காதல் எனும் மாயை!

சென்னை குடும்பநலக் கோர்ட்டுகளில் நேற்று ஒரே நாளில் 9 விவாகரத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

காதலர் தினம் என்பது யாரிடமும் கேட்காமல் நாட்டுக்குள் நுழைந்துவிட்ட நவீன நாகரீகமாகும். காதலர்களுக்கு இந்த தினம் கொண்டாட்டமாக அமைந்தாலும், பெற்றோருக்கு இது கஷ்ட தினமாகத்தான் தோன்றும்.

காதல் பற்றிய தெளிவான கருத்து இதுவரை கூறப்படவில்லை என்பதால், அதுபற்றி எடுக்கும் சினிமா படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுவிடுகின்றன. பல உணர்ச்சிகளின் கலவையாக இருக்கும் காதல், அந்தந்த காலகட்டங்களில் அனைவரின் மனதிலும் புகுந்து குத்தாட்டம் போட்டுவிடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக கேள்விப்பட்ட காதல், இன்று தெருவுக்கு தெரு மறைவில் நிற்கிறது.

மல்லுக்கட்டும் காதலர்கள்

பெரும்பாலான காதல், திருமணத்தில் முடிகின்றன. அப்படிப்பட்ட காதல் திருமணங்களும் பெரும்பாலும் கோர்ட்டுகளில் முடிந்து விடுகின்றன. தற்போது கோர்ட்டுகளில் குவியும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை, மிகுந்த ஆச்சரியத்தையும், அச்சத்தையும் எழுப்புகின்றன. இவைகளில் பெரும்பாலான வழக்குகளில், `முன்னாள்' காதலர்கள்தான் மல்லுக்கட்டுகின்றனர் என்பது இன்னும் வியப்பு.

சென்னையில் விவாகரத்து வழக்குகளை விசாரிப்பதற்காக 3 குடும்ப நலக்கோர்ட்டுகள் உள்ளன. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கோர்ட்டுகளில் ஆண்டுக்கு ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, அதிகபட்சமாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 3 ஆயிரமாக இருந்தது.

கடந்த ஆண்டில்...

ஆனால் கடந்த 2008-ம் ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 905 விவாகரத்து வழக்குகள் தாக்கலாகியுள்ளன. மாதமொன்றுக்கு அதிகபட்சம் 412 வழக்குகளும், குறைந்தபட்சம் 250 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
அதாவது சராசரியாக மாதம் ஒன்றுக்கு 350 வழக்குகளும், நாளொன்றுக்கு 17 வழக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன. காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 412 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இவற்றில் காதல் திருமணங்கள் ஏராளமாக உள்ளன.

5-வது நாளில் வந்த மனு

இந்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து வழக்கு ஒன்று, கோர்ட்டு ஊழியர்களை வியப்பில் ஆழ்த்தியது. சென்னையில் 23.1.09 அன்று (வெள்ளிக்கிழமை) நடந்த திருமணம் அது. 27-ந் தேதி காலையிலேயே மணமகன் தனது கையில் விவாகரத்து மனுவுடன் முதல் ஆளாக கோர்ட்டுக்கு வந்துள்ளார். மனுவைப் பார்த்த ஊழியருக்கு அதிர்ச்சி.

`திருமணம் ஆகி 5 நாள் கூட ஆகவில்லையே, இவ்வளவு சீக்கிரமாக விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு வந்து விட்டீர்களே', என்று கேட்டு இருக்கிறார். அதற்கு மணமகன், `சீக்கிரமா? தாமதமாக கோர்ட்டுக்கு வந்ததாக நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். 24 (சனிக்கிழமை), 25 (ஞாயிற்றுக்கிழமை), 26 (குடியரசுத் தினம்) ஆகிய தேதிகளில் விடுமுறை வந்துவிட்டதால் இவ்வளவு பிந்தி வரவேண்டியதாகி விட்டது. இல்லாவிட்டால் திருமணமான மறுநாளே மனுவோடு வந்து இருப்பேன்' என்று அந்த மணமகன் கூறி இருக்கிறார்.

