ஒரு பெண்ணின் சோகக் கதை

நானும் பெண்தான். ஆனால் சட்டம் என்னை பெண்ணாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய சட்டங்களின் கண்களில் ஒரு ஆண்மகனின் தாயும் பெண்ணல்ல, சகோதரியும் பெண்ணல்ல.


நான் செய்த ஒரே குற்றம் ஒரு ஆணின் சகோதரியாகப் பிறந்ததுதான். ஒரு நெஞ்சில் ஈரமற்ற கொடுமைக்காரப் பெண்ணை என் அண்ணன் கைபிடித்த காரணத்தால் நான் சிறைக்குச் செல்ல நேர்ந்தது. அந்த அண்ணன் வாழ்ந்த 12 நாள் மணவாழ்க்கைக்குத் தண்டமாக அந்தப் பெண்ணிற்கு தன் சம்பளம் முழுவதையும் கொடுத்து அழுது கொண்டிருக்கிறான். சட்டம் பயின்ற அந்தப் பெண் எந்த ஒரு தொழிலும் செய்யாமல், வேலையும் பார்க்காமல் என் அண்ணனை ஒரு இலவச ஏ.டி.எம் மெஷினாக்கி பணம் பிடுங்கிக் கொட்டிருக்கிறாள். இதற்கு சட்டங்கள் துணை போகின்றன.


என்னவாயிற்று என் வாழ்க்கை? அவள் எங்கள்மேல் ஏவி விட்ட பொய்க் கேசுகளின் தாக்கத்தால் கையிலிருந்த சேமிப்பெல்லாம் போய், எங்கள் அண்னனும் சம்பாதிப்பது அனைத்தையும் அந்தப் பேயிடம் சமர்ப்பிக்கும் நிலையில் நான் ஏதோ சொற்ப ஊதியத்தில் வேலை பார்த்து என் பெற்றோரைக் காப்பாற்றி வருகிறேன்.


எனக்கு திருமணம் ஆகும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
இப்போது சொல்லுங்கள் - 498A சட்டங்களும், பெண்கள் நல வாரியங்களும், என்.ஜி.ஓக்களும் , பெண்கள் நல அமைச்சர்களும் பெண்களுக்காகவா? இல்லை பொய் வழக்குபோட்டு அதனால் ஆதாயம் பார்க்கும் முதலைகளுக்காகவா?


ஒரு பெண்ணின் ஒலங்களைக் காண இந்த வலைப்பதிவைப் படியுங்கள்.

கணவனின் வக்கீலை செருப்பால் அடித்த மனைவி


சென்னை குடும்பநல கோர்ட் வளாகத்தில் வக்கீலுக்கும், பெண்ணுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. வக்கீலை பெண் செருப்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கும் கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால், விவாகரத்து கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் காயத்ரி மனு தாக்கல் செய்தார். நீதிபதி நாராயணன் முன் நேற்று விசாரணை நடந்தது. விசாரணையை மார்ச் 16ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

கோர்ட்டை விட்டு காயத்ரி வெளியே வந்தார். கார்த்திக் சார்பில் ஆஜரான வக்கீல் பாலசுப்ரமணியனும் வெளியே வந்தார். அப்போது காயத்ரிக்கும், வக்கீலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், வக்கீல் பாலசுப்ரமணியனை காயத்ரி செருப்பால் அடித்ததாகவும், பதிலுக்கு வக்கீலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.உடனே அங்கு போலீசார் வந்தனர். அப்போது, சில வக்கீல்கள் சேர்ந்து காயத்ரியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் நிலையத்துக்கு காயத்ரி மற்றும் அவரது தந்தையை அழைத்து வந்தனர். வக்கீல் பாலசுப்ரமணியன் அளித்த புகாரில், "என்னை கொலை செய்துவிடுவேன் என காயத்ரியும், அவரது தந்தை தினகர்குமாரும் கூறினர். செருப்பால் என் கன்னத்தில் காயத்ரி பல முறை அடித்தார். சக வக்கீல்கள் என்னை விடுவித்தனர். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

