செய்தி: தினமலர் - ஜூலை 15,2008
திருவள்ளூர் : மாமியாரையும், கணவனையும் கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவிமற்றும் கள்ளக்காதலனுக்கு விரைவு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மாதவரம் பால் பண்ணை அசிசி நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் அருள்நாதன் (42). தனியார் தொண்டு நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மேரி சேவியர் (32). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அருள்நாதனுடன் அவரது தாய் சவரியம்மாள் (80) வசித்து வந்தார். அவர்களது சொந்த கிராமத்தில் வேலை இல்லாமல் இருந்து வந்த அருள் நாதனின் அண்ணன் மகன் டேவிட் ஆரோக்கியராஜ் (26) என்பவரை அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்தார்.
கம்ப்யூட்டர் நிறுவனமொன்றை டேவிட் துவங்கினார். அங்கு கம்ப்யூட்டர் பயிற்சி பெற ஆசிரியை மேரி சேவியர் சென்று வந்தார். அப்போது, அவர்களுக்குள் கள்ள உறவு ஏற்பட்டது. இதை அறிந்த அருள் நாதனின் தாய் அவர்களை கண்டித்தார். தனது மகனிடமும் இதுகுறித்து தெரிவித்தார். அருள்நாதனும் மனைவியையும், டேவிட்டையும் கண்டித்தார். இதனால், ஆத்திரமடைந்த மனைவியும், டேவிட்டும் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டனர்.
இந்நிலையில், 2006ம் ஆண்டு மே 26ம் தேதி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சவரியம்மாள் இறந்ததாக கூறி, பிணத்தை அவரது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டி நாயக்கன்பள்ளிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். அதன் பிறகு அடுத்த மாதம் 16ம் தேதி அதிகாலை அருள்நாதன் காயங்களுடன் இறந்தார்.
இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கணவனை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளை அடித்துச் சென்று விட்டதாக மேரி கூறினார். ஆனால், போலீசார் விசாரணையில், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது தெரிந்தது. மேலும் விசாரணையில், மேரியும், டேவிட்டும் சேர்ந்து தான் அருள்நாதனை கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் அருள் நாதனின் சகோதரர் ராயப்பன் என்பவர் போலீசில் தனது தாய் சவரியம்மாள் சாவில் மர்மம் உள்ளதாகவும் விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தார்.
இதை அடுத்து போலீசார் சவரியம்மாள் புதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று அங்கு அதிகாரிகள் முன்னிலையில் பிணத்தைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பிணத்தின் தலையில் ஆழமான காயம் இருப்பது தெரிந்தது. இதை அடுத்து மீண்டும் மேரி மற்றும் டேவிட் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தான் திட்டமிட்டு சவரியம்மாளை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். டேவிட்டின் சித்தி தான் மேரி சேவியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை அடுத்து மாமியார் மற்றும் கணவனை கொலை செய்த வழக்கில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இவ்வழக்கு நீதிபதி சேகர் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட டேவிட் ஆரோக்கியராஜ் மற்றும் மேரி சேவியர் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் மாதவரம் பால் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜோசப் மற்றும் அசோகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அரசு தரப்பு வக்கீல் ஸ்ரீதர் ஆஜராகி வாதாடினார்
மாமியாரையும் கணவனையும் கொன்ற மனைவிக்கு ஆயுள் தணடனை
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
உங்கள் கருத்தைத் தெரிவிக்க