தூத்துக்குடி, மார்ச்.16- 2009.
ரூ.20 லட்சம் கொள்ளைபோனதாக நாடகமாடிய கூட்டுறவு வங்கி பெண் ஊழியர், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து ரூ.20 லட்சத்தை போலீசார் மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம் (வயது 42). இவருடைய மனைவி லீலா (35) விளாத்திகுளத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் அலுவலக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வங்கியின் வசூல் பணம் ரூ.20 லட்சத்தை விளாத்திகுளம் ஸ்டேட் வங்கியில் கட்டுவதற்கு சென்றதாகவும், அப்போது மர்ம ஆசாமி பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டதாகவும் லீலா விளாத்திகுளம் போலீசில் புகார் செய்தார்.
இதுதொடர்பாக போலீஸ் தனிப்படையினர் வழக்குப்பதிவு செய்து, லீலாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொள்ளை நடந்ததாக லீலா கூறியது பொய் என்பது தெரியவந்தது. பணத்தாசையில் அவரே பணத்தை மறைத்து வைத்துக்கொண்டு, கொள்ளைபோனதாக நாடகமாடியதுடன், பணத்தை கள்ளக்காதலனுக்கும் பங்கு போட்டு கொடுத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து லீலா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனக்கு 18 வயதில் திருமணம் நடந்தது. பிரவீன்குமார்(21), சந்திரமோகன்(20) என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் பாலிடெக்னிக்கில் படித்து வருகின்றனர். எனது கணவர் நீலமேகம் சிவகங்கையில் தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார்.
தூத்துக்குடியில் இருந்து தாப்பாத்திக்கு அரசு பஸ்சில் வரும்போது நடத்துனராக பணிபுரிந்த நெல்லையை சேர்ந்த முருகன்(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் உல்லாசமாக இருப்பதற்கு பணம் எப்படி சம்பாதிப்பது என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.
கடந்த 3 ஆண்டுகளாக விளாத்திகுளம் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வருகிறேன். வங்கியில் தினமும் வசூல் ஆகும் பணத்தை நானும் மற்றொரு பணியாளரும் சேர்ந்துதான் ஸ்டேட் வங்கியில் கட்டுவோம்.
சம்பவத்தன்று நான் தனியாக வங்கிக்கு ரூ.20 லட்சம் வசூல் பணத்தை கட்டுவதற்கு சென்றேன். அப்போது வங்கியின் வாசலில் பணப்பையை மர்ம ஆசாமி பறித்துக்கொண்டு சென்றுவிட்டதாக கூச்சலிட்டேன். அதன்பின்பு விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் என்னிடம் விசாரணை செய்ததில் கொள்ளை நடந்ததாக நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு வாக்குமூலத்தில் லீலா கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் லீலாவையும், அவரது கள்ளக்காதலன் கண்டக்டர் முருகனையும் கைது செய்தனர். லீலாவிடம் இருந்து ரூ.15 லட்சத்தையும், அவர் கள்ளக்காதலன் முருகனிடம் கொடுத்து இருந்த ரூ.5 லட்சத்தையும், பறிமுதல் செய்தனர். பின்பு 2 பேரையும் விளாத்திகுளம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு பாண்டியராஜ், 2 பேரையும் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
கொள்ளையும் கள்ளக் காதலும்
குறிச்சொற்கள் lust, கள்ளக்காதல், சட்டம், வெறி
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
உங்கள் கருத்தைத் தெரிவிக்க