போலி வரதட்சணை புகார்களை கண்டித்து டிசம்பர் 6-ந் தேதி ஆண்கள் பாதுகாப்பு சங்கம் போராட்டம்

போலியாக வரதட்சணை புகார்களை பதிவு செய்யக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் டிச.6-ல் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

இது பற்றி ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் அருள்துமிலன், துணைத் தலைவர் லிங்கம் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

பொய்யான புகார்கள்

போலீஸ் நிலையங்களில், ஆண்களுக்கு எதிராக கொடுக்கப்படும் வரதட்சணை புகார்களில் பெரும்பாலானவை பொய்யானவையாக உள்ளது. வரதட்சணை கொடுமை ஒருபுறம் இருந்தாலும், வரதட்சணை புகார்கள், ஆண்களை பழிவாங்கவே பயன்படுத்தப்படுகிறது. அதற்காகத்தான் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தை தொடங்கியிருக்கிறோம். இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, விவாகரத்து பெற்ற ஆண்கள் பலரும் இதற்கு ஆதரவு தரமுன்வந்துள்ளனர்.

தற்போது இங்கு ஆண்களுக்கு, ஒருநாள் இலவச சட்ட முகாம் நடத்துகிறோம். இதில், போலியான வரதட்சணை வழக்குகள் எப்படி எதிர்கொள்வது என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை தருகிறோம்.

ஆண்கள் ஆணையம் வேண்டும்

போலீஸ் நிலையங்களில் போலியாக வரதட்சணை புகார்களை பதிவு செய்யக்கூடாது, போலியான புகார் என்று தெரிந்தால் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்; குடும்ப வன்முறை சட்டத்தில் திருத்தம் செய்யும்போது, ஆண்கள் ஆணையத்தை கலந்தாலோசிக்க வேண்டும்; சுயஉதவிக்குழுக்களில் உள்ள சிலர், குடும்ப ஆண்களுக்கு எதிராக குழு பெண்களுக்கு தவறான ஆலோசனை வழங்குகிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் டிச.6-ந் தேதி 2008 அன்று எங்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.

செய்தி: தினத்தந்தி