இந்து திருமண சட்டம் குடும்பங்களை உடைக்கிறது - சுப்ரீம் கோர்ட் நீதிபதி!

புதுடெல்லி: இந்து திருமண சட்டம், குடும்பங்களை வலுப்படுத்துவதற்கு பதிலாக குடும்பங்களை உடைக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வேதனையுடன் கூறினார்.இந்து திருமண சட்டம் 1955-ம் ஆண்டு இயற்றப்பட்டதாகும். 2003-ம் ஆண்டு வரை இந்த சட்டத்தில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள விவாகரத்து தொடர்பான விதிகள் ஆங்கிலேய சட்டத்தில் இருந்து உருவாக்கப்பட்டதாகும்.
இந்து திருமண சட்டத்தின் அடிப்படையில் சமீபகாலமாக கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகள் குவிந்து வருகின்றன. இது பற்றி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவிக்கையில் இந்து திருமண சட்டம் குடும்ப அமைப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்தவர் கவுரவ் நாக்பால். இவருடைய மனைவி சுமேதா வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பசாயத் சில கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது:


குடும்பங்களை உடைக்கும் சட்டம்

குடும்பங்களை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்து திருமண சட்டம். ஆனால் தற்போது அந்த சட்டம் நேர் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. குடும்பங்களை இணைப்பதற்கு பதிலாக உடைப்பதற்குத்தான் அதிகம் பயன்படுகிறது. இந்து திருமண சட்டத்தின் அடிப்படையில் விவாகரத்து கேட்டு கோர்ட்டுகளில் வழக்குகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. திருமணம் ஆகும்போதே விவாகரத்துக்கான முன் எச்சரிக்கை
மனுவையும் தாக்கல் செய்து விடுகிறார்கள்.

குழந்தைகளுக்கு பாதிப்பு


கணவனும், மனைவியும் விவாகரத்து கேட்டு பிரிந்து விடுகிறார்கள். ஆனால் இந்த பிரிவால் மோசமாக பாதிக்கப்படுவது அவர்களின் குழந்தைகள்தான். அதிலும் பெண் குழந்தையாக இருந்து விட்டால் அதன் எதிர்காலம் அதிகம் பாதிக்கும். அந்த பெண் குழந்தை, திருமணத்தின் போது பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். எனவே குழந்தைகளின் நலனை நினைத்தாவது தம்பதிகள் தங்களுடைய சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். தங்களை விட தங்கள் குழந்தையின் எதிர்காலம்தான் முக்கியம் என்று உணர வேண்டும்.

முன்னோர்கள், குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை வீட்டின் நான்கு சுவர்களுக்கும் தீர்த்துக்கொள்வார்கள். தற்போது இருப்பதைப் போன்ற சிக்கல்களை அவர்கள் சந்தித்தது இல்லை. தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு தொழுநோயோ, மனநிலை பாதிப்போ இருந்தால் விவாகரத்து வழங்கலாம் என்று இந்து திருமண சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விதியை பல தம்பதிகள் தவறாக பயன்படுத்துகிறார்கள்.


இவ்வாறு நீதிபதி பசாயத் கூறினார்