனால் ஹனிமேரியின் மனம், கணவனை விட்டு காதலனை நாடத்தொடங்கியது. இதன்விளைவு ஹனிமேரிக்கு காதலனுடன் வாழ வேண்டும் என்று விரும்பத்தொடங்கினார். இதனால் ஹனிமேரி காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்ட ரகசிய திட்டத்தை தீட்டினார்.

முத்துகுமார் அந்த ரகசிய திட்டம் பற்றி அவருடன் வேலைபார்க்கும் சஜ்ஜன் என்பவரிடம் கூறினார். சஜ்ஜன் அவருடைய நண்பரான சந்தன் என்பவரிடம் கூறி, ஆலோசனை கேட்டுள்ளார். அதன் பிறகு பிபின் குமார் மற்றும் பாஸ்கல் ஆகிய 2 பேர் பெங்களூருக்கு வந்து ஹனிமேரியை சந்தித்து முத்துகுமார்தான் தங்களை அனுப்பினார் என்று கூறினர்.

பிபின்குமார், பாஸ்கல் ஆகிய 2 பேரும் ஹனிமேரி தங்கியிருந்த வீடு மற்றும் அக்கம் பக்கத்தில் யார் வசிக்கிறார்கள் என்பது பற்றி நோட்டம் விட்டு குஜராத் சென்று முத்துகுமாரிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உமேசை எப்படி கொலை செய்வது என்று ஆலோசனை நடத்தினார்கள்.

சம்பவத்தன்று அதிகாலை பிபின்குமார் மற்றும் பாஸ்கல் ஆகிய 2 பேரும் உமேஷ் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தனர். அவர்களது வருகையை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த ஹனிமேரி இரவு கதவை பூட்டாமல் சாத்தியே வைத்திருந்தார். இதனால், எந்த சத்தமும் இல்லாமல் அவர்கள் 2 பேரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அப்போது உமேஷ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். உடனே, அவர்கள் 2 பேரும் உமேசின் கை கால்களை கட்டிப்போட்டு முகத்தில் செல்லோ டேப் கொண்டு அழுத்தமாக ஒட்டி விட்டனர். இதனால் மூச்சு திணறி உமேஷ் பரிதாபமாக இறந்தார்.

அதன் பிறகு, ஹனிமேரியிடம் இருந்து தங்கச்சங்கிலி மற்றும் 2 செல்போன்களை வாங்கிக்கொண்டு அவர்கள் 2 பேரும் குஜராத் சென்று முத்துகுமாரிடம் தகவலை தெரிவித்தனர். பிபின்குமார் மற்றும் பாஸ்கல் ஆகிய 2 பேரும் தப்பி சென்ற பிறகு, ஹனிமேரி வெளியே வந்து அக்கம் பக்கத்து வீட்டினரிடம் கொள்ளையர்கள் அவரது கணவரை கொலை செய்துவிட்டு நகைகளை பறித்துச்சென்றதாக நாடகம் ஆடியது விசாரணையில் அம்பலம் ஆனது.

இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கடந்த 11-ந் தேதி பிபின் குமாரை சென்னையில் கைது செய்தார்கள். ஹனிமேரி, பெங்களூரில் உள்ள அவரது மாமா வீட்டில் இருந்த போது கைது செய்யப்பட்டார்.

இவர்கள் 2 பேரும் போலீசாரிடம் சிக்கி விட்டார்கள் என்பதை தெரிந்து கொண்ட முத்துகுமார், சந்தன், பாஸ்கர் மற்றும் சஜ்ஜன் ஆகிய 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 4 பேரையும் போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள். கொலை செய்தபின் ஹனிமேரி-முத்துகுமார் இருவரும் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

2 மறுமொழிகள்:

')) said...

//ஹனிமேரி//

ஹனிமேரி இப்போது சனிமேரி

')) said...

இது என்ன கொலைகார பத்தினிகளின் வாரமா? எல்லாமே கொலைகார பாதகிகளின் செய்தியாக இருக்கிறது. இதுகளை ஒழித்துக்கட்ட எந்த தெய்வம் அவதாரம் எடுத்து வரவேண்டுமோ. வருகின்ற தெய்வமும் முன்ஜhமின் எடுத்துக்கொண்டு தான் இந்தியாவிற்கு வரவேண்டும். ஏனென்றhல் நம்ம ஊர் சட்டம் காசுக்காக கடவுள் மீது கூட பொய் 498A கேஸ் போட தயங்கமாட்டார்கள்.