மனைவிகளாகும் மாணவிகள்

மணமக்களின் மணமாலை கூட முழுவதுமாக வாடி முடிவதற்குள், இவர்களின் மணவாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது. இதுபோல் பல கல்லூரி மாணவிகள் சிலர், `திடீர்' மனைவிகளாகவும், முன்னாள் மனைவிகளாகவும் மாறிக் கொண்டு இருக்கின்றனர். குடும்பத்தையும், கடமையையும் மறந்து, அவர்களின் வயதையொத்த நண்பர்களின் ஆலோசனையின்படி, காதலனுடன் எங்காவது சென்று பதிவுத் திருமணம் செய்யும் மாணவிகளின் எண்ணிக்கை இன்று அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற திருட்டுத் தாலிகளை பெற்றோர் அல்லது உறவினர்கள் கண்டுபிடித்து விடுவதால் நெருக்கடி காரணமாக வேறு வழியில்லாமல் விவாகரத்துக்கு வரும் மாணவி (மனைவி)களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. வரும்காலத்தில் பெற்றோருக்கு இது மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.

நடிகைகளும் விவாகரத்தும்

விவாகரத்துக்கு வயதும் ஒரு தடையல்ல. 50 வயதைத் தாண்டிய பிறகு விவாகரத்து செய்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் இருக்கின்றனர். சென்னை கோர்ட்டில் தற்போது வீடியோ கான்பரன்சிங் என்ற தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம், வெளிநாடுகளில் உள்ள மணமக்களுக்கு விவாகரத்து வழக்கில் தீர்ப்பளிக்கப்படுகிறது.

காதலித்து திருமணம் செய்துகொண்ட சினிமா நடிகர்களும் விவாகரத்துக்கு தப்பவில்லை. ராமராஜன்-நளினி, பார்த்திபன்-சீதா இவர்களும் அடக்கம். ஸ்ரீவித்யா-ஜார்ஜ், ஊர்வசி-மனோஜ், ஹீரா-புஸ்கர்நட், சொர்ணமால்யா-அர்ஜுன், வனிதா-ஆனந்த் ஆகியோரும் மணவாழ்க்கையை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். சுகன்யா-ஸ்ரீதர், பிரசாந்த்-கிரகலட்சுமி, சரிதா-முகேஷ், மீராவாசுதேவன்-விஷால் ஆகிய ஜோடிகள் தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர். காதல் பரிமாணத்தை வளர்க்கும் சினிமா, டி.வி. தொடர்களால், இளம் உள்ளங்கள் கெட்டு, இறுதியில் கோர்ட்டுக்கு கொண்டு வந்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

காதலர் தினத்துக்கு அர்ப்பணம்

இந்த ஆண்டிலும் கடந்த ஆண்டைப் போலவே விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சென்னை குடும்பநல கோர்ட்டு வட்டாரம் தெரிவித்தது. நேற்று மட்டும் தாக்கல் செய்யப்பட்ட 9 வழக்குகளில் (வக்கீல் புறக்கணிப்புப் போராட்டம் இருந்தாலும்) பெரும்பாலான வழக்குகள், காதல் மணம்புரிந்தோரால் தாக்கல் செய்யப்பட்டன. காதலர் தினத்துக்காக இதை அர்ப்பணித்து இருப்பார்களோ, என்னவோ?

நன்றி - தினத்தந்தி 14-02-2009

2 மறுமொழிகள்:

')) said...

மனித இனம் அழியாமல் இருக்க இயற்கை கொடுத்த காம இச்சையை நாகரீக வளர்ச்சியால் காதல் ஆக்கி கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாற்றியது சமுதாயம். மீண்டும் இப்போது அதில் காதல் மறைந்து காமம் மட்டும் இருப்பதால் அது ஒரு வேடிக்கையாக மாற்றப்பட்டு நடுத்தெருவில் கூத்தடித்து மகிழும் ஒரு நாள் கேளிக்கையாக மாற்றப்பட்டு விட்டது. பெற்றேhர்களும், சமுதாயமும் இளைய தலைமுறைக்கு பல நல்ல விஷயங்களை போதிக்க மறந்து விட்டனர் அதனால் இன்று கோர்ட்டுகளில் பல பொய் வரதட்சனை கேசுகளும், திருமண முறிவு கேசுகளும் வாழ்க்கையின் உண்மை தத்துவத்தை மறந்து காசுக்காக குவிந்து கிடக்கின்றன. அரசாங்கமும் குடும்ப அழிவுமுறையை ஊக்குவிக்கிறது. அரசன் எவ்வழியோ நாடும் அவ்வழியில் தான் செல்லும். உங்களை ஆள்பவர் யார் என்று யோசித்துப் பாருங்கள்.

')) said...

மிகச்சரியாக சொன்னிர்கள் பாமரன்