குடும்ப வன்முறை புகாரில் மாமியாருக்கு விலக்கு

மும்பை: குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், குடும்பத்தில் உள்ள கணவன் மற்றும் ஆண் உறவினர் மீது தான் வழக்கு போட முடியும். மாமியார், நாத்தனார் போன்றவர்கள் மீது வழக்கு தொடர முடியாது!

மும்பையில் ஒரு வழக்கில் முலந்த் பெருநகர கோர்ட் அளித்த தீர்ப்பால் பெரும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக இப்படி ஒரு தீர்ப்பை இந்த கோர்ட் அளித்துள்ளது.

இனி வரும் வழக்குகளில் இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும்.

மும்பை முலந்த் பகுதியை சேர்ந்தவர் விஷால்; அவர் மனைவி பிரியங்கா. 2005ல் இவர்களுக்கு திருமணம் நடந்தது. கடந்தாண்டு இவர்களுக்கு இடையே மோதல் ஆரம்பித்தது. "என்னை என் கணவரும், அவரின் அம்மா ஷீலாவும் உடல், மனரீதியாக கொடுமைப்படுத்துகின்றனர்" என்று புகார் கூறி, பெருநகர கோர்ட்டில் வழக்கு போட்டார் பிரியங்கா. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் தேஷ்பாண்டே அதிரடி தீர்ப்பை அளித்தார்.

"குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் படி, கணவன் மற்றும் ஆண் உறவினர் மீது தான் வழக்கு போட முடியும். மாமியார், நாத்தனார் போன்ற பெண்கள் மீது இந்த சட்டத்தில் வழக்கு போட வழியில்லை" என்று கூறி, மாமியார் மீதான புகாரை நிராகரிக்க உத்தரவிட்டார். குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், 2006ல் கொண்டு வரப்பட்டது. குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்படும் போது, மனைவிக்கு பாதுகாப்பு அளிக்க இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

குடும்பத்தில் திருமணத்தின் மூலம் கணவனாக இருக்கும் ஆணோ, ஒன்றாக சேர்ந்து வாழும் "லிவ் இன் பார்ட்னரோ" வன்முறையில் ஈடுபட்டால், அந்த ஆண்கள் மீது வழக்கு போடலாம்" என்று தான் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. இதைச்சுட்டிக்காட்டிய மாஜிஸ்திரேட்,"பெண்கள் மீது இந்த சட்டத்தில் வழக்கு போட வழியில்லை என்பதால், விஷால் மீதான குற்றச்சாட்டு குறித்து மட்டும் வழக்கு விசாரணை நடக்கும்" என்று அறிவித்தார்.

இதுகுறித்து வக்கீல்கள் தரப்பில் கூறும்போது, "குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ், மாமியார், நாத்தனார்கள் ஆகிய குடும்பத்தில் உள்ள பெண்கள் மீது புகார் தாங்கிய மனுக்கள் குவிந்துள்ளன. இந்த தீர்ப்பால், இந்த பெண்கள், வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவர்" என்று தெரிவித்தனர்.

--------------

”மனரீதியான கொடுமை” - இதை மனைவி செய்வதில்லையா? கணவன் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றாலே அது ஒரு மனரீதியான கொடுமை என்று இந்த சட்டத்தில் கேசு போடுகிறார்கள். மனைவி கணவனை எவ்வளவு கொடுமை செய்தாலும் அவள்மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கமுடியாது.

இதுபோன்ற ஒருதலைப் பட்சமான, மோசமான, முட்டாள்தனமான சட்டம் வேறொன்று இருக்கமுடியுமா?