காயத்ரி தாக்கப்பட்டது குறித்து புகார் கொடுக்க அவர் தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. அது சாத்தியமாகவில்லை. காயத்ரி, அவரது தந்தையை போலீஸ் நிலையத்துக்குள் வைத்திருந்தனர்.இதற்கிடையில் வக்கீல்கள் பலர், போலீஸ் நிலையம் வெளியில் திரண்டனர். வக்கீல் புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து காயத்ரி, அவரது தந்தையை போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

காயத்ரியின் முகம் வீக்கமாக இருந்தது. மாஜிஸ்திரேட் முன் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்பின், அரசு பொது மருத்துவமனையில் காயத்ரி சேர்க்கப்பட்டார்.
=====================

திறந்த கோர்ட்டில் பலர் முன்னிலையில் வக்கீலை செருப்பால் அடித்த அந்தப் பெண், மூடிய கதவுகளுக்குள் தன் கணவனையும் அவனுடைய பெற்றோரையும் என்ன பாடு படுத்தியிருப்பாள்!

இதுபோல் இந்தப் பெண்கள் நடந்து கொள்வதற்குக் காரணம் ஒருதலைப் பட்சமான சட்டங்களும், தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் அகம்பாவமான மனப்பான்மையும்தான்.

இந்த நாட்டில் ஆண்களும் அவனைப் பெற்றவர்களும் பாவப்பட்ட ஜன்மங்கள்!

ரேணுகா சவுத்திரி போன்ற பெண்கள் மந்திரியாக நீடிக்கும்வரை இந்த நிலைமை தொடரும்.

மதுபானக் கடையில் நிரம்பி மனம்போனபடி குடியுங்கள் என்கிறார் மத்திய மந்திரி

கட்டளையிட்ட அமைச்சர் - ரேணுகா சவுத்திரி. இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர்!!

அவர் அளித்துள்ள அக்கட்டளை யாருக்கு? - இளம் பெண்களுக்கு!


“பப் பரோ ஆந்தோளன்” (Pub bharao Andolan) என்று ஒன்றைக் கடைப்பிடித்து கர்நாடக மாநிலம் முழுவதுமுள்ள இளம் பெண்களை சாராயக் கடைக்குப் போய் (இதை ஸ்டைலாக “Pub" என்று அழைப்பார்கள்) இஷ்டத்திற்கு தண்ணி போட்டு கூத்தடியுங்கள்.” இத்தகைய அறைகூவலை விடுத்துள்ளார் ரேணுகா சவுத்திரி!
இப்போது நாட்டிற்கு இதுதான் தலையாய பிரச்னையா? இந்த முன்னேற்றம்தான் காந்தி கண்ட ராமராஜ்யமா?

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக அவருடைய அமைச்சகத்திற்கு சிலவு செய்யும் மக்கள் வரிப்பணம் ஆண்டு ஒன்றுக்கு 7200 கோடி ரூபாய்!

அதை வைத்துக்கொண்டு இவரும் NCW மற்றும் AIDWA உறுப்பினர்களும் மற்ற பிரச்னைகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல் மங்களூர் சாராயக் கடையில் பெண்கள் குடித்துக் கூத்தடிக்கும் உரிமையை நிலை நாட்டுவதிலேயே தங்கள் நேரம் மற்றும் மக்கள் பனத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் ஒரு விசாரணக் குழு அனுப்பினார். அப்போது வந்த அம்மையார் பாவம் எழுதிக் கொடுத்ததை படிக்காமல் கொஞ்சம் நடுநிலையாகப் பேசி தனி ஆவர்த்தனம் வாசித்துவிட்டார். அதனால் குதித்தெழுந்த இந்த ரேணுகா சவுத்திரி இன்னொரு விசாரணக் குழுவை அனுப்பியிருக்கிறார். யார் அப்பன் வீட்டுப் பணம்? இதுதான் இப்போது முக்கியமா?

