மருமகனை கொன்ற மாமியார்

News from Thatstamil.com:

திருச்சி: மகளை கொடுமைப்படுத்திய மருமகனை கொலை செய்த மாமியார் கைது செய்யப்பட்டார்.

திருச்சியை அடுத்த பள்ளக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (46). இவரது மகள் வசந்தா. இவருக்கும் அத்தை மகனான மணிகண்டனுக்கும் 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

மணிகண்டன் 3 ஆண்டுக்கு முன் மலேசியாவுக்கு வேலைக்கு சென்றார். 3 மாதத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார்.

இந் நிலையில் இரு நாட்களுக்கு முன் தாயனூர் ரோட்டில் மணிகண்டன் கத்திக்குத்து மற்றும் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் மாமியார் முத்துலட்சுமி மற்றும் மகன் விஸ்வநாதனை (24) கைது செய்தனர்.

விசாரணையில் விஸ்வநாதன் அளித்த வாக்குமூலம்:

மாமா மணிகண்டன் என் அக்காள் வசந்தா மீது சந்தேகப்பட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்தார். இது குறித்து மகளிர் போலீசில் என் அக்கா புகார் செய்தார். போலீசார் சமாதானம் செய்து வைத்தனர்.

ஆனால், மணிகண்டன் தொடர்ந்து தொல்லை தந்ததால் அக்கா விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.

தொடர்ந்து அக்காவை மாமா கொடுமைப்படுத்தி வந்ததால் அவரை கொலை செய்ய நானும், என் தாயாரும் முடிவு செய்தோம்.

அவரை சமாதானம் பேச வரும்படி தொலைபேசியில் அழைத்தேன். அவரும் பள்ளக்காடுக்கு இரவில் வந்தார். அப்போது மின்சாரம் தடைபட்டிருந்ததால் அதை சாதகமாக பயன்படுத்தி தயாராக வைத்திருந்த கத்தி, அரிவாளால் நானும், என்னுடைய தாயாரும் மாமாவை வெட்ட முயன்றோம். அவர் எங்களிடம் இருந்து தப்பி ஓடினார்.

இருவரும் அவரை துரத்தினோம். ஆத்திரத்தில் என் தாயார் மாமாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் அவர் இறந்தார் என்று கூறியுள்ளார்.