2007-08-26 அன்று தினமல்ர் வாரமலரில் "அந்துமணி" அவர்கள் வெளியிட்ட ஒரு சோகக் கதை:-
சமீபத்தில் எனக்கு வந்த நெஞ்சைத் தொட்ட கடிதம் இதோ:
என்னவோ பெண் வீட்டார் எல்லாம் நல்லவர்கள் போலவும், பையன் வீட்டார் கொடுமைக்காரர்கள் என்ற ரீதியிலேயே பத்திரிகைகளிலும், "டிவி" சினிமாக்களிலும் எழுதியும், காட்டியும் ஒரு தவறான, "இமேஜை' உண்டுபண்ணி தொடர்கிறீர்கள். எத்தனைப் பையன் வீட்டார், பெண் வீட்டாரிடம் எந்தெந்த வகையில் அசிங்கப்படுகின்றனர், அவமானப்படுகின்றனர் என்று தெரியுமா? கொலைக் குற்றவாளிகளைக் கூட அவர்கள் தரப்பு நியாயம் என்ன என்று கேட்டு தண்டணை அளிக்கப்படும் போது, யாராவது மாப்பிள்ளை வீட்டாரையும் நெருங்கி என்ன, ஏது என்று விசாரித்திருக்கிறீர்களா? பிள்ளையைப் பெற்றவர்களிலும் நியாயமானவர்கள், நல்லவர்கள் நுற்றுக்கு ஒருவராவது இருப்பர் என்பதற்கு என்னையே நான் உதாரணம் காட்டுகிறேன். பெண்ணைப் பெற்றவர்களும் மனிதர்கள்தான், அவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது, மரியாதையாய் நடத்த வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், பெண்ணும், பெண் வீட்டாரும் எங்களை எப்படியெல்லாம் அவமானப்படுத்தியிருக்கிறார்கள். நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார்கள் என்று இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் பத்திரிக்கையில் வெளியிட்டு பிள்ளையைப் பெற்றவர்களையும் எச்சரியுங்கள்.
என் பையனுக்கு கடந்த வருடம் ஒரு பெண்ணை மணமுடித்தேன். வரதட்சணை எதுவும் வாங்கவில்லை; சீர் சாமான்கள் இன்னின்னது கொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை. நகைகள் இவ்வளவு பவுன் போட வேண்டும் என்றும் கேட்கவில்லை; என் பிள்ளை, "மரைன் இன்ஜினியர்' ஆக
இருக்கிறான். ஒரே பையன். ஆறு மாதம் கான்டிராக்ட். நாலு மாதம் லீவு. எந்த ஒரு சின்ன விஷயத்தாலும் மனக்கசப்பு வந்து விடக் கூடாதே என்று, "மரைன் இன்ஜினியர்' என்றால் என்ன, அவர்கள், "லைஃப்' எப்படி என்று எல்லாம் சொல்லி, ஆறு மாதம் பையன் கப்பலில் இருப்பதால், பெண் இரண்டு மாதம் இங்கிருக்கட்டும் என்று கூப்பிடாதீர்கள்; நாங்கள் தனியாய் இருப்பதால் பெண் எங்களுடன் தான் இருக்க வேண்டும் என்றதற்கு, "ஆமாம்... ஆமாம்... அது தானே நல்லது. கல்யாணமானால் பெண், மாப்பிள்ளை வீட்டில் இருந்தால் தானே மரியாதை...' என்றார்கள்.பெண்ணையே தனியாய் அழைத்துப் போய், எல்லாவற்றையும் சொல்லி, "உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா? பையனை பிடித்திருக்கிறதா? வேறு எந்த வகையிலாவது விருப்பம் இல்லாவிட்டாலும் சொல்லிடு. உன் வீட்டில், நீ சொன்னதாக எதுவுமே காட்டிக் கொள்ள மாட்டேன்...' என்றதற்கு அந்தப் பெண், "எனக்கு வேலைப் பார்க்கவே இஷ்டம் கிடையாது. கல்யாணம் வரை சும்மா இருக்காமல் படிக்கலாமே என்று தான் படிக்கிறேன். நானே இன்ஜினியர் மாப்பிள்ளை கேட்டேன். எனக்கு, "அவுஸ் ஒய்ப்" ஆக இருக்கத் தான் பிடிக்கும்!' என்றாள். நிச்சயதார்த்தம் நடக்கும் வரை மிக மரியாதையாய் நடந்து கொண்டவர்கள், அதன் பின் எங்களை பல விதத்திலும் அவமானப்படுத்தினார்கள். என் பையன் உயரத்துக்கு பெண், கொஞ்சம் குள்ளம் தான்; அவன் உடம்புக்கும், இவள் கொசு மாதிரி தான்; இருந்தாலும் நான் அமிதாப் ஜெயா ஜோடியை நினைத்தும், ஹாஸ்டலில் இருந்த பெண் என்பதால் நம் வீட்டுக்கு வந்தால் நன்றாக சாப்பிட்டு குண்டாகி விடுவாள் என்று என்னையே நான் சமாதானப்படுத்திக் கொண்டேன். ஒருவருக்கு மூன்று பேர், "இந்த ஜாதகம் வேண்டாம், இந்தப் பெண், 'பெட்ரூம்" சமாச்சாரத்துக்கு ஒத்துப் போகாதவள்... பல பிரச்னைகள் இந்தப் பெண்ணால் உண்டாகும்!' என்று சொல்ல, கம்ப்யூட்டர் ஜாதகத்திலும் திருமணம் செய்ய சிபாரிசு செய்யப்படவில்லை என்றே வந்தது. பையனும், அவன் அப்பாவும் ஜாதகத்தை அவ்வளவாக நம்பாததால் இந்தக் கல்யாணம் நடந்தது. இப்போது நடக்கும் சம்பவங்கள், ஜோசியங்கள் சொன்னதை நம்பாமல் போனோமே என்று வருத்தப்பட வைக்கிறது!