அங்கே மருத்துவ மனையின் இங்குபேட்டரில் பச்சிளம் குழந்தைகள் கருகிச் செத்திருக்கின்றன.

யு.பி.யில் ஆறு வயது தலித் பெண்ணை காவல் துறையினர் சித்தரவதை செய்திருக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

அதெல்லாம் பிரச்னையாகத் தெரியவில்லை, இந்த அமைச்சருக்கு. மங்களூரில் பெண்கள் தண்ணி போடுவதுதான் நாட்டிற்குத் தலைபோகிற பிரச்னையா? அந்தப் பெண்களே பதுங்கி விட்டார்கள். இவர் சாமியாடுகிறார்.

அந்த ரேணுகா அம்மையாரின் கைவண்ணம் என்ன தெரியுமா?

498A சட்டத்தில் இதுவரை 1,23,000 பெண்கள் - அதுவும் வயதான தாய்மார்கள் விசாரணையின்றி கைதாகி சிறையிலடைக்கப் பட்டுள்ளனர். இவருடைய பிடிவாதத்தால்!

4 வயது சிறுவன் கைதாகி சிறையிலடைக்கப்பட்டான் -அவன் வரதட்சணைக் கொடுமை செய்தானாம்!

வெட்கக்கேடு!

வில்லங்க வித்யா!

(நன்றி: ஜூனியர் விகடன் 21-01-2009)


திருச்சி சோமரசம்பேட்டை வாசன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். வழக்கறிஞரான இவரை கடந்த 11-ம் தேதி இரவு வீட்டு வாசலிலேயே மர்ம நபர்கள் சிலர் சராமாரியாக வெட்டிவிட்டுத் தப்பி ஓடியிருக்கின்றனர்.

வெங்கடேஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெட்டியவர்களைத் துரத்தியிருக்கின்றனர். இந்த சமயத்தில் திருச்சி மாவட்ட எஸ்.பி-யான கலியமூர்த்தி தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்துசேர... சிதறி ஓடிய ரவுடிகளில் ஒருவன், கட்டடம் ஒன்றின் மாடியில் ஏறி பட்டாக் கத்தியைக் காட்டி எல்லோரையும் மிரட்டியிருக்கிறான். துப்பாக்கி முனையில் அவனை வளைத்திருக்கிறார்கள் போலீஸார்.
தணிகாசலம் என்ற அந்த ரவுடியிடம் போலீஸார் விசாரித்தபோதுதான் தங்களின் தலைவனாக அவன் ராஜேஷ்கண்ணா என்ற இன்னொரு வக்கீலை அடை யாளம் காட்டியிருக்கிறான். சிறிது நேரத்தில் அவரும் கைது செய்யப்பட... அடுத்தடுத்து அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோயிருக்கிறது போலீஸ் வட்டாரம்.

விசாரணை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ''ராஜேஷ்கண்ணா ஐயர், வெங்கடேஷ் ஐயங்கார். ரெண்டு பேருமே நெருக்கமான நண்பர்கள். முதல்ல வண்ணாரப்பேட்டையில் ஒரு அபார்ட்மென்டில் எதிரெதிர் வீடுகளில் வசித்தப்ப ரெண்டு குடும்பங்களும் ரொம்ப குளோஸா பழகியிருக்காங்க. வெங்கடேஷ§க்கும் வித்யாவுக்கும் கல்யாணமாகிப் பல வருஷங்களாகியும் குழந்தையில்லை. கணவரின் குறைபாட்டால்தான் குழந்தை பிறக்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்த வித்யாவுக்கும் ராஜேஷ்கண்ணாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டிருக்கு. அந்த நெருக்கம் கர்ப்பத்தில் முடிய...

