பீரில் விஷம் கலந்து கொலை செய்த கள்ளக்காதலி

திருச்சி, மார்ச்.31- 2009
பீரில் விஷம் கலந்து ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளரை கொலை செய்த கள்ளக்காதலியையும், அவருக்கு விஷ மருந்து கொடுத்து உதவிய ஹோமியோபதி டாக்டரையும் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே உள்ள செங்குறிச்சி - மேக்குடி கிராமத்திற்கு இடையில் உள்ள சிறிய பாலத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஆண் பிணம் கிடப்பதாக மணிகண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த இடத்தில் இருந்து பீர் பாட்டில், வாழைப்பழம், திராட்சை, தண்ணீர் பாட்டில் போன்றவைகளை போலீசார் கைப்பற்றினார்கள். பிரேத பரிசோதனையில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

இந்த விசாரணையில் தெரிந்த விபரங்கள் வருமாறு:-

திருச்சி கே.கே.நகர் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 65). இவர் மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு வீரம்மாள் (60) என்ற மனைவியும், இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

விராலிமலை கொடும்பாளூர் அருகே உள்ள ஊத்துக்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி (40). இவருடைய மனைவி சகுந்தலா (33). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். சகுந்தலா தனது கணவர் திருப்பதியை பிரிந்து திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆர்.எம்.எஸ். காலனியில் மகன்களுடன் வசித்து வருகிறார்.

சுந்தரமூர்த்திக்கும், சகுந்தலாவுக்கும் கடந்த 21/2 வருடமாக கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். சுந்தரமூர்த்தி தினமும் குடித்து விட்டு இரவு, பகல் என்று பாராமல் சகுந்தலாவிடம் செக்ஸ் தொந்தரவு கொடுத்து உள்ளார்.

சுந்தரமூர்த்தியின் செக்ஸ் சித்ரவதையை தாங்கி கொள்ள முடியாமல் இருந்த சகுந்தலா சுந்தரமூர்த்தியின் கை, கால்களை முடக்கி அவரிடம் இருந்து தப்பித்து விடலாம் என முடிவு செய்தார்.

அதன்படி சோமரசம்பேட்டை அருகே கோப்பு கிராமத்தில் உள்ள சித்த மருத்துவ டாக்டர் சந்திரசேகரிடம் சென்று விஷ மருந்து கேட்டார். அதற்கு அவர் வெள்ளைநிறம் உள்ள துத்தநாக மருந்தை கொடுத்துள்ளார்.

சுந்தரமூர்த்தி நேற்று முன்தினம் இரவு சகுந்தலாவின் வீட்டிற்கு வந்து இன்பமாக இருக்க அழைத்துள்ளார். சகுந்தலாவை தனியாக மோட்டார்சைக்கிளில் செங்குறிச்சி அருகே உள்ள சிறிய பாலத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சுந்தரமூர்த்தி ஒரு கூடையில் பீர் பாட்டில், வாழைப்பழம், திராட்சை, தண்ணீர் பாட்டில் போன்றவைகள் வாங்கி கொண்டுவந்தார்.

அவர் வைத்திருந்த பீரை எடுத்து குடித்தார். அப்போது சகுந்தலா நைசாக பேச்சுக் கொடுத்து சுந்தரமூர்த்திக்கு தெரியாமல் பீரில் துத்தநாக பவுடரை கலந்து விட்டார். அதை குடித்த சுந்தரமூர்த்தி வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார். சகுந்தலா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
மேற்கண்டவை யாவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை குறித்து மணிகண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து சகுந்தலாவையும், அவருக்கு விஷ மருந்து கொடுத்து உதவிய ஹோமியோபதி டாக்டர் சந்திரசேகரையும் கைது செய்தார்.