மகளிர் கட்டப்பஞ்சாயத்து போலீஸ்!

குங்குமம் கட்டுரை - 31-07-2008 இதழ்











கட்டுரை முழுதையும் பி.டி.எஃப் (PDF) கோப்பாக டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

80 வயது தாத்தா வரதட்சிணை கொடுமை செய்தாராம்!

வரதட்சணை கொடுமை வழக்கில் மதுரை பல் மருத்துவர் கைது

தூத்துக்குடி - ஜூலை 28,2008 :: செய்தி - தினமலர்

மனைவியிடம் ஐந்து லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய வழக்கில் மதுரை பல் மருத்துவர், அவரது தாயாரையும் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் சக்தி தேவி (27) க்கும் மதுரை அண்ணாநகர் பல்மருத்துவர் பிரவீண் குமாருக்கும்(30), கடந்த ஆண்டு ஆக., 27ல் திருமணம் நடந்தது. வரதட்சணையாக 80 சவரன் நகை பிரவீண் குமாருக்கு தரப்பட்டது.

இந்நிலையில் கிளினிக் கட்டுவதற்கு பிரவீண்குமார், மனைவி சக்திதேவியை அவரது பெற்றோரிடம் கூடுதலாக ஐந்து லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வரும்படி வற்புறுத்தினார்.அதற்கு சக்திதேவி மறுக்கவே, இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் வரதட்சணை கேட்டு பிரவீண்குமார் மற்றும் குடும்பத்தார் தன்னை துன்புறுத்துவதாக சக்திதேவி தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். பிரவீண்குமார், அவரது தாயார் விஜயலட்சுமி(55) ஆகியோரை நேற்று கைது செய்த போலீசார், பிரவீண்குமாரின் தாத்தா சண்முகத்தை(80 வயது) தேடி வருகின்றனர்.
---------------------------

மதுரைவாழ் அன்பர்கள் யாரேனும் அந்த பல்வைத்தியர் பிரவீண் குமார் தரப்பு செய்தியை அறிந்து இங்கு மறுமொழியாக எழுதும்படி வேண்டுகிறேன் (தமிழில் எழுத இயலாவிடில் ஆங்கிலத்திலும் எழுதலாம்).

நன்றி.

பெரிய இடத்து சம்பந்தம் ஆபத்துதான்!

ஐ.ஏ.எஸ் அதிகாரி, அரசியலில் பெரிய செல்வாக்குள்ள குடும்பம் என்று தெரிவு செய்து அவர்கள் வீட்டுப் பெண்ணை மணந்து கொண்டால் ஆண்களுக்கும், அவர்கள்தம் பெற்றோருக்கும் என்ன கதி காத்திருக்கிறது என்பதற்கு இந்த தினமலர் செய்தி ஒரு படிப்பினையாகும்:

ஐ.ஏ.எஸ்., அதிகாரி சம்பந்திக்கு முன்ஜாமீன்

ஜூலை 24,2008

சென்னை:ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மகள் கொடுத்த வரதட்சணை புகாரில், அவரது மாமனார், மாமியாருக்கு சென்னை ஐகோர்ட் முன்ஜாமீன்
வழங்கியது.

முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியனின் மகள் வினோதினி. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தனது கணவர் அரவிந்த் மீது
சென்னை அசோக் நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அரவிந்த் கைது செய்யப்பட்டார்.

முன்ஜாமீன் கோரி அரவிந்தின் தந்தை நடராஜன், தாயார் தனலட்சுமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

வினோதினிக்கும், அரவிந்துக்கும் 1997ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. எனது மகனை திட்டிவிட்டு, தனது பெற்றோர் வீட்டுக்கு வினோதினி சென்றுவிட்டார். பின்னர் அவரது தந்தை எங்களை மிரட்டினார். கடந்த 15ம் தேதி விவாகரத்து நோட்டீசை வினோதினிக்கு அரவிந்த் அனுப்பினார். அதன்
பிறகே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உள் நோக்கம் கொண்டு, பொய்யான புகாரை கொடுத்துள்ளார்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை நீதிபதி ரகுபதி விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் அபுடுகுமார் ராஜரத்தினம் வாதாடினார். இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி யும், தேவைப்படும்போது அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்

--------------------------------

இதற்கு முந்தைய செய்தி:

ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மருமகன் வரதட்சணை
கொடுமை வழக்கில் கைது
ஜூலை 21,2008,00:00 IST

சென்னை : ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மருமகன்,
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில் கைது
செய்யப்பட்டார்.

சென்னை தி.நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன் மகள் டாக்டர் வினோதினி ராஜேஸ்வரி(33). இவருக்கும், தி.நகர் நடேசன் சாலையைச் சேர்ந்த இன்ஜினியர் அரவிந்த்(37) என்பவருக்கும் 1997ம் ஆண்டு திருமணம் நடந்தது. 200
சவரன், நான்கு லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் சீர் வரிசைகள் செய்து திருமணத்தை கற்பூர சுந்தரபாண்டியன் நடத்தினார்.

திருமணம் முடிந்ததில் இருந்தே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. அவர்களுக்கு ஏழு வயதில்
பெண் குழந்தை உள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக கணவரை
பிரிந்து தனியாக வாழ்கிறார் வினோதினி ராஜேஸ்வரி.

அசோக் நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் வினோதினி ராஜேஸ்வரி, "திருமணத்திற்கு பிறகு எனது கணவர் புது கார், அபார்ட்மென்ட் வீடு கேட்டார். திருமணத்திற்கு அதிகளவில் செலவானதால் அவர்கள் கேட்டதை எனது தந்தையால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. நள்ளிரவில் வீட்டிற்கு வரும் எனது கணவர், உடன் நண்பர்களை அழைத்து வந்தார். குடித்துவிட்டு அடித்து உதைத்தார். அவரை பிரிந்துச் சென்ற பின்பும் எனக்கு கொலை மிரட்டல்கள் வரத் துவங்கின" என புகார் கொடுத்தார்.

அசோக் நகர் உதவி கமிஷனர் சேது தலைமையிலான போலீசார், இன்ஜினியர் அரவிந்திடம் விசாரணை நடத்தினர்.

கணவன், மனைவி இருவரையும் நேரில் அழைத்து தொண்டு நிறுவன பெண் சாந்தி என்பவர் கவுன்சிலிங் கொடுத்தார்.

"குழந்தையின் நலன் கருதி மனைவியுடன் சேர்ந்து வாழ்கிறேன்" என, அரவிந்த் கூறினார்.

"என்னுடன் சேர்ந்து வாழ்வதாக பொய் சொல்லும் அரவிந்த் அவரது பெண் தோழிகளுடன் நெருக்கமாக பழகுகிறார். கணவருடன் சேர்ந்து வாழ மாட்டேன்" - என வினோதினி ராஜேஸ்வரி கூறினார்.

கணவன் மீது சுமத்திய குற்றச்சாட்டில் வினோதினி ராஜேஸ்வரி உறுதியாக இருந்ததால், அரவிந்த் மீது பெண் கொடுமை தடுப்பு, வரதட்சணை தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்ட அரவிந்த், சிறையில் அடைக்கப்பட்டார். அரவிந்த் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர் ஹரி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரதட்சணை வழக்கில் மாஜிஸ்திரேட் மனைவி கைது

கோவை : வரதட்சணை கொடுமை வழக்கில், மாஜிஸ்திரேட் மனைவி சிறையில் அடைக்கப்பட்டார்.

வடமதுரை, குருந்தாச்சல் நகர் ரங்கம்மாள் கார்டனைச் சேர்ந்தவர் ஜக்கிரியா (வயது: 30), 2004-ல் ஜமீலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின், கணவர் ஜக்கிரியாவும், குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு ஜமீலாவை துன்புறுத்தியதாக ஜமீலா கோவை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதில், கணவர் ஜக்கிரியா, மாமியார் குளோரி, கணவரின் அக்கா ரோஜா ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று ரோஜாவை கைது செய்தனர். ஜே.எம்.எண் மூன்றாம் கோர்ட் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ரோஜா, 15 நாள் நீதிமன்ற காவலுக்காக மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ரோஜா, மாஜிஸ்திரேட் ஒருவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

~ செய்தி - தினமலர் ஜூலை 19,2008

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து இப்போது ஒரு மாஜிஸ்டிரேட் மனைவியையே தீண்டிவிட்டது இந்த 498a வரதட்சிணைச் சட்டம்!

கணவருக்கு 'ஜீவனாம்சம்' ரூ.8 லட்சம் தந்த மனைவி

படிக்க வைத்த கணவருக்கு மனைவி ரூ.8 லட்சம் நஷ்டஈடு வழங்கினார்.
சென்னையில் நடந்த விவாகரத்து வழக்கில் கோர்ட்டு தீர்ப்புபடி நடவடிக்கை.
~ செய்தி: தினத்தந்தி சென்னை, ஜூலை.18, 2008
விவகாரத்து வழக்குகள்:
சென்னையில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் விதவிதமான முறையில் தற்போது விவாகரத்து வழக்குகள் வருகின்றன. கணவர் கொடுமைப் படுத்தியதாக மனைவியால் தொடரப்படும் வழக்கு, காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளில் மனைவி, கணவன் சந்தேகப்படுவதால் விவாகரத்து வழங்க வேண்டும் என்று தொடரப்படும் வழக்குகளும் அதிகரித்து வருகின்றன.
சாதாரணமாக படிப்பு குறைவாக உள்ள குடும்பத்தில் இருந்து இதுபோன்ற வழக்குகள் அதிகம் வருவதில்லை. அதிகம் படித்து, அதிகம் சம்பளம் பெறுவோர் இடையேதான் இதுபோன்ற வழக்குகள் தொடரப்படுகின்றன.
இதுபோன்ற வழக்குகள் அதிகரித்து வருவதால், சென்னையில் கூடுதலாக 2 குடும்ப நல கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என்று பெண்கள் வக்கீல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மனைவியை படிக்க வைத்தார்
சென்னை குடும்ப நல கோர்ட்டில் வித்தியாசமான வழக்கு ஒன்று வந்தது. சென்னையை சேர்ந்த பட்டதாரி பெண்ணும், ஆந்திராவை சேர்ந்த பட்டதாரி வாலிபரும் ஒருவரையருவர் நேசித்தனர். இவர்களுடைய நேசம் காதலாக மலர்ந்து இறுதியில் 2000-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். பட்டதாரியான தனது மனைவியை பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு படிக்க கணவர் என்ற முறையில் தேவையான உதவிகளை செய்துவந்தார். அந்த பெண்ணும் கணவர் விருப்பத்திற்கு ஏற்ப வெற்றிகரமாக அந்த படிப்பை முடித்தார். அவருக்கு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர் பதவி கிடைத்தது.
கணவருக்கு 8 லடசம்- கோர்ட்டு தீர்ப்பு
இருவரும் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். காலப்போக்கில் அவர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இதனால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பிரிந்து வாழும் அவர்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இவர்களது விவாகரத்து வழக்கை, சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டு நீதிபதி விமலா விசாரித்தார்.
விசாரணையின் போது, எனது மனைவியை படிக்க வைக்க நான் படாதபாடு பட்டேன் என்று தெரிவித்தார். இறுதியில் தன்னை படிக்க வைத்ததற்காக கணவருக்கு ரூ.8 லட்சம் வழங்க மனைவி சம்மதித்தார். இதை கோர்ட்டு ஏற்று இருவருக்கும் விவாகரத்து செய்து வைத்தது.

விவாகரத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள் நலன்

பெற்றோரின் விவாகரத்தால் பிள்ளைகளின் எதிர்காலம், மனநிலை பாதிக்கப்படுவது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தங்களுடைய சொந்த விருப்பு, வெறுப்புகளால் கணவன் & மனைவி விவாகரத்து செய்து விடுகின்றனர். ஆனால், பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படுவது இல்லை.

பெற்றோரின் விவாகரத்தால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்பது, பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு கடந்த 1958ல் பிறந்து 50 வயதை நெருங்கிவிட்ட 17 ஆயிரம் பேரின் வாழ்க்கையை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். அந்த காலக் கட்டத்தில் விவாகரத்து குறைவு என்றாலும், விவாகரத்து செய்த தம்பதிகளின் பிள்ளைகள் படிப்பிலும் மனநிலையிலும் பாதிப்பு தெரிந்தது.

அதேபோல், விவாகரத்து என்பது மிகவும் சகஜமாகி விட்ட 1970க்குப் பிறகு பிறந்த பிள்ளைகளின் மனநிலையையும் ஆய்வாளர்கள் கண்காணித்தனர். இவர்களிலும் பெற்றோரின் விவாகரத்தை சந்தித்த பிள்ளைகளின் மனநிலை, படிப்பு போன்றவை பாதிக்கப்பட்டு, சமூகத்தில் பின்தங்கிய நிலையிலேயே அதிகம் பேர் இருந்தனர்.

இதன் மூலம், ஆண்டும் வயதும் வேறுபட்டாலும் பெற்றோரின் விவாகரத்தால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பு ஒரே மாதிரி இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

செய்தி: தினகரன் 15.07.2008

மாமியாரையும் கணவனையும் கொன்ற மனைவிக்கு ஆயுள் தணடனை

செய்தி: தினமலர் - ஜூலை 15,2008

திருவள்ளூர் : மாமியாரையும், கணவனையும் கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவிமற்றும் கள்ளக்காதலனுக்கு விரைவு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சென்னை மாதவரம் பால் பண்ணை அசிசி நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் அருள்நாதன் (42). தனியார் தொண்டு நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மேரி சேவியர் (32). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அருள்நாதனுடன் அவரது தாய் சவரியம்மாள் (80) வசித்து வந்தார். அவர்களது சொந்த கிராமத்தில் வேலை இல்லாமல் இருந்து வந்த அருள் நாதனின் அண்ணன் மகன் டேவிட் ஆரோக்கியராஜ் (26) என்பவரை அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்தார்.

கம்ப்யூட்டர் நிறுவனமொன்றை டேவிட் துவங்கினார். அங்கு கம்ப்யூட்டர் பயிற்சி பெற ஆசிரியை மேரி சேவியர் சென்று வந்தார். அப்போது, அவர்களுக்குள் கள்ள உறவு ஏற்பட்டது. இதை அறிந்த அருள் நாதனின் தாய் அவர்களை கண்டித்தார். தனது மகனிடமும் இதுகுறித்து தெரிவித்தார். அருள்நாதனும் மனைவியையும், டேவிட்டையும் கண்டித்தார். இதனால், ஆத்திரமடைந்த மனைவியும், டேவிட்டும் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டனர்.

இந்நிலையில், 2006ம் ஆண்டு மே 26ம் தேதி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சவரியம்மாள் இறந்ததாக கூறி, பிணத்தை அவரது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டி நாயக்கன்பள்ளிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். அதன் பிறகு அடுத்த மாதம் 16ம் தேதி அதிகாலை அருள்நாதன் காயங்களுடன் இறந்தார்.

இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கணவனை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளை அடித்துச் சென்று விட்டதாக மேரி கூறினார். ஆனால், போலீசார் விசாரணையில், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது தெரிந்தது. மேலும் விசாரணையில், மேரியும், டேவிட்டும் சேர்ந்து தான் அருள்நாதனை கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் அருள் நாதனின் சகோதரர் ராயப்பன் என்பவர் போலீசில் தனது தாய் சவரியம்மாள் சாவில் மர்மம் உள்ளதாகவும் விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தார்.

இதை அடுத்து போலீசார் சவரியம்மாள் புதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று அங்கு அதிகாரிகள் முன்னிலையில் பிணத்தைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பிணத்தின் தலையில் ஆழமான காயம் இருப்பது தெரிந்தது. இதை அடுத்து மீண்டும் மேரி மற்றும் டேவிட் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தான் திட்டமிட்டு சவரியம்மாளை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். டேவிட்டின் சித்தி தான் மேரி சேவியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை அடுத்து மாமியார் மற்றும் கணவனை கொலை செய்த வழக்கில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இவ்வழக்கு நீதிபதி சேகர் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட டேவிட் ஆரோக்கியராஜ் மற்றும் மேரி சேவியர் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் மாதவரம் பால் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜோசப் மற்றும் அசோகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அரசு தரப்பு வக்கீல் ஸ்ரீதர் ஆஜராகி வாதாடினார்