வெங்கடேஷ் அப்போதைக்கு அதைக் கண்டுகொள்ளவில்லை. குழந்தை பிறந்த பிறகும் வெங்கடேஷுக்கும் ராஜேஷ்கண்ணாவுக்கும் இடையிலான தொடர்பு இன்னும் நெருக்கமாக... நண்பர்களுக்குள் தகராறு வந்திருக்கிறது. அதன் பிறகு, சோமரசம்பேட்டைக்கு வீடு மாற்றி வந்துவிட்டார் வெங்கடேஷ். இதன் பிறகும் வித்யாவின் கள்ளத்தொடர்பு தொடர்ந்திருக்கிறது.

ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் அளவுக்கு பகை வளர்ந்த நிலையில், வெங்கடேஷைப் போட்டுத்தள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார் ராஜேஷ்கண்ணா. வித்யா விடமும் கொலைத் திட்டத்தைச் சொன்னதும், அவரும் அதற்கு சம்மதித்து தன் கணவனைக் கொலை செய்ய ஒரு லட்ச ரூபாய் பணமும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

இதன் பிறகு தன் கிளையன்ட்டான தணிகாசலம் என்ற ரவுடியிடம் சொல்லி கூலிப்படையை ஏற்பாடு செய்திருக்கிறார் ராஜேஷ்கண்ணா. இந்த நேரத்தில் ராஜேஷின் மூளை இன்னுமொரு கிரிமினல் கோணத்தில் யோசித்திருக்கிறது. அவர் தந்தை கிருஷ்ணமூர்த்தியோடு அவருக்கு ரொம்ப நாளாகவே சொத்துப் பிரச்னை இருந்திருக்கிறது. இதே கூலிப்படையை வைத்து கையோடு தன் தந்தையையும் போட்டுத்தள்ள முடிவு செய்திருக்கிறார்.

அதன்படி தணிகாசலம், செல்வம், ரவி, குமார், ராதாகிருஷ்ணன் என்று ஐந்து பேர்கொண்ட கூலிப்படையை நான்கு நாட்களுக்கு முன்னதாகவே தன் தந்தை வீட்டில் தங்க வைத்திருக்கிறார். இந்தக் கூலிப்படைக்கு இரண்டு கொலைகளுக்கும் சேர்த்து ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தவர், அவர்களுக்காக ஒரு பழைய பத்மினி ஃபியட் காரையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். கூலிப்படையும் ராஜேஷின் தந்தையுடன் சந்தேகம் வராதபடி பழகியிருக்கிறார்கள். திட்டமிட்டபடியே கடந்த 11-ம் தேதி மாலையில் கிருஷ்ணமூர்த்தியுடன் மது அருந்தியிருக்கிறார்கள்.

கிருஷ்ணமூர்த்தி குடித்த மதுவில் விஷம் கலந்திருந்ததால் கொஞ்ச நேரத்தில் அவர் இறந்து விட்டார். அதன் பிறகே வெங்கடேஷை வெட்டுவதற்காக காரில் கிளம்பிப் போயிருக்கிறார்கள். ஆனால், காரியத்தை கச்சிதமாக முடிப்பதற்குள் அந்தப் பகுதியில் கூட்டம் கூடிவிடவே திட்டம் ஏடாகூடமாகி மாட்டிக்கொண்டு விட்டனர் கூலிப்படையினர். இருந்தாலும், கூலிப் படையாக வந்தவர்களில் சிலர் தப்பி ஓடிவிட்டார்கள். இப்போது கூலிப்படையைச் சேர்ந்த செல்வம், ரவி ரெண்டு பேரையும் பிடித்துவிட்டோம். குமாரையும் ராதாகிருஷ்ணனையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.

இதில் வித்யாவைப் பார்த்துத்தான் நாங்கள் மிரண்டுவிட்டோம். 'ஏம்மா, ஆசாரமான ஒரு பிராமின் குடும்பத்துப் பொண்ணு நீ... தாலி கட்டின புருஷனையே கொல்லத் துணிஞ்சிருக்கியேம்மா...' என்று அவரிடம் கேட்டோம். 'எனக்கு வெங்கடேஷ்கூட வாழப் பிடிக்கலை. ராஜேஷ்கண்ணாகூட வாழறதுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்!' என்று வெறி பிடித்த மாதிரி அவர் சொன்னது கேட்டு ஷாக் ஆகிப்போனோம்'' என்றனர்.

