மாஜி துணவேந்தர் மீதான பொய்வழக்கு ரத்து!

செய்தி: தினமல்ர் : சென்னை: மருமகள் தற்கொலை வழக்கில், சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மற்றும் அவரது மனைவி, மகள் மீதான குற்றச்சாட்டுகளை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மனோகரன். இவரது மகன் நவீன்குமாருக்கும், கோவில்பட்டியைச் சேர்ந்த மதுதேவிக்கும் 2000 ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. கணவன் மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. நவீன்குமாருக்கும், "டிவி' நடிகை நிர்மலாவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2006 ஜூலை 1ம் தேதி மதுதேவி, தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதையடுத்து நவீன்குமார், முன்னாள் துணைவேந்தர் மனோகரன் மற்றும் குடும்பத்தினர் கனகவள்ளி, உமா செல்வகுமார் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். "டிவி' நடிகை நிர்மலாவும் முன்ஜாமீன் பெற்றார். இவ்வழக்கு தொடர்பாக, சென்னை மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் மனோகரன், கனகவள்ளி, உமா செல்வகுமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை நீதிபதி கிருஷ்ணன் விசாரித்தார். மூவர் சார்பிலும் சீனியர் வக்கீல் ஸ்ரீராமுலு, வக்கீல்கள் விஜயகுமார், கோவி.கணேசன் ஆகியோர் ஆஜராயினர். நீதிபதி கிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:

மதுதேவி தற்கொலை செய்துகொள்ளும்போது, சம்பவ இடத்தில் மனுதாரர்கள் இல்லை. நவீன்குமார், மதுதேவி இருவருக்கும் தொலைபேசியில் உரையாடல் நடந்துள்ளது. மதுதேவி தான் நவீன்குமாரை அழைத்துள்ளார். இதில், மனுதாரர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. கணவன், மனைவி இடையே நடந்த உரையாடல் எதுவும் யாருக்கும் தெரியாது. உரையாடலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே ராஜா என்பவர் தாக்கல் செய்துள்ளார். அந்த உரையாடலில் கூட வரதட்சணை கேட்பதாக இல்லை. நவீன்குமார் இரண்டாவது திருமணம் பற்றி தான் உள்ளது. வரதட்சணை கோரினால் மட்டுமே இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 304 (பி) பொருந்தும். இந்த வழக்கைப் பொறுத்தவரை அவ்வாறு எதுவும் இல்லை. எனவே, வரதட்சணைக் கொடுமை எதுவும் இல்லை.

மனுதாரர்களுக்கு எதிரான வழக்கை நடத்த, மகளிர் கோர்ட்டில் ஆரம்ப முகாந்திரத்துக்கான ஆதாரங்கள் எதையும் அரசு தரப்பு தாக்கல் செய்யவில்லை. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிரான வழக்கை தொடர எதுவும் இல்லாதபோது, வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கை தொடர்ந்து நடத்துவது என்பது வீண் வேலை. எனவே, இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் ரத்து செய்யப்படுகின்றன. மனுக்கள் ஏற்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.