ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது


மனைவியை பிரிப்பதாக கணவரிடமும், கணவரை சேர்த்து வைப்பதாக மனைவியிடமும் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு


சென்னை, ஜுலை.2-
சென்னையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.


கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது


சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் சியாமளா. இவரது கணவர் பெயர் சதீஷ்குமார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவருக்கும், சியாமளாவுக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சதீஷ்குமார் லண்டனில் வேலை பார்க்கிறார். இனிதாக இல்லற வாழ்க்கை நடத்திய இவர்களுக்குள் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சதீஷ்குமார், இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்துள்ளதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், சியாமளா அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி (வயது 56) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். தினமும் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி, ஜாமீன் நிபந்தனைப்படி கையெழுத்து போட்டு வருகிறார்.


லஞ்ச புகார்


இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி, சதீஷ்குமாரிடமும், சியாமளாவிடமும் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. சதீஷ்குமாரை சேர்த்து வைப்பதாக சியாமளாவிடமும், சியாமளாவை பிரித்து வைப்பதாக சதீஷ்குமாரிடமும் பணம் கேட்டு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சியாமளாவிடம் ரூ.25 ஆயிரம் பணம் கேட்டு, பின்னர் ரூ.10 ஆயிரமாவது தரவேண்டுமென்று ராஜலட்சுமி மிரட்டியுள்ளார்.


இது தொடர்பாக சியாமளா, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு இயக்குனர் நடராஜன் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சூப்பிரண்டு ஆசியம்மாள், துணை சூப்பிரண்டு அலிபாஷா ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ் ஜோசப், வேதரத்தினம் ஆகியோர் இதுதொடர்பாக விசாரித்தார்கள்.


கைதானார்


நேற்று சியாமளாவிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சென்னை நகரில் இந்த ஆண்டு இதுவரை லஞ்ச புகாரில் 3 இன்ஸ்பெக்டர்களும், 2 சப்-இன்ஸ்பெக்டர்களும், 2 போலீஸ் ஏட்டுகளும் கைதாகியுள்ளனர்.


~ செய்தி: தினத்தந்தி. படம்: Times of India (02-07-2008)


மனைவி புகார் கொடுத்தால் போதும்; கணவன் கைது செய்யப்படுவான் என்னும் சட்ட நடைமுறை தொடர்ந்து இருக்கும் வரை இதுபோன்ற பல அராஜகங்களை வரும் நாட்களில் எதிர் பார்க்கலாம்.


ஆண்களே, இப்ப்டியும் ஒரு திருமணம் உங்களுக்குத் தேவையா!!