சம்பந்தப்பட்டிருப்பது இரண்டு வக்கீல்கள் என்றாலும், புனிதமான நீதித் துறைக்கு இதில் எந்தவிதக் கறையும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறதாம், திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம். இதற்கிடையே முக்கியமான சில வி.வி.ஐ.பி-க்கள் எவ்வளவோ பிரஷர் கொடுத்தும் கொஞ்சமும் அசராமல் ராஜேஷ், வித்யா உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்து உள்ளே தள்ளியிருக்கிறது போலீஸ்.

இந்த விவகாரத்தில் வேறொரு கோணமும் பரபரப்பாகப் பேசப்படுகிறது திருச்சி கோர்ட் வட்டாரங்களில். ''ராஜேஷ்கண்ணாவும் தன் மனைவியும் நெருங்கிப் பழகறது வெங்கடேஷுக்கு நல்லாவே தெரியும். இது ஒரு கட்டத்தில் போட்டோ, பண மிரட்டல் என்றெல்லாம் வளர்ந்தது. இதில் ராஜேஷ்கண்ணா தவித்துப் போனார். பண மிரட்டலால் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிதான் தந்தையுடன் சொத்துப் பிரச்னையாக மாறியிருக்கிறது. இதுக்கப்புறம்தான் வித்யாவும் ராஜேஷ்கண்ணாவும் கூடிப் பேசிக் கொலை செய்யுற முடிவுக்கே வந்திருக்காங்க'' என சில வில்லங்க முடிச்சுகளை அவிழ்த்தார்கள்.

இந்த விவரங்கள் குறித்து விளக்கம் கேட்பதற்காக வெங்கடேஷை சந்திக்க மருத்துவமனைக்குச் சென்றோம். அவர் ஐ.சி.யூ-விலேயே இருந்ததால் வெளியில் காத்திருந்த அவரது குடும்பத்தினர் சிலரிடம் பேசினோம். ''எங்க குடும்பம் ரொம்ப கௌரவமானது. நீங்க கேள்விப்பட்டதாகச் சொல்லும் சந்தேகங்கள் ரொம்ப அருவருப்பா இருக்கு. இப்படிப்பட்ட விஷயங்கள் எங்க குடும்பத்தில் நடக்க வாய்ப்பில்லை. தங்களோட தப்பை நியாயப்படுத்தறதுக்காக ராஜேஷ்கண்ணா தரப்புல சிலர் இப்படி கட்டுக்கதைகளைக் கிளப்பிவிடுறாங்க. மரண அவஸ்தையில் படுத்திருக்கிறவன் இதையெல்லாம் கேட்டா அப்படியே உயிரை விட்டுடுவான்!'' என்று கண்ணீர் சிந்தினார்கள்.
-------------
குறிப்பு (டோண்டு கவனத்திற்கு):-
1.மேற்கண்ட கட்டுரையில் எழுதியிருக்கும் ஐயர், அய்யங்கார், ஆசாரமான பிராமின் என்னும் ஜாதி பற்றிய குறிப்புக்கள் நான் எழுதியவை அல்ல. அவை ஜூனியர் விகடன் கட்டுரையில் இருப்பவை.
2. நேரமிருந்தால் குடும்ப நீதிமன்றம் சென்று பாருங்கள்; இதுபோல் ”ஆசாரமான” பல புதுமைப் பெண்கள், “எப்படியாவது அவங்களை உள்ள தள்ளணும். அதுக்கு எதைச் செய்யவும் தயார்” என்று வெறியோடு கூச்சலிடும் காட்சிகளைக் கண்ணாறக் காணலாம்!
3. சங்கீதா... சித்ரா... இதுபோல் ஆட்களைப் போட்டுத்தள்ளும் சுபாரி காண்டிராக்ட் வேலையில் இதுபோன்ற ஆசாரப் பெண் திலகங்கள் பெருமளவில் இறங்கிவிட்டதைக் காணும்போது, இந்தப் பெண்கள் இதை ஒரு குடிசைத் தொழிலாக நடத்துவார்கள் போலிருக்கிறதே!!

