வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய மனைவி

பார்வை பறிபோனது; பிரிந்து சென்றார் மனைவி: துரதிருஷ்டம் துரத்தியவருக்கு கைகொடுத்தது கோர்ட்
------------------------------------------------------------
(செய்தி: தினமலர்)

புதுடில்லி: தவறான ஆபரேஷனால், பார்வையிழந்தவரை விட்டுப் பிரிந்த மனைவி, அவர் மீது வரதட்சணை புகார் கொடுக்க, வேலையும் பறிபோகும் நிலை ஏற்பட்டது. அவருக்குக் கைகொடுத்துள்ளது டில்லி ஐகோர்ட்.

டில்லி, மெரவுலி பகுதியை சேர்ந்தவர் கிரிதாரி பண்டாரி. இவருக்கு கண் கோளாறு ஏற்பட்டது. இதற்காக, 2002 மார்ச் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தவறான சிகிச்சையால், பார்வை பறிபோனது. இதனால் வேலையும் பறிபோனது. கிரிதாரி பண் டாரியை துரதிருஷ்டம் துரத்தியது. அவரது மனைவி, ஒரே குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அத்துடன் நின்றுவிடவில்லை; கிரிதாரி மீது வரதட்சணை புகார் செய்தார். இதன் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அதன் பிறகும் கிரிதாரியை விட்டு துரதிருஷ்டம் விலகவில்லை. அவருக்கு கிடைக்கவிருந்த, ராணுவ அமைச்சக கீழ்கோட்ட கிளார்க் பணியும் ரத்து செய்யப்பட்டது. கிரிமினல் குற்றச்சாட்டில், விசாரணையில் உள்ளவருக்கு பணி வழங்க முடியாது என்று ராணுவ அமைச்சகம் மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திடம் முறையிட்டார். கிரிதாரி வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், அவரை தற்காலிகமாக பணியமர்த்தும் படியும், ஆறு மாதத்துக்குள் வரதட்சணை கொடுமை வழக்குக்கு தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆறு மாதத்துக்குள், பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு வழியில்லை என்பதால், டில்லி ஐகோர்ட்டுக்கு சென்றார் கிரிதாரி. செய்யாத தவறுக்காக, வேலை பறிபோனதையும், கிடைக்கவிருக்கும் வேலை ரத்து செய்யப்பட்டது குறித்தும் முறையிட்டார்.

விசாரணையின் போது, தனது குழந்தையை அவ்வப்போது பார்க்க அனுமதித்தால், பரஸ்பர விவாகரத்துக்கு தயார் என்று உருக்கமுடன் தெரிவித்தார். இவ் வழக்கை, மனிதநேயத்துடன் அணுக கோர்ட் முடிவு செய்தது. கிரிதாரியின் பணியிடத்தை, காலியாக வைத்திருக்கும் படி ராணுவ அமைச்சகத்துக்கு உத்தரவிட்ட டில்லி ஐகோர்ட், போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது.டில்லி ஐகோர்ட் சட்ட சேவை கமிட்டி முன், அடுத்த மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதிக்குள், கிரிதாரி, அவரது மனைவி ஆஜராகி, பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புது வாழ்க்கைக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் கிரிதாரி.