குமுதம் ஜோதிடம் ஆசிரியர் "ஏ.எம்.ஆர்." அவர்களின் தலையங்கம்:
செப்டம்பர் 1, 2008! திங்கட்கிழமை!!
அவசரம் அவசரமாக அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன்.
எனது அவசரத்தையும் மீறிய படபடப்புடன் ஒரு பெண்மணி எனது வீட்டிற்கு வந்தார். அழுது அழுது அவரது கண்கள் சிவந்திருந்ததைப் பார்த்தவுடனேயே என்னால் உணர முடிந்தது. கூடவே 25 அல்லது 26 வயது மதிக்கக்கூடிய ஓர் இளம் பெண். அழுதுகொண்டே வந்த அந்தப் பெண்மணியின் மகள்தான் அந்த இளம்பெண் என்பதைப் பிறகு தெரிந்துகொண்டேன். சிறிது நேரம் கண்ணீர் விட்டுப் புலம்பிய பிறகு, தன்னிலைக்கு வந்தார் அப்பெண்மணி. எனக்கோ அலுவலகத்திற்குச் செல்லவேண்டிய அவசரம். அப்பெண்மணிக்கு ஆறுதலாகச் சில வார்த்தைகள் சொல்லி அமர வைத்தேன். அருகில் அவரது மகள் நின்றுகொண்டே இருந்தாள். அப்பெண்ணையும் உட்காரும்படி கூறினேன்.
அந்த அம்மணி பேசினார். ``நிறைய செலவு செய்து இவளுக்கு நன்றாகத் திருமணம் செய்து கொடுத்தோம். திருமணமாகி சில மாதங்களே ஆகின்றன. `மாப்பிள்ளையுடன் இருக்கப் பிடிக்கவில்லை' என்று கூறி இவள் திரும்பி வந்துவிட்டாள். `என்ன நடந்தது?' என்று கேட்டால் எதுவும் சொல்ல மறுக்கிறாள். தாங்கள்தான் என் பெண்ணிற்கு புத்திமதி கூறி அவள் வாழ்வை நல்லபடி செய்து தரவேண்டும்'' என்றார். பெண்ணிடம் பேசினேன். ``எனக்குப் பிடிக்கவில்லை! வேறு காரணங்கள் எதுவு-மில்லை.'' வேறு எதுவும் கூற மறுத்துவிட்டார் அப்பெண்.
அப்பெண்ணின் ஜாதகத்தை ஆராய்ந்து, சில பரிகாரங்களைக் கூறி அனுப்பி வைத்தேன். அதே சிந்தனையில் ஆழ்ந்தவனாக அலுவலகம் சென்றேன். அந்தத் தாயின் சோகம் நிறைந்த முகமே என் மனக்கண் முன் நின்றது. ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் பொங்கிவரும் பிரவாகமாக அந்த அன்னையின் பார்வையிலிருந்து என்னை நோக்கிப் பெருகி வருவதைப் போல் உணர்ந்தேன். தனது வயிற்றில் பிறந்த இப்பெண்ணின் நல்வாழ்விற்காக எத்தனை பாடுபட்டிருப்பார்கள்? அப்பெண்ணின் துணிவையும், அறியாமையையும் நினைத்து என் நெஞ்சம் புண்ணாகியது. தற்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை எமக்கு வரும் ஏராளமான கடிதங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இதற்கு என்ன காரணம்?
``திருமணம்'' என்னும் புனித பந்தத்தைத் தற்கால இளைஞர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ளாததே, ஏராளமான குடும்பங்களில் இத்தகைய பிரச்சினைகள் இன்று ஏற்பட்டு வருவதற்கு முக்கியக் காரணமாகும். சிறு வயதிலிருந்தே இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் ஒழுக்கம், உடலாலும், உள்ளத்தாலும் தூய்மை, நல்ல எண்ணங்கள், தெய்வபக்தி, கற்பு ஆகியவற்றைப் போதித்து, வளர்க்க வேண்டியதன் அவசியத்தை மனுதர்ம சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம், தர்ம சாஸ்திரம்போன்ற பிரசித்தி பெற்ற நூல்கள் வலியுறுத்துகின்றன.
விவாகம் என்பது சாதாரண சடங்கு அல்ல. திருமணத்தின்போது என்ன நடக்கிறது - யார், யார் முன்னின்று தூய்மையான அத்தெய்வீக பந்தத்தை ஏற்படுத்தித் தருகிறார்கள் என்ற சூட்சுமங்களை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். அவ்விதம் அறிந்துகொண்டால் திருமணம் என்னும் தெய்வீக உறவின் புனிதத்தை அனைவரும் - முக்கியமாக நமது இளைஞர்களும், பெண்களும் புரிந்துகொள்வார்கள்.மனைவியின் உயர்வு!
மனைவிக்கு `அகம் உடையாள்' என்றொரு சிறப்புப் பெயர் உண்டு. அதாவது தான் கைப்பிடிக்கும் கணவரின் மனம் முழுமைக்கும் உரியவள் - அதாவது கணவரின் மனதை முழுமையாகப் பெற்றவள் என்பது பொருள். இதுபோன்றே கணவனுக்கு `அகம் உடையான்' என்ற சிறப்பு உண்டு. `அகம்' என்றால் மனம் என்று பொருள். மனைவியின் மனதை முழுமையாகப் பெற்றவன் என்பதால் அகம் உடையான் என்று கணவனுக்குப் பெயர் ஏற்பட்டது.
எத்தனை செல்வமிருந்தாலும், எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும், எத்தகைய அழகனாக இருந்தாலும், படிப்பில் வானளாவ உயர்ந்திருந்தாலும், உத்தமியான மனைவி அமைந்தால் மட்டுமே இத்தனை பாக்கியங்களையும் மனிதன் அனுபவிக்க முடியும். ஆதலால்தான் தமிழன்னை ஔவைபிராட்டி `இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை!' என அருளியுள்ளார். கணவருடைய மனமறிந்து வாழ்வில் ஏற்படும் சோதனைகளைப் பொறுமையுடன் ஏற்று, மனம் தளரும் கணவருக்கு நம்பிக்கையும், தைரியமும், உற்சாகமும் ஊட்டி, சோதனை காலத்தை நல்லபடி கடப்பதற்கு மனைவியால் மட்டுமே உதவமுடியும். நோய்வாய்பட்டிருக்கும்போது ஏற்படும் உடல் துன்பங்களுக்கு அருமருந்தாக இருப்பவள் மனைவி மட்டுமே. விவாக மேடை!
திருமணத்தின்போது வந்திருப்பவர்கள் உறவினர்களும், நண்பர்களும் மட்டும்தான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இது உண்மை அல்ல. இவர்கள் வருவதற்கு முன்பே, விவாக மேடையில் நாம் முதன் முதலில் வரவேற்று அர்க்கியம், பாத்யம், ஆசமனீயம் ஆகியவற்றைச் சமர்ப்பித்து, நமஸ்கரித்து, பக்தி, மரியாதையுடன் உபசரித்து, ஆசனமளித்து, அமரச் செய்வது நமது பித்ருக்களையும், பித்ரு பத்தினிகளையும்தான்! இந்த மிக, மிக முக்கியமான பித்ரு பூஜைக்குத்தான் `நாந்தி சிரார்த்தம்' என்று பெயர். சிரார்த்தம், தர்ப்பணம், பித்ருக்களின் திதி பூஜைகள் அசுபமானவை அல்ல. பித்ருக்கள் விவாக மேடையில் அமர்ந்த பிறகு, நாம் மந்திரரூபமாக மும்மூர்த்திகளையும், வருணன், அக்னி, சூரியன் உள்ளிட்ட நவக்கிரகங்கள், நம் குல மகரிஷிகள் ஆகியோரையும் அழைத்து ஆசனமளித்து அமரச் செய்கிறோம். அவர்கள் முன்னிலையில்தான் திருமணமே நடைபெறுகிறது. ஆதலால்தான் நாம் திருமண மேடைக்குக் காலணிகள் அணிந்து கொண்டு செல்லக்கூடாது.
திருமணம் என்னும் புனித பந்தத்தைத் தற்காலத்தில் இளைஞர்களும், பெண்களும் துச்சமாக மதித்து ஒரே விநாடியில் தூக்கியெறிந்து முறித்துவிடுகின்றனர். அத்தகைய முறிவிற்குக் காரணமாக இருப்பவர்கள் பிள்ளை வீட்டாராக இருந்தாலும் சரி, பெண் வீட்டினராக இருந்தாலும் சரி, இப்பிறவியிலும் அடுத்து வரப்போகும் பிறவிகளிலும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். பெரியோர்களை மதிக்காது தன்னிச்சையாக ஒருவனையோ அல்லது ஒருத்தியையோ திருமணம் செய்துகொள்வது திருமணமாகிவிடாது. அது Just living together as a ‘Man & Womanதான். கணவர்-மனைவியாக இணைந்து வாழும் புனித பந்தத்தை அது தராது. ராமன்சீதை, சத்தியவான்-சாவித்திரி, ஹரிச்சந்திரன்-சந்திரமதி, அத்திரி மகரிஷி-அனுசூயை, நளன்-தமயந்தி, கோவலன்கண்ணகி போன்ற தெய்வ தம்பதியர் மிகக் கொடூரமான துன்பங்களை அனுபவித்தபோதும்கூட இணைந்து, ஒழுக்கம், கற்பு ஆகியவற்றின் பலத்தால் துன்பம் நீங்கி நல்வாழ்வு பெற்றதையும், அதனால் இப்பாரத பூமியே புண்ணிய பூமியாக விளங்கியதையும் புராதன நூல்கள் விளக்கியுள்ளன. கற்புடைய மங்கையரை மும்மூர்த்திகளும் வணங்குகிறார்கள். நாகரிகம் என்ற மோகத்தில் தன்னிச்சையாக நடந்துகொள்ளும் அநாகரிகத்தை விட்டுவிட்டு, நமது பாரத நெறிமுறைக்குத் திரும்பும்படி நம் இளைஞர்களையும், பெண்களையும் அன்புடன் வேண்டுகிறேன். அது ஒன்றே மகிழ்ச்சியான, நல்வாழ்வைத் தரும்!
திருமணம் எனும் தெய்வீக பந்தம்
குறிச்சொற்கள் divorce, harassment, ஆண்பாவம், குடும்பம், சமூகம், தாய்மை, வரதட்சணை, விவாகரத்து
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
உங்கள் கருத்தைத் தெரிவிக்க