வாலிபரின் கையை உடைத்த பெண் போலீஸ்

செய்தி: தினத்தந்தி - 5 ஜூலை, 2008

போலீஸ் நிலையத்தில் வாலிபர் கை உடைப்பு: பெண் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரை விசாரிக்க வேண்டும்போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கையே உடைந்து போகும் அளவுக்கு அடித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரை விசாரித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பழகியதால் திருமணம்

சென்னை புதுப்பேட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் குருவையா. இவர் மனைவி நரம்மா. இவர்களுடைய மகன் ரோமையா (வயது 24). இவர் வசிக்கு வீட்டருகே சுப்புலட்சுமி வசித்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். இவரது மகள் ராதிகா (20).

ராதிகாவுடன் ரோமையா பழகி வருவதால், 2 பேருக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சுப்புலட்சுமி புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து 27.9.07 அன்று 2 பேருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது. அதன் பிறகு 5 நாட்கள் வேறொரு இடத்தில் 2 பேரும் குடும்பம் நடத்தினர்.

விவாகரத்து வழக்கு

பின்னர் ரோமையா, சென்னை குடும்பநல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். தனக்கு சிலர் கட்டாயத் திருமணம் செய்து விட்டதாக வழக்கில் கூறி இருந்தார். இந்த நிலையில் ரோமையா மீது சிந்தாதிரிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் ராதிகா வரதட்சணைக் கொடுமை புகார் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ரோமையா மனு
தாக்கல் செய்தார். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் 3 வாரங்கள் தொடர்ந்து அவர் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 6 நாட்கள் தொடர்ந்து ரோமையா கையெழுத்து போட்டு வந்தார்.

லத்தியால் அடி

இந்த நிலையில் ஐகோர்ட்டை மீண்டும் ரோமையா அணுகி, முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்தும்படி கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.ரகுபதி விசாரித்தார். ரோமையா தரப்பில் வக்கீல் உதயபானு ஆஜரானார். முன்ஜாமீன் பெற்று 6 நாட்களுக்குள் நிபந்தனையை தளர்த்த முடியாது என்று நீதிபதி கூறினார்
.
நிபந்தனையின் அடிப்படையில் கையெழுத்து போடச் சென்ற போது, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, ரோமையாவிடம் , ``இன்ஸ்பெக்டர் கட்டி வைத்த பெண்ணை நீ விவாகரத்து செய்யக் கூடாது'' என்று கூறி லத்தியால் அடித்ததாகவும், இதனால் உடைந்து போகும் அளவுக்கு கையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரோமையா தரப்பில் கூறப்பட்டது.

கோர்ட்டில் விசாரணை

அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நவனீதம், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி ஆகியோரை கோர்ட்டுக்கு வரவழைத்து நீதிபதி விசாரணை நடத்தினார். வரதட்சணை கொடுமை வழக்கில், எப்.ஐ.ஆர். போடாமல் விசாரித்து வருவதாக இன்ஸ்பெக்டர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. எப்.ஐ.ஆர். போடாமல் விசாரணை நடத்துவதை நீதிபதி கண்டித்தார்.

மேலும் அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கும் குறையாத அதிகாரியை போலீஸ் கமிஷனர் நியமித்து, நவனீதம், விஜயகுமாரி ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதுதொடர்பாக அறிக்கை தயாரித்து, 7-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது

1 மறுமொழி:

')) said...

இது போல் தான் விசாரனை என்ற பெயரில் என்னையும் எனது நண்பனையும் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று அங்கு என்னை மிரட்டியும் எனது நண்பனை வெறித்தனமான அடித்தும் கொடுமைபடுத்தினார்கள்...

இதில் கொடுமை என்னவென்றால் நான் மாப்பிள்ளையாம் அதான் என்னை போலீஸ் அடிக்கவில்லையாம் எனது நண்பன் அவருடைய (திரு.சவுந்தர்ராஜன் 8வது வார்டு கவுன்சிலர் பெருங்களத்தூர்) மகளுடைய வாழ்க்கையை(??) கெடுத்துவிட்டானம் அதான் அடித்தார்களாம்

ஆனால் காவல்துறையிலோ நீதிமன்றத்திலோ சாட்சி வேண்டும் இதையேல்லாம் நிருபிக்க... அதனால் தான் எனது நண்பனை இரத்தம் வரமால் மற்றும் கைகால் உடையாமல் அடித்தார்கள் திறமைசாலிகள்