ஓடிப்போகும் பெண், ஊக்குவிக்கும் தாயார்!

கீழ்பாக்கத்தில் பரபரப்பு சம்பவம்!

ரூ.10 லட்சம் கேட்டு கல்லூரி மாணவியை கடத்தியதாக பொய் புகார்
மகள் காதலனுடன் ஓடியதை மறைத்து தாயார் நடத்திய நாடகம் அம்பலம்

சென்னை கீழ்பாக்கத்தில் ரூ.10 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவியை கடத்தியதாக பொய் புகார் கொடுப்பட்டது. மகள் காதலனுடன் ஓடியதை மறைப்பதற்காக தாயார் நடத்திய நாடகம் போலீசார் விசாரணையில் அம்பலமானது.

துணிகடை அதிபர் மகள் சென்னை கீழ்பாக்கம் பர்னபி ரோட்டைச் சேர்ந்தவர் பார்வதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை எழும்பூரில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது தந்தை பாரிமுனையில் துணி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். பார்வதி தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். நேற்று காலை 6 மணி அளவில் பார்வதி வாக்கிங் சென்றிருந்தார். காலை 10 மணி ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பார்வதியின் தாயார் தேட ஆரம்பித்தார்.

இந்த நிலையில், பார்வதியின் தாயார் தனது கணவருக்கு ஒரு தகவல் தெரிவித்தார்.

அந்த தகவலில் பார்வதி காலையில் வாக்கிங் சென்றவள் வீடு திரும்பவில்லை என்றும், வாலிபர் ஒருவர் போன் செய்து பார்வதியை கடத்தி சென்று விட்டதாகவும், ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால்தான் பார்வதியை விடுவேன் என்றும் மிரட்டுவதாகவும் கூறினார். இதை கேட்டு பார்வதியின் தந்தை அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தார்.

இதுகுறித்து கீழ்பாக்கம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் சாரங்கன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் ராஜாமணி மேற்பார்வையில், தனிப்படை போலீசார் பார்வதியை தேடினார்கள். பார்வதியின் செல்போனில் தொடர்பு கொண்டு போலீசார் பேசினார்கள்.

அப்போது பார்வதி தனது காதலனுடன் ஓடி வந்து விட்டதாகவும், மும்பைக்கு ரெயிலில் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். உடனே போலீசார் உங்களை கடத்தி சென்று விட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் திரும்பி வந்து விடுங்கள். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரின் எச்சரிக்கையை கேட்டு பார்வதி மனம் மாறினார். தனது காதலனோடு நடுவழியில் ரெயிலை விட்டு இறங்கி கார் மூலம் நேற்று பிற்பகலில் கீழ்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், நானே விரும்பி காதலனுடன் ஓடிப்போனேன் என்றும் பார்வதி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.

தனது மகள் காதலனுடன் ஓடிப்போனதை மறைப்பதற்காக பார்வதியின் தாயார் அவரது தந்தையிடம் பொய்யான தகவல் சொல்லி போலீசிலும், பொய் புகார் கொடுக்க வைத்துவிட்டார்.

பார்வதியின் தாயார் நடத்திய நாடகத்தால் கீழ்பாக்கம் போலீசார் நேற்று கடும் அவதிக்குள்ளானார்கள்.

பார்வதியின் காதலன் பெயர் கான் அப்துல்லா. மும்பையைச் சேர்ந்த இவர் சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்து இங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார்.

