கணவருக்கு 'ஜீவனாம்சம்' ரூ.8 லட்சம் தந்த மனைவி

படிக்க வைத்த கணவருக்கு மனைவி ரூ.8 லட்சம் நஷ்டஈடு வழங்கினார்.
சென்னையில் நடந்த விவாகரத்து வழக்கில் கோர்ட்டு தீர்ப்புபடி நடவடிக்கை.
~ செய்தி: தினத்தந்தி சென்னை, ஜூலை.18, 2008
விவகாரத்து வழக்குகள்:
சென்னையில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் விதவிதமான முறையில் தற்போது விவாகரத்து வழக்குகள் வருகின்றன. கணவர் கொடுமைப் படுத்தியதாக மனைவியால் தொடரப்படும் வழக்கு, காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளில் மனைவி, கணவன் சந்தேகப்படுவதால் விவாகரத்து வழங்க வேண்டும் என்று தொடரப்படும் வழக்குகளும் அதிகரித்து வருகின்றன.
சாதாரணமாக படிப்பு குறைவாக உள்ள குடும்பத்தில் இருந்து இதுபோன்ற வழக்குகள் அதிகம் வருவதில்லை. அதிகம் படித்து, அதிகம் சம்பளம் பெறுவோர் இடையேதான் இதுபோன்ற வழக்குகள் தொடரப்படுகின்றன.
இதுபோன்ற வழக்குகள் அதிகரித்து வருவதால், சென்னையில் கூடுதலாக 2 குடும்ப நல கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என்று பெண்கள் வக்கீல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மனைவியை படிக்க வைத்தார்
சென்னை குடும்ப நல கோர்ட்டில் வித்தியாசமான வழக்கு ஒன்று வந்தது. சென்னையை சேர்ந்த பட்டதாரி பெண்ணும், ஆந்திராவை சேர்ந்த பட்டதாரி வாலிபரும் ஒருவரையருவர் நேசித்தனர். இவர்களுடைய நேசம் காதலாக மலர்ந்து இறுதியில் 2000-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். பட்டதாரியான தனது மனைவியை பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு படிக்க கணவர் என்ற முறையில் தேவையான உதவிகளை செய்துவந்தார். அந்த பெண்ணும் கணவர் விருப்பத்திற்கு ஏற்ப வெற்றிகரமாக அந்த படிப்பை முடித்தார். அவருக்கு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர் பதவி கிடைத்தது.
கணவருக்கு 8 லடசம்- கோர்ட்டு தீர்ப்பு
இருவரும் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். காலப்போக்கில் அவர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இதனால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பிரிந்து வாழும் அவர்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இவர்களது விவாகரத்து வழக்கை, சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டு நீதிபதி விமலா விசாரித்தார்.
விசாரணையின் போது, எனது மனைவியை படிக்க வைக்க நான் படாதபாடு பட்டேன் என்று தெரிவித்தார். இறுதியில் தன்னை படிக்க வைத்ததற்காக கணவருக்கு ரூ.8 லட்சம் வழங்க மனைவி சம்மதித்தார். இதை கோர்ட்டு ஏற்று இருவருக்கும் விவாகரத்து செய்து வைத்தது.