லாரி டிரைவரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி

ராசிபுரம் அருகே லாரி டிரைவரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றதாக அவரது மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வட்டூர் குட்டகாரனூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). லாரி டிரைவர். இவரது மனைவி அமிர்தவள்ளி (32). இவர்களுக்கு அழகரசன் (17) என்ற மகன் உள்ளான். கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத் தன்று குடிபோதையில் கணேசன் வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைதொடர்ந்து கணேசன் தூங்கி விட்டார்.

நள்ளிரவு நேரத்தில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த கணேசன் தன் மீது பெட்ரோல் ஊற்றப்படுவதை அறிந்து , திடுக்கிட்டு எழும்ப முயற்சி செய்தார்.
அப்போது அவரது கை, கால்கள் படுத்திருந்த கட்டிலோடு கட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அருகில் இருந்த மனைவி அவர் மீது தீ வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

வலி தாங்க முடியாமல் கணேசன் எழுப்பிய சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் உயிருக்கு போராடிய கணேசனை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணேசனின் மனைவி அமிர்தவள்ளி, மகன் அழகரசன் ஆகியோரை கவூது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.