கோவிலில் வைத்து கல்யாணம் பண்ணித் தருகிறேன் என்று அவள் மாமா சொன்னதற்கு, "எனக்கு ஒரே பிள்ளை. "கிராண்டாக" கல்யாணம் பண்ண வேண்டும்!' என்று செலவு செய்து நாங்களே கல்யாணம் பண்ணினோம். அகப்பட்ட வரை பெண் வீட்டில் சுரண்ட வேண்டும்; பெண்ணைப்
பெற்றவர்கள் மனிதர்களே இல்லை என்று நினைக்கும் இந்தக் காலத்தில் அவர்களை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைத்த எங்களுக்கு ஏற்பட்ட தலை குனிவுகள் வேறு யாருக்கும் ஏற்பட்டிருக்காது.கல்யாணம் முடிந்தவுடன், "பையனை இழுத்துக் கொண்டு வாடி!' என்றனர். தமாஷ் என்று நினைத்தோம். தோளுக்கு மேல் வளர்ந்து விட்டால் பெற்ற பிள்ளையே தொட்டுப் பேசத் தயங்கும் நம் தமிழ் பெண்களிடையே, சின்ன மாமியார் பையனின் தோளில் கையை வைத்து தள்ளியதும் இல்லாமல் எங்களை, "காட்டு மிராண்டிகள்' என்றாள். காரணம் இல்லாமல் சண்டைப் பிடித்து, சாந்தி முகூர்த்தத்துக்கு வர விடாமல் செய்தனர். அது ஏன் என்று அப்புறம் தான் எங்களுக்கு புரிந்தது. ரூமினுள் நுழைந்த உடனேயே என் பையனிடம் பெண் பேசிய முதல் வார்த்தை, "உங்களை எனக்கு பிடிக்கவில்லை. உங்கள் வீட்டுக்கு நான் வரமாட்டேன். எனக்கு, "செக்ஸ்"ன்னா அலர்ஜி. குழந்தை பிடிக்காது. தத்து எடுத்துக் கொள்ளலாம். கடைசி வரை, "பிரண்ட்சா" இருப்போம்!' என்பது தானாம். இது எப்படி இருக்கு!
ஏதோ பயத்தில் சொல்கிறாள், போகப் போக சரியாகி விடும், பெரிதுப்படுத்த வேண்டாம் என்று பையன் நினைத்திருக்கிறான். அடுத்த நாள், நைட்டும் ஒன்றுமில்லை. இப்படித் தொடர்ந்து 25 நாட்கள் தொட விடாமல், 'தொட்டால், "சூசைடு" பண்ணிப்பேன்' என்றாளாம். என் பிள்ளையும், இந்த 25 நாட்களில் பத்தாயிரம் ரூபாய் வரை செலவு பண்ணி மும்பை வரை, "டூர்' அழைத்துப் போய் வந்தான். கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தும், எல்லாம் வாங்கிக் கொள்வாள். இரவானால் பையனை கடிப்பது, பிராண்டுவது, முடியைப் பிடித்து குலுக்குவது... இப்படி!
