வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய மனைவி

பார்வை பறிபோனது; பிரிந்து சென்றார் மனைவி: துரதிருஷ்டம் துரத்தியவருக்கு கைகொடுத்தது கோர்ட்
------------------------------------------------------------
(செய்தி: தினமலர்)

புதுடில்லி: தவறான ஆபரேஷனால், பார்வையிழந்தவரை விட்டுப் பிரிந்த மனைவி, அவர் மீது வரதட்சணை புகார் கொடுக்க, வேலையும் பறிபோகும் நிலை ஏற்பட்டது. அவருக்குக் கைகொடுத்துள்ளது டில்லி ஐகோர்ட்.

டில்லி, மெரவுலி பகுதியை சேர்ந்தவர் கிரிதாரி பண்டாரி. இவருக்கு கண் கோளாறு ஏற்பட்டது. இதற்காக, 2002 மார்ச் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தவறான சிகிச்சையால், பார்வை பறிபோனது. இதனால் வேலையும் பறிபோனது. கிரிதாரி பண் டாரியை துரதிருஷ்டம் துரத்தியது. அவரது மனைவி, ஒரே குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அத்துடன் நின்றுவிடவில்லை; கிரிதாரி மீது வரதட்சணை புகார் செய்தார். இதன் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அதன் பிறகும் கிரிதாரியை விட்டு துரதிருஷ்டம் விலகவில்லை. அவருக்கு கிடைக்கவிருந்த, ராணுவ அமைச்சக கீழ்கோட்ட கிளார்க் பணியும் ரத்து செய்யப்பட்டது. கிரிமினல் குற்றச்சாட்டில், விசாரணையில் உள்ளவருக்கு பணி வழங்க முடியாது என்று ராணுவ அமைச்சகம் மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திடம் முறையிட்டார். கிரிதாரி வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், அவரை தற்காலிகமாக பணியமர்த்தும் படியும், ஆறு மாதத்துக்குள் வரதட்சணை கொடுமை வழக்குக்கு தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆறு மாதத்துக்குள், பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு வழியில்லை என்பதால், டில்லி ஐகோர்ட்டுக்கு சென்றார் கிரிதாரி. செய்யாத தவறுக்காக, வேலை பறிபோனதையும், கிடைக்கவிருக்கும் வேலை ரத்து செய்யப்பட்டது குறித்தும் முறையிட்டார்.

விசாரணையின் போது, தனது குழந்தையை அவ்வப்போது பார்க்க அனுமதித்தால், பரஸ்பர விவாகரத்துக்கு தயார் என்று உருக்கமுடன் தெரிவித்தார். இவ் வழக்கை, மனிதநேயத்துடன் அணுக கோர்ட் முடிவு செய்தது. கிரிதாரியின் பணியிடத்தை, காலியாக வைத்திருக்கும் படி ராணுவ அமைச்சகத்துக்கு உத்தரவிட்ட டில்லி ஐகோர்ட், போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது.டில்லி ஐகோர்ட் சட்ட சேவை கமிட்டி முன், அடுத்த மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதிக்குள், கிரிதாரி, அவரது மனைவி ஆஜராகி, பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புது வாழ்க்கைக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் கிரிதாரி.

பெண்களையும் தண்டிக்க சட்ட திருத்தம் தேவை

"குடும்ப வன்முறையால் ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் போலி புகார் கொடுக்கும் பெண்கள் மீது, நடவடிக்கை எடுக்க, சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, கேரள கோர்ட் ஆலோசனை வழங்கியுள்ளது.

கேரளாவை சேர்ந்த தம்பதிக்கு 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் சிறிது காலத்துக்கு, வெளி மாநிலத்தில் வசித்தனர். கேரளாவில் உள்ள தனியார் கல்லூரியில், கணவருக்கு விரிவுரையாளர் வேலை கிடைத்தபின் இருவரும் சொந்த மாநிலத்துக்கு திரும்பினர். 1998-ம் ஆண்டு, குழந்தை பிறப்பின்மை பிரச்னைக்கு மனைவி சிகிச்சை பெற்றார். இதன் பிறகு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 2002-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மனைவிக்கு வேலை கிடைத்தது. இதற்காக அவர் சென்னை சென்றார்.

இதன் பிறகு அந்த தம்பதிகளின் வாழ்க்கையில் சிக்கல் உருவானது. 2006-ம் ஆண்டு செப்டம்பரில் அலுவல் பணி காரணமாக மனைவி வெளியூர் சென்றார். உடன் அவரது கள்ளக் காதலனும் சென்றார். இருவரும் போட்ட கும்மாளம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவன உயர் அதிகாரி மொபைல் போனில் மெசேஜ்கள் அனுப்பி கணவருக்கு தெரியப்படுத்தினார்.

இது குறித்து மனைவியிடம், கணவர் விசாரிக்க, பிரச்னை வெடித்தது. அடுத்த நாளே மனைவி தாய் வீட்டுக்குச்ன்று விட்டார். மனைவியின் கள்ளக் காதலனிடம் கணவர் விசாரித்தார். பதிலுக்கு அந்தக் கள்ளக் காதலன் அவரை ஏளனம் செய்தார். இந்த சூழ்நிலையில், வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மனைவி வழக்கு தொடுத்தார். கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் செரியன் குரியகோஸ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. மொபைல் போனில் வந்த மெசேஜ்களை கணவர் ஆதாரமாக காட்டி, தன் மீது தவறு இல்லை என்பதை நிருபித்தார்.

அந்த மெசேஜ்களை படித்துப் பார்த்த மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட புகார் போலியானது என்பதை கோர்ட் ஏற்றுக் கொள்கிறது. தனது கள்ள உறவை மறைப்பதற்காக மனைவி இது போல செய்து இருக்கிறார். குடும்ப வன்முறையால் கணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சட்டத்தின் கீழ் கணவர் மீது, போலி புகார் கொடுக்கப்படுகிறது. இந்த போக்கினால் இந்தச் சட்டமே கேலிக் கூத்தாகி விடுகிறது.

இதைத் தவிர்க்க, குடும்ப வன்முறை சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்த வழக்கில் கணவர் தான் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு உரிய நிவாரணம் அளிக்க சட்டத்தில் வழியில்லை. சட்டத்தை இயற்றுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். குடும்ப வாழ்க்கையை சிதைப்பவர்களுக்கு தண்டனை அளிக்க குடும்ப வன்முறை சட்டத்தில் வழி வகை இல்லை என்பது துரதிருஷ்டவசமானது.


இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது