பெண் போலீஸாருக்கு ஐகோர்ட்டு சாட்டையடி!

விசாரணைக்கு அழைத்து வருபவர்களை பெண் போலீசார்
துன்புறுத்தக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு

விசாரணைக்காக அழைத்து வருபவர்களை பெண் போலீஸ்
நிலையத்தில் துன்புறுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அடித்ததாக புகார்

முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி ரோசையா என்பவர், சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். சிந்தாதிரிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து கையே உடைந்து போகும் அளவிற்கு தன்னை பெண் போலீஸ் அதிகாரிகள் அடித்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பிரச்சினை குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஒருவரை நியமித்து, விசாரித்து ஐகோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்யவேண்டுமென்று நீதிபதி ஆர்.ரகுபதி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

கண்டனம்

இந்த மனு நீதிபதி ஆர்.ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மகளிர் போலீஸ் நிலையத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று சில விதிமுறைகளை வகுத்து இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:-

மகளிர் போலீஸ் நிலையங்கள் சமரச மையமாக செயல்பட
வேண்டும்.

வயதானவர்களையும், கைக்குழந்தையுடன் வரும் பெண்களையும், சிறுவர்களையும், கர்ப்பிணி பெண்களையும் அவர்களது வயது, உடல் நலம் வித்தியாசம் பார்க்காமல் விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையங்களுக்கு வரவழைத்து கொடுமைப்படுத்துவதாகவும், அவர்களைத்
தாக்குவதாகவும் புகார்கள் வருகின்றன. தேவையில்லாமல் கைது நடவடிக்கைகளில் இறங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன. இந்த போக்கு மாற வேண்டும். இதன் மூலம் சட்டம் கொண்டு வந்த நோக்கமே பாதிக்கப்பட்டுவிட்டது.

சாதாரண பிரச்சினையை கூட மகளிர் போலீஸ் நிலையத்தில் பெரிதாக்கி விடுகிறார்கள்.

புகார் உண்மையானதுதானா என்பதை ஆராயாமலேயே மேல் நடவடிக்கைகளில் இறங்குகின்றனர். விசாரணை என்ற பெயரில் குடும்பத்தையே துன்புறுத்துகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவரை துன்புறுத்தும் நோக்கில் சில கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த கைது நடவடிக்கைகளும் வாரத்தின் கடைசி நாளான வெள்ளியன்று மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இரண்டு நாட்கள் அவர்கள் ஜாமீனில் வரமுடியாது.

கணவன்-மனைவி பிரச்னைகளை போலீஸ் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அதனால் அவர்கள் மீண்டும் ஒன்று சேர வழி பிறக்கும். இத்தகைய வழக்குகளை பெண் போலீஸார்தான் திறமையாகக் கையாள்வர் என்று சட்டம் இயற்றுபவர்கள் கருதியுள்ளனர். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்கள்
எல்லாம் கணவன் மனைவி ஒன்று சேரவதற்கான சமரச மையங்களாக இருக்கும் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடைமுறை அனுபவத்தைப் பார்த்தால், சிறிய சிறிய பிரனைகளுக்குக் கூட பெரிய அளவிலான குற்றம் என்று வர்ணம் பூசப்படுகிறது.

கணவனுக்கும் குடும்பத்தினருக்கும் எதிராக குற்றச் சாட்டுக்களைக் கூறுமாறு பெண்கள்ஊக்கப்படுத்தப் படுகின்றனர். இதனால் தேவையில்லாமல் கைது நடவடிக்கைகளில் இறங்கி, குடும்பத்தினரையும் போலீஸ் நிலையங்களுக்கு இழுக்கின்றனர். இதனால் வரதட்சிணைத் தடுப்புச் சட்டத்தின் நோக்கமே
பாழடிக்கப் படுகிறது.

அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் சட்ட விதிகள் மீரப்படுவதாக அடிக்கடி குற்றச் சாட்டுக்கள் வருவதால் அரசுக்கு கீழ்க்கண்ட பரிந்துரைகளை தெரிவிக்கிறேன்:-

  • வரதட்சணை சாவு, தற்கொலை போன்ற கடுமையான குற்றங்களை தவிர மற்ற புகார்களை வரதட்சணை தடுப்பு அதிகாரிகள் அனுமதி பெற்றுத்தான் பெண் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
  • வயதானவர்கள், உடம்புக்கு சரியில்லாதவர்கள், மைனர்கள் போன்றோரை பெண் போலீசார் கைது செய்யக்கூடாது.
  • இப்படிப்பட்டவர்களை கைது செய்யவேண்டுமென்றால் போலீஸ்
    சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்து அவர்களது அனுமதி பெற்றுத்தான் கைது செய்யவேண்டும்.
  • ஒருவர் தப்பி ஓடிவிடுவார் என்று இருந்தால் கூட, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதற்கான உத்தரவை கோர்ட்டில் பெற்றபின் அவரைக் கைது செய்யலாம்.
  • முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும்.
  • விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வருபவர்களை பிரம்பால், கையால் தாக்க கூடாது. அதே சமயம், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு சீதன பொருட்களை உடனடியாக பெற்றுத் தந்துவிட வேண்டும்.
  • கோர்ட்டு நடவடிக்கை மற்றும் சட்டம் பற்றித் தெரிந்துகொள்ள பெண் போலீசாருக்கு தேவையான பயிற்சி முகாம் நடத்த வேண்டும். இதற்காக டி.ஜி.பி. தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
  • மகளிர் போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசாருக்கு தனி சீருடை வழங்கலாம். புகார்தாரர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குழந்தையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அரசு இல்லங்களில் தங்க அனுமதிக்கலாம்.


இவ்வாறு நீதிபதி தனது இடைக்கால உத்தரவில்
குறிப்பிட்டிருந்தார்.

செய்தி: தினமலர், தினத்தந்தி