இப்போதிருக்கும் நிலவரத்தைப் பார்க்கும்போது கூடிய சீக்கிறமே நம் நாட்டில் வீட்டிற்கு ஒரு 498A வழக்கு போடப்பட்டிருக்கும் நிலைமை ஏற்படும் என்று தோன்றுகிறது.
"எங்கள் வீட்டில் எல்லாமே பெண்கள்தானே! எங்கள் மேல் எப்படி அந்த வழக்கு போடமுடியும்?" என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். கீழ்க்கண்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றிற்கு உங்கள் பதில் "ஆமாம்" என்றிருந்தால் நிச்சயம் நீங்கள் 498A கேசுகளிலிருந்து தப்ப முடியாது:
- உங்கள் நண்பர், உறவினர் யார் வீட்டிலாவது ஆண் பிள்ளைகள் இருக்கிறார்களா?
- உங்கள் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் எவரேனும் திருமணம் செய்து கொண்டுள்ளார்களா? அவரோடு நெருங்கிப் பழகி அவருடைய வீட்டிற்குச் சென்று வருவதுண்டா?
- அக்கம் பக்கத்தில் எவர் வீட்டிலாவது குடும்பப் பூசல் ஏற்பட்டு அங்கு சென்று நீங்கள் எப்போதாவது அறிவுரையோ உதவியோ கொடுத்ததுண்டா?
- எந்த மணமான பெண்ணிடமாவது ஏதாவது ஒரு காரணத்தினல் தகராறு ஏற்பட்டதுண்டா?
- உங்கள் கீழ் பணிபுரியும் பெண் எவரிடமாவது கடுமையாக நடந்து கொண்டதுண்டா? அல்லது அவர்கள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்ளத் தவறியதுண்டா?
சரி, அவர்கள் கொடுக்கும் புகார் எப்படியிருக்கும்?
பதில்: எப்படி வேண்டுமானாலும் இருக்கும். அது அவர்களுடைய வக்கீலின் கற்பனைத் திறமை, இதுபோன்ற பொய் வழக்கு போட ஏதுவான சட்டங்களைப் பற்றிய அவருடைய அறிவு, புகாரில் கையெழுத்து போடும் புதுமைப் பெண்ணின் கீழ்த்தர மனப்பான்மையின் பாதாள நிலை இதைப் பொருத்து மாறும்.
மாதிரிக்கு இன்றைய தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தியை படியுங்கள்:-
பரமக்குடி,செப்.9-
மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்ட வெளிநாட்டு என்ஜினீயர் மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
என்ஜினீயர்
பரமக்குடி பவுண்டு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் ஜெயஆனந்த்(வயது 33). இவர் நெதர்லாந்தில் என்ஜினீயராக உள்ளார். இவருக்கும் திருச்சி உறையூரைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவரது மகள் சங்கீதவாணிக்கும்(26) கடந்த 6.7.2006ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 60 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே வாலிபர் ஜெயஆனந்த் தனக்கு தகுதி யில்லாத பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்று கூறி மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்தாராம். இதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் தம்பதிகள் நெதர்லாந்து சென்று விட்டனர். பின்னர் அங்கிருந்து சங்கீதவாணி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். (இந்தக் கூற்றுகளில் தெரிகின்ற முரண்பாடுகளைக் கவனியுங்கள்)
வழக்கு
இந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அதனை கணவன் உள்பட அவரது வீட்டார் யாரும் பார்க்க வரவில்லையாம். மேலும் சங்கீதவாணி யின் நடத்தை குறித்து தவறாக பேசியதுடன் கூடுதலாக பணம் மற்றும் நகை கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த சங்கீதவாணி இதுகுறித்து பரமக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதி புகார் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் வெளிநாட்டு என்ஜினீயர் ஜெய ஆனந்த், இவரது தந்தை பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