காதலனுடன் ஓடிப்போன பார்வதி போலீஸ் விசாரணையில், திடீரென்று மாற்றி பேசினார். காதலனோடு செல்ல விரும்பவில்லை என்றும், பெற்றோருடன் போய் விடுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் போலீசார் பார்வதியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

பொய்யான புகார் கொடுத்ததற்காக போலீசார் கடும் எச்சரிக்கையையும் விடுத்தனர். பார்வதியின் காதலரும் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார்.

செய்தி - தினத்தந்தி - சென்னை, பிப்.4- 2009.

தந்தையிடம் பேசியதற்காக குழந்தைகளுக்கு சூடு போட்டாள் தாய்

முன்குறிப்பு:

“குடும்ப வன்முறை என்பது ஆண்கள் மட்டும் செய்வது. பாதிக்கப்பட்டவ்ர் என்றால் மனைவிதான்” - இந்திய குடும்ப வன்முறைச் சட்டம்.
இப்போது செய்தி:

பள்ளிப்பாளையம், பிப்.3- 2009 - செய்தி - தினத்தந்தி

பள்ளிப்பாளையத்தில் தந்தையிடம் சென்று பேசியதற்காக குழந்தைகளுக்கு காலில் சூடு போட்டதாக தாய் மற்றும் அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் வெப்படையை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 32) விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி தனக்கோடி (30). இவர்களுக்கு தினேஷ் (10), மனோஜ் (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதகாலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலுச்சாமியின் தாயார் சரசு தனது பேரக்குழந்தைகளை ஆவலுடன் பார்க்க சென்றார்.

அப்போது அங்கு அவர்கள் தங்கள் கால்களில் தாய் சூடு போட்டதாக இருவரும் தனது பாட்டி சரசுவிடம் காண்பித்தனர். இதற்கு காரணம் என்ன என்று கேட்டதற்கு சிறுவர்கள் இருவரும் தனது தந்தையை பார்த்து பேசியதற்காக அம்மா சூடு போட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சரசு தனது மருமகள் தனக்கோடியிடம் சென்று ”ஏன் இப்படி செய்தாய்?” எனக்கூறி சத்தம் போட்டார். உடனே தனக்கோடியும், அவரது அண்ணன் தமிழரசு (35) இருவரும் சேர்ந்து ”நாங்கள் இப்படித்தான் செய்வோம். நீ யார் கேட்பதற்கு?” எனக்கூறியதாக தெரிகிறது. ”மேலும் ஏதாவது கூறினால் கம்பியால் அடித்து தொலைத்து விடுவோம்” என மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து சரசு பள்ளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சரசுவை மிரட்டியதற்காகவும், சிறுவர்களுக்கு சூடு போட்டதற்காகவும் வழக்குப்பதிவு செய்து தனக்கோடியையும், அவரது அண்ணன் தமிழரசுவையும் கைது செய்து மேற் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
------------

குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்திரி அம்மையார் இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா? அடடா, அவருக்கு இதற்கெல்லாம் நேரம் ஏது? அவர்தான் மங்களூரில் Pub-ல் தண்ணி போட்டு ஆடுவதற்கு பணக்கார இளம் பெண்களுகளின் உரிமைகளை நிலை நாட்டுவதில் பிசியாக இருக்கிறாரே!

498A சட்டம் பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் இந்தியாவின் தலைமை நீதிபதி

இதையே முன்பு இந்திய குடியரசுத் தலைவரும் கூறியுள்ளது உங்களுக்கு நினைவிருக்கும்.


சிங்கத்தின் குகையிலேயே உண்மையைப் போட்டு உடைத்துள்ள தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்களைப் பாரட்டுகிறோம்!