இதற்கிடையில் இந்தப் பெண் ஒரு கை தயிர் சாதம் மட்டுமே சாப்பிடுவாள். இரண்டு இட்லி அல்லது ஒரு தோசை அல்லது எண்ணெய் இல்லா சப்பாத்தி மட்டுமே சாப்பிடுவாள். கொழுப்பு, இனிப்பு, காரம் எதுவும் சாப்பிடுவதில்லை. ஏனென்று கேட்டால், தனக்கு அல்சரும், யூரினல் டிரபிளும் உண்டு என்றாள். இதற்காக இவளை டாக்டரிடம் அழைத்துப் போகப்போய் தான், இவர்களுக்குள், "செக்ஸ்" தொடர்பே இல்லை என்று தெரிந்தது. இதை எங்களிடம் பையன் சொல்லவில்லையே தவிர, மும்பையிலிருந்து அவர்கள் வீட்டுக்கு போன் பண்ணி மாமியாரிடம், "உங்கள் பெண்ணுக்கு, என்னோடு வாழப் பிடிக்கவில்லையாம். இன்று நாங்கள் மும்பையிலிருந்து திரும்பி வருகிறோம். நீங்கள், எங்கள் வீட்டுக்கு வாருங்கள்!" என்று கூறியிருக்கிறான். 15 நாட்களில் புது மாப்பிள்ளை இப்படி கூப்பிட்டு சொல்லியும் கூட அவர்கள் எங்களுக்கு போனில் கூட கூப்பிட்டு தெரிவிக்கவில்லை; நேரில் வரவும் இல்லை. ஒவ்வொரு இரவும் பையனுக்கு போராட்டம்."யூரினில்' ரத்தமும், சீழும் வருமாம். அதற்காக அவள் அக்கா, டாக்டர் கத்தை கத்தையாய் கொடுத்தனுப்பும் மாத்திரை ஸ்டிரிப்புகளையும், ஸ்பிரிட் பாட்டிலையும் எப்போதும் வைத்திருப்பாள். அதை அப்படியே மொத்தமாக சாப்பிட்டு விடுவேன் என்று மிரட்டுவாளாம்.
மும்பையிலிருந்து வந்து ஒரு வாரமாக எங்கள் மாப்பிள்ளை, என் வீட்டுக்காரர், என் பையன் மூவரும் போனில் கூப்பிட்டும் யாரும் வராததால் டைவர்ஸ் நோட்டீஸ் விட்டான் பையன். அப்போதும் அவர்கள் யாரும் வீட்டுக்கு வராமல், மகளிர் காவல் நிலையம் போய், வரதட்சணையாக கார் கேட்டேன்; பங்களா கேட்டேன்; பையனிடம் பேச விடுவதில்லை; பெண்ணுக்கு நான் சரியாக சாப்பாடு போடவில்லை... என்றெல்லாம் பொய் கேஸ் கொடுத்து விட்டு இரண்டு வேன்களில் ஆணும், பெண்ணுமாக வந்து அடிதடியில் இறங்கினார்கள்.போலீசிடம் எங்களை பேசவே விடவில்லை. பெண், பெண் வீட்டார் என்றாலே ஒரு அனுதாபம் இருக்கிறது அல்லவா? மகளிர் காவல் நிலையத்தில் எங்களைப் கூப்பிட்டு, ஏதோ நாங்கள் தான் குற்றம் செய்தது போல் எங்களை மிரட்டி எச்சரித்து, வெறும் பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பினார்கள். நாங்கள் அதுவரை போலீஸ் ஸ்டேஷனே போனது கிடையாது. அதுவே எங்களுக்கு பெரிய, "ஷாக்"! இந்தப் பெண், தொடர்ந்து பையனை தொட விடாததாலும், எனக்கு, "செக்ஸ்' அலர்ஜி, குழந்தை வேண்டாம் என்றதாலும் உடல் அளவிலோ, மனதளவிலோ இந்தப் பெண் தாம்பத்திய வாழ்க்கைக்கு லாயக்கில்லை என்று நோட்டீஸ் விட்டோம். இதற்கு, பலர் முன்னிலையில் பெண்களையெல்லாம் வைத்துக் கொண்டு, "நீ ஆண் பிள்ளை தானா; வா, டாக்டரிடம், உன்னை, "செக்' பண்ண வேண்டும்; காலேஜ் நாட்களில் 'சைட்" அடிக்க மாட்டாயாமே; உலகம் எல்லாம் சுற்றுகிறாய், குடி, சிகரட் எல்லாம் இல்லாமல் என்ன ஆண் பிள்ளை நீ?" என்றும், இன்னும் என்னன்னவோ பேசி அவமானப்படுத்தினராம்.
