குடும்பப் பிரச்னைகளுக்கு கைது, காவல் இவை தீர்வு அல்ல - உயர்நீதி மன்றம்

"கணவன் - மனைவிக்கு இடையேயான குடும்பப் பிரச்னைகளை கையாளும் போது, இயந்திரகதியாக காவலில் வைக்க உத்தரவிடக் கூடாது. போதுமான முகாந்திரத்தின் அடிப்படையில் தான் காவலில் வைக்க உத்தரவிட வேண்டும்" என, மாஜிஸ்திரேட்களுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை ஐகோர்ட் நீதிபதி ரகுபதி பிறப்பித்த உத்தரவு:

போலீசாருக்கு தகுந்த உத்தரவுகளை அளித்திருந்தாலும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. ஒருவரை காவலில் வைக்க போலீஸ் அதிகாரி கோரும்போது, அதற்கான அவசியம் உள்ளதா என, மாஜிஸ்திரேட் ஆராய வேண்டும். காவலில் வைக்க போதுமான முகாந்திரம் உள்ளது என்றும் 24 மணி நேரத்தில் புலன்விசாரணை முடியாது என்றும் கருதினால் காவலில் வைக்க உத்தரவிடலாம்.

மனித உரிமை மீறல்கள், தனிநபர் சுதந்திரத்தில் மீறல்கள் ஆகியவற்றை கடுமையாக கருத வேண்டும். வரதட்சணை சாவு, கொலை, தற்கொலை, காயம் ஏற்படுத்துதல் போன்ற வழக்குகளைத் தவிர மற்றபடி கணவன் - மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு அதிக நேரம் ஆகாது. இப்பிரச்னைகளுக்காக இயந்திரகதியாக காவலில் வைக்க உத்தரவிடக் கூடாது. போதுமான முகாந்திரம் இருக்க வேண்டும்.
ஒருவரை காவலில் வைக்க போலீசார் கோரும்போது, கேஸ் டைரியை இணைக்க வேண்டும். காவலில் வைக்க நியாயமான காரணங்கள் இருக்கிறதா என்பதை மாஜிஸ்திரேட் பார்க்க வேண்டும்; இயந்திரகதியாக உத்தரவு பிறப்பிக்கக் கூடாது. கணவன், மனைவி, குடும்பத்தினருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக கைது, காவல் ஆகியவை தான் விடை என்பது அல்ல. ஒரு பிரச்னை குறித்து விவரங்களை சேகரித்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டிய வேலையை போலீசார் செய்ய வேண்டும். எந்தப் பிரச்னையானாலும் அதை தீர்க்க சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட் அல்லது குடும்ப நல கோர்ட்டுக்கு அனுப்ப வேண்டும். புகார் மீது விசாரணை என போலீஸ் நிலையங்களில் பஞ்சாயத்து நடத்த அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு நீதிபதி ரகுபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்