குழந்தையைக் கடத்திச் சென்ற மனைவி

சென்னை வேப்பேரியில் வசிப்பவர் பாலாஜி (வயது 30). அசோக் லைலேண்டு நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றுகிறார். இவரது மனைவி பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடால் பிரிந்து வாழும் இவர்கள், விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளனர்.

இந்த நிலையில், குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்ற பிரச்சினை ஏற்பட்டது. குழந்தை பாலாஜியிடம் இருக்க வேண்டும் என்றும், ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை குழந்தையை மனைவியிடம் கொடுக்க வேண்டும் என்றும் பாலாஜிக்கு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதன்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குழந்தையை பாலாஜியின் மனைவி வந்து பார்த்து செல்வார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பாலாஜி வேப்பேரி போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று குழந்தையை பார்க்க அழைத்து சென்ற தனது மனைவி குழந்தையோடு காணாமல் போய்விட்டதாகவும், குழந்தையை கடத்தி சென்றுவிட்டதாகவும், குழந்தையை மீட்டுத் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த மனு மீது இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.