பொய்யான வரதட்சணை புகார்: திருப்பத்தூர் அருகே மகனை கொன்று தாய் தற்கொலை. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
~ செய்தி: தினத்தந்தி - திருப்பத்தூர் (வேலூர்) , ஜுலை.11- 2008
திருப்பத்தூர் அருகே பொய்யான வரதட்சணை புகாரால் அவமானம் அடைந்த பெண், தனது மகனை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ப.முத்தம்பட்டி அண்டிவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 28). கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (30). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். கடந்த 6-ந் தேதி குடிபோதையில் பழனி வரதட்சணை கேட்டு மனைவி கீதாவை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கீதா திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரியகலா மற்றும் போலீசார் கீதாவின் கணவர் பழனி, மாமனார் தவமணி (55), மாமியார் அமுதா (46), பழனியின் அக்காள் உமாமகேஸ்வரி (31), அம்மு ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் பழனி, தவமணி, அமுதா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தாய், சேய் தற்கொலை
உமாமகேஸ்வரி, தன் மீது வரதட்சணை புகார் கொடுத்தது குறித்து மனவேதனை அடைந்தார். மேலும் கணவர் இறந்து விட்டதால் தனது மகன்கள் ஹேமநாத் (15), அமர்நாத் (12) ஆகியோரின் நிலை குறித்து கவலையடைந்த உமாமகேஸ்வரி, வாழ்வதை விட சாவதே மேல் என்று முடிவு செய்தார். அதன்படி தனது இளைய மகன் அமர்நாத்தை சேலையில் தூக்கில் தொங்கவிட்டார். சிறிது நேரத்தில் அவன் பரிதாபமாக செத்தான். பின்னர் தானும் அதே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வீட்டை சோதனை செய்ததில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில், "தனது சாவுக்கு காரணம் நாத்தனார் கீதா தான் என்றும், மூத்த மகன் ஹேமநாத்தை தம்பி பழனிதான் காப்பாற்ற வேண்டும்'' என்றும் எழுதப்பட்டு இருந்தது. போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்ததும், தாய்- மகன் உடலை எடுத்துச் செல்லும் படி உறவினர்களிடம் போலீசார் கூறினர். அதற்கு, இறந்தவருக்கு கணவன் கிடையாது, தாய், தந்தை, தம்பி ஆகியோரை போலீசார் கைது செய்து விட்டனர். எனவே உடலை வாங்கிச் செல்ல மாட்டோம் என்றும், உமா மகேஸ்வரி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கீதாவை கைது செய்ய வேண்டும், கீதா கொடுத்த பொய்யான வரதட்சணை புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து 3 பேரை கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
எம்.எல்.ஏ., போலீசார் சமரசம்
அப்போது ஆஸ்பத்திரிக்கு வந்த சூரியகுமார் எம்.எல்.ஏ., ஒன்றிய குழுத் தலைவர் ராஜமாணிக்கம், தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் குலோத்துங்கன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மனோகரன், சுரேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பூஞ்சோலை, பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் உமாமகேஸ்வரியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கீதா கொடுத்த வரதட்சணை கொடுமை வழக்கை பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரியகலாவை, வேலூர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி விட்டோம் என்றும், கீதாவை உடனடியாக கைது செய்கிறோம் என்றும், உமாமகேஸ்வரியின் தகப்பனார் தவமணி, தாயார் அமுதா, தம்பி பழனி ஆகிய 3 பேரையும் நிபந்தனை ஜாமினீல் விடுதலை செய்வதாகவும் போலீசார் கூறினார்கள். பின்னர் அவர்கள் உமாமகேஸ்வரி, அவரது மகன் அமர்நாத் ஆகியோரது உடலை பெற்றுச் சென்றனர். மேற்கண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
--------------------
இப்போது சொல்லுங்கள், இந்த 498a சட்டம் பெண்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்கிறதா, பெருங்கேடு விளைவிக்கிறதா என்று!
0 மறுமொழிகள்:
உங்கள் கருத்தைத் தெரிவிக்க