இப்படி இரண்டு மாதங்கள் ஓடி, என் பிள்ளை கப்பலுக்கு கிளம்பும் போது வந்த அவள் அக்கா, "கப்பலுக்கு போகிறவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னடி செய்வாய்? என்ன கியாரண்டி? சொத்தெல்லாம் உன் பெயரிலா இருக்கிறது?" என்று கேட்க, "அடிப்பாவி, கல்யாணமாகி முதன் முதல் கப்பலுக்கு புறப்படும் பிள்ளையை, 'ஏதாவது ஆகிவிட்டால்..." என்று கேட்கிறாயே?' என்று நான் தான் சப்தம் போட்டேனே தவிர, என் மருமகள் பேசாமல் தான் நின்றாள். காக்கை கூட்டம் போல் எல்லாரும் கூச்சல் போட்டு என் பையனுக்கு, "க்ளோரோபாம்" வைக்கப் போய், அது தவறுதலாய் பையனின் அப்பா முகத்தில் பட்டு பெரிய ரகளையாகி, தெருவே கூடி விட்டது.அவள் மாமா, "ஏ.கே.47 வைத்திருக்கிறேன்... கூண்டோடு கைலாசம் அனுப்பி விடுவேன். கொலை செய்வதென்றால் நான் நேரிடையாக வரவேண்டும் என்பதில்லை. என் மேல் ஏற்கனவே மூன்று கொலை கேஸ் நடந்துகொண்டிருக்கிறது..." என்றெல்லாம் கத்துவான். இவர்கள் போடும் சப்தம் பொறுக்க முடியாமல் தெருக்காரர்கள் வந்து கத்தினால் தான் அடங்குவார்கள். இவ்வளவுக்கும் நாங்கள் பொறுத்துப் போனது இன்று இல்லாவிட்டாலும் என்றாவது மருமகளுக்கு எங்கள் நல்ல குணமும், அவர்கள் வீட்டு அடாவடித்தனமும் புரியும் என்று தான்.இனிமேல் தான் பெரிய கொடுமையே... பையனை, "ச்சீ போ..." என்பது; கையை பிடித்தால் தட்டி விடுவது; அங்கு, இங்கு தொட்டால் சோப்பு, டெட்டால் போட்டு கழுவுவது; வலிப்பு வந்தவளைப் போல் கை, காலை உதறுவது; கடிப்பது, கிள்ளுவது, முடியைப் பிடித்து உலுக்குவது, "உன்னைப் பிடிக்கவில்லை, செக்ஸ் பிடிக்கவில்லை, குழந்தை வேண்டாம்!' என்பது; "நான் படிப்பை முடித்து விட்டு ஸ்டேட்ஸ் போய் செட்டில் ஆகி விட நினைத்தேன். உன்னால் என் வாழ்வே பாழாகி விட்டது. உன்னையும், உன் குடும்பத்தையும் பழி வாங்குவேன்!" என்றெல்லாம் பேசியிருக்கிறாள். பையனும் எவ்வளவு தான் பொறுமையாய் இருப்பான். முதலில் ஒய்ப் தானே... "கம்ப்பெல்" பண்ண வேண்டாம் என்று நினைத்தவன், அப்புறம் பலவந்தப்படுத்த, "நான் காலேஜில் அவனை, "லவ்' பண்ணினேன்; இவனோடு ஓடிப் போகலாம் என்றிருந்தேன். அவனைத் தான் புருஷனாக நினைத்தேன். ப்ரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்றார்கள்..." என்றாளாம்... "நான் பெண்... நான் சொல்வதையும், என் வீட்டார் சொல்வதையும் தான் நம்புவார்கள்... பொய்யாய் இருந்தால் கூட! நீயும், உன் வீட்டாரும் உண்மையே சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்...' என்றாளாம். "நீங்கள் கையெழுத்துப் போட்டிருக்கும் பேப்பரில், நாங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்வோம்..." என்றாளாம்.
