'டிவி'பார்க்காதே என திட்டிய மாமியாரை கொலை செய்த மருமகள்

ஏப்ரல் 30,2009 தினமலர்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே "டிவி' பார்க்கும் தகராறில் தன்னை திட்டிய மாமியாரை, கட்டையால் அடித்துக் கொலை செய்த மருமகளும், கொலையை மறைத்த மகனும் கைதுசெய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த குப்பனாபுரம் கூலித்தொழிலாளி உடையார்(38), அவரது மனைவி பொன்னுத்தாய்(33), இரு குழந்தைகள் உள்ளனர்.


பொன்னுத்தாய் "டிவி'நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பார்.அதுதொடர்பாக அவருக்கும் மாமியார் ஆறுமுகத்தாயிக்கும் (55) அடிக்கடி தகராறு ஏற்படும்.


கட்டையால் அடித்துக் கொலை:


நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பொன்னுத்தாய் "டிவி' பார்த்துக்கொண்டிருந்தார். எரிச்சலடைந்த ஆறுமுகத்தாய், ""வீட்டுவேலைகளை பார்க்காமல் "டிவி' மட்டும் பார்த்தால் எப்படி' 'என கேட்டுள்ளார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பொன்னுத்தாய், அங்கிருந்த கட்டையால் மாமியார் ஆறுமுகத்தாயின் பின் தலையில் ஓங்கி அடித்தார். அதில் காயமடைந்த ஆறுமுகத்தாய் இறந்துபோனார்.

இயற்கை மரணம் என்று கூறி ஆறுமுகத்தாயின் உடல் இறுதிசடங்கிற்கு கொண்டு செல்ல தயாராக இருந்த நேரத்தில் தகவலறிந்து அங்கு வந்த கடம்பூர் இன்ஸ்பெக்டர் பீர்முகைதீன், உடலைகைப்பற்றினார். மாமியாரை கொலை செய்த மருமகள் பொன்னுத் தாய், அவர் இறந்ததை போலீசுக்கு தெரியாமல் மறைக்க முயன்ற ஆறுமுகத்தாயின் மகன் உடையாரை கடம்பூர் போலீசார் கைது செய்தனர்.