நம் அரசும் நிதிபதிகளும் இதுபோன்ற கொடுங்கோன்மை சட்டங்களைத் திருத்த முயல்வதை எதிர்த்துக்கொண்டு, இந்தியாவின் குடும்ப வாழ்க்கை முறையை முழுதுமாக ஒழித்துக்கட்ட கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் "தேசிய பெண்கள் ஆணையம்" (National Council for Women - NCW) 31-01-2009 அன்று நிகழ்த்திய “திருமணச் சட்டங்கள் - பிரச்னைகளும் சவால்களும்” என்பது பற்றிய கருத்தரங்கில் பேசிய இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்கள் இந்திய சமூகத்திற்கே எதிரான Sec 498A IPC பற்றி ஆணித்தரமாக “இந்தச் சட்டம் முழுதுமாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது” ("It is being grossly misused") என்று கூறி, தான் உண்மையான நீதியரசர் என்பதை நிரூபித்திருக்கிறார்!

மேலும் அவர், ”கணவன், மனைவியிடையே நிகழும் கருத்து வேற்றுமைகளுக்கும் பிரச்னைகளுக்கும் சிறிதும் தொடர்பில்லாத நபர்களைக் கூட அநியாயமாக புகார்களில் சேர்த்து அவர்களைத் துன்பப்படுத்துகிறார்கள் ("relatives not involved with a matrimonial dispute were unfairly implicated") என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆனால் இந்த கொடுங்கோன்மை சட்டத்தினால் பெருமளவு பண ஆதாயம் பெற்றுவரும் இந்த ஆணையத்தின் தலவராக இருக்கும் கிரிஜா வியாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் “இந்தச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. மக்களுக்கு போதிய அறிவு இல்லாததனால் பொய் கேசு போடுகிறார்கள். இதனால் வக்கீல்களும் போலீஸ்காரர்களும் தவறான ஆதாயம் பெறுகிறார்கள். ஆனால் இந்தச் சட்டத்தைத் திருத்த அவசியமில்லை” என்று கூறியிருக்கிறார்.

இந்த ஆணையம் நம்முடைய வரிப்பணத்தைக் கொண்டு நடத்தப்படும் ஆணையம். நம் பணத்தைக் கொண்டு நம் ரத்தத்தையே உறிஞ்சுகின்றது இந்த நச்சுப்பாம்பு!!

தலைமை நீதிபதி மேலும் பேசுகையில் “இதுபோன்ற சட்ட துஷ்பிரயோகத்தை அறிந்துதான் சமீபத்தில் குற்றவியல் செயல்பாட்டு நெறிமுறை (CrPC) திருத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு நல்ல சட்டத் திருத்தம். காவல் துறையினர் தகுந்த காரணமில்லாமல் கைது நடவடிக்கை எடுப்பதை இது நிறுத்திவிடும். பொய் கேசுகளில் கைது செய்வதையும் இது தடுக்கும். இது சமூகத்திற்கு நல்லது.” என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்.

இந்த சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்று அமுலுக்கு வந்துவிட்டது. ஆனால் இதையும் அந்த கிரிஜா வியாஸ் எதிர்த்திருக்கிறார்.
ஏன்?

சிம்பிள்! இவர்கள் அடித்து வரும் பகல் கொள்ளை நின்றுவிடுமே என்கிற கிலி அய்யா! மக்களின் நல்வாழ்வைப்பற்றி இவர்களுக்கு என்ன கவலை. பல கனவுகளுடன் குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைக்கும் பெண்களின் மனத்தில் விஷ வித்தை விதைத்து இதுபோன்ற பொய் கேசுகளைப் போட வைத்து கணவன் மற்றும் அவர்களுடைய குடுமபத்தினர் மட்டுமின்றி, புகார் கொடுத்த பெண்களின் மணவாழ்க்கையையும் சீரழித்து இந்நாட்டை அந்நிய சக்திகளுக்கு அடிமைப் படுத்தும் கேடுகெட்ட முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் இக்கெடுமதியினர்.

பெண்களைப் பற்றி இவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் கீழ்மட்ட சமுதாயத்தினருக்கு ஏதேனும் செய்யட்டுமே.