பார்த்தான் பையன்... இவளைச் சரி பண்ணி விடலாம் என்று எவ்வளவு முயன்றும் முடியாததாலும்; கையிலுள்ள பணமெல்லாம் செலவழிந்து, லீவும் எக்கச்சக்கமாய் ஏறி விட்டதாலும், போலீஸ் ஸ்டேஷனில் பட்ட அவமானங்களால் மறுபடி அங்கு போக சற்று யோசிக்க வேண்டியிருப்பதாலும் கப்பலுக்குப் போய் விட்டான். அப்படியும் மனைவியிடம், "அப்பா, அம்மாவுக்குத் துணையாய் இங்கிரு, உன் தனிப்பட்ட செலவுகளுக்கு உன் யெரில், "அக்கவுண்ட் ஓபன்' பண்ணி பணம் போடுகிறேன்...' என்று சொல்லியும் கூட பையன், "பிளைட்" ஏறுமுன் வீட்டுக்குப் போய் விட்டாள்.எங்களுக்குத் தான் ஒரு தகவல் போனில் கூட சொல்ல முடியவில்லையென்றால் இந்த நான்கு மாதங்களில் தன் புருஷனுக்குக் கூட ஒரு லெட்டர் போடவில்லையாம் அந்தப் பெண். ஆனால், "ப்ரம் அட்ரஸ்" இல்லாமல் கோடுகளும், கட்டங்களும், புரியாத எழுத்துக்களும் ஏதோ கலரால் கிறுக்கப்பட்ட பேப்பருடன் கூடிய கவர் வந்ததாம். பிரித்துப் பார்த்து விட்டு, கடலில் தூக்கி எறிந்து விட்டானாம். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் இந்தப் பெண்ணை நான் தனியாக பார்த்துப் பேசிய போது, "பிடிக்கவில்லை..." என்பதை என்னிடம் சொல்லியிருக்கலாம். நிச்சயதார்த்தத்துக்குப் பின் இவள், என் பையனோடு சென்னையில் ஒரு வாரம் சுற்றியிருக்கிறாள். அவனிடம் அப்போதே சொல்லியிருக்கலாம். அவளிடம், "ஏன் இப்படி செய்கிறாய்?' என்று கேட்டதற்கு, "வீட்டில் அடித்து, உதைத்து கட்டாயப்படுத்தினார்கள். எனக்கு இஷ்டம் இல்லை..." என்கிறாள்."நான் இங்கும் இல்லை, என் வீட்டுக்கும் போகவில்லை. எங்காவது ஆசிரமம் போய் விடுகிறேன். பிடிக்கவில்லை என்று வீட்டிற்கு போனால் அடித்தே கொன்று விடுவார்கள். உங்கள் பையன் படிப்புக்கும், வேலைக்கும் நீங்கள் நிறைய வரதட்சணை கேட்டிருந்தால் எங்கள் வீட்டில் செய்ய முடியாமல் கல்யாணம் நின்று போய் இருக்கும். நீங்கள் ஏன் ஒன்றும் கேட்கவில்லை. அதனால் தான் உங்களையும் பழி வாங்குகிறேன்!' என்கிறாள்!
எங்கு உண்டு இந்த அநியாயம்? பயோ கெமிஸ்டரி படித்தும், 25 வயது ஹாஸ்டலில் இருக்கும் பெண் ணுக்கு, "மேரேஜ் லைஃப்' என்றால் என்னவென்று தெரியாதாம். "மாத்திரை சாப்பிட்டு குழந்தை வருமா?' என்கிறாளாம். கிண்டல் தானே இது? "டபுள் கேம்' விளையாடுகிறாள்.சீர் செனத்தி செய்து, நகை போட்டு கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படும் பெற்றோர் எத்தனை பேர். 30 வயதுக்கு மேல் ஆகியும் கல்யாணம் ஆக வில்லையே என்று வருந்தி நிற்கும் பெண்கள் எவ்வளவு பேர்? எனக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். வரும் மருமகளை, மகளைப் போல் பார்க்க வேண்டும் என்று ஒன்றும் கேட்காமல் கட்டி வந்து என்னைப் போல் அவஸ்தைப்படும் மாமியார்கள் எவ்வளவு பேரோ தெரியவில்லை.இவளுக்கு உடலோ, மனமோ தாம்பத்திய வாழ்க்கைக்கு லாயக்கில்லை என்றால், என் ஒரே பையனின் வாழ்க்கையையும், காலா காலத்தில் பேரப் பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்ற நியாயமான ஆசைகளையும் குழி தோண்டி புதைப்பது எந்த வகையில் நியாயம்? என்னுடைய விரோதியின் பிள்ளைக்குக் கூட இப்படி ஒரு நிலைமை, வாழ்க்கை அமையக் கூடாது என்பதற்காகவே அதிகம் பேர் படிக்கும் உங்கள் பத்திரிகை மூலம் வெளி உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என எழுதியிருக்கிறேன். மருமகள்களை கொடுமைப்படுத்தும் மாமியார்களை தானே எல்லாருக்கும் தெரியும்... மருமகள்களிடமும், அவர்கள் வீட்டாரிடமும் அகப்பட்டு அவஸ்தைப்படும் என் போன்ற மாமியார்களும் இருக்கிறார்கள் என்பதை உங்கள் பத்திரிகை மூலம் தெரியப்படுத்துங்கள்...
— என்று எழுதியிருக்கிறார்.
இப்படியும் நடக்குமா கொடுமைகள்?