பொய் கற்பழிப்பு வழக்குகள் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

"பழிவாங்குவதற்காகவும், மிரட்டி பணம் பறிப்பதற்காகவும், சொத்துக்களை அபகரிப்பதற்காகவும் கூட பொய்யான கற்பழிப்பு வழக்குகள் தொடரப்படுகின்றன. இது போல பொய்யாக குற்றம் சாட்டப்படுவோர் தண்டிக்கப்படாத வகையில் கோர்ட்டுகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்" என்று சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.

ம.பி. மாநிலத்தை சேர்ந்தவர் ராது. கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி, ராது தனது தாயின் உதவியுடன், 14 வயதான தனது முறைப்பெண் சுமன்பாய் என்பவரை கற்பழித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த ம.பி., கோர்ட், ராதுவுக்கும் அவரது தாய்க்கும் ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ம.பி., ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அப்பீல் வழக்கு விசாரணைக்கு இடையில் ராதுவின் தாய் இறந்து விட்டார். அப்பீல் வழக்கில், ராதுவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ராது மற்றும் அவரது தாய் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படும் சுமன்பாயின் தந்தை மாங்கிலால் என்பவர், ராதுவின் தந்தை நாதுவிடம் கடன் வாங்கியிருந்தார். அந்த கடன் தொகையை ரத்து செய்யும்படி வலியுறுத்தி வந்தார் மாங்கிலால். இதற்கு நாது சம்மதிக்காததால், பொய் புகார் கூறி, மாங்கிலால் பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாக ராகு தரப்பில் வாதிடப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ரெட்டி ஆகியோர் கொண்ட பெஞ்ச், ராதுவை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

ராது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் எங்களுக்கு திருப்தி அளித்துள்ளது. ராது குற்றம் செய்ததை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. கீழ் கோர்ட்டும், ஐகோர்ட்டும் தவறை கண்டுபிடிப்பதில் தவறி விட்டன.எனவே, இந்த அப்பீல் மனுவை ஏற்று, கீழ் கோர்ட்டுகள் மற்றும் ம.பி., ஐகோர்ட் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது. கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்கும்போது, அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பழிவாங்குவதற்காகவும், மிரட்டி பணம் பறிப்பதற்காகவும், சொத்துக்களை அபகரிப்பதற்காகவும் கூட பொய்யான கற்பழிப்பு வழக்குகள் தொடரப்படுகின்றன. இதுபோல பொய்யாக குற்றம் சாட்டப்படுவோர் தண்டிக்கப்படாத வகையில் கோர்ட்டுகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

---------------

செய்தி